|
சிறிலங்கா சனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகிவிட்டன. நாளை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இடம்பெற்று நாளை மறுதினம் பெரும்பாலும் யார் சிறிலங்காவின் புதிய சனாதிபதி என்பது தெரியவந்துவிடும்.
இத்தேர்தலில் விடுதலைப் புலிகள் எத்தகைய பங்கும் வகிக்காது தமிழ் மக்களின் முடிவிற்கே விட்டுவிட்டனர். அதாவது இரு பிரதான வேட்பாளர்களின் நிலைப்பாடும் இனப் பிரச்சினை குறித்த விடயத்தில் முன்னேற்றகரமானதாக இல்லை என்ற ரீதியில் விடுதலைப் புலிகள் தேர்தலில் இருந்து ஒதுங்கி முடிவைத் தமிழ் மக்களே எடுக்கட்டும் என விட்டுவிட்டனர். ஆனால் தெளிவான அரசியல் விழிப்புணர்வு கொண்ட தமிழ் மக்களின் தற்போதைய நிலைப்பாடு தேர்தலைப் பகிஷ்கரிப்பதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில் தமிழர் தாயகத்திலுள்ள பெரும்பாலான பொது அமைப்புக்கள் தேர்தலைப் புறக்கணிக்குமாறு அறிவிப்புச் செய்துள்ளன. அதன் பிரகாரம் சிறிலங்கா சனாதிபதி வேட்பாளர்கள் எவருமே நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகவோ தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு எதையும் முன்வைப்பவர்களாகவோ இல்லை என்பதே பொது அமைப்புக்கள் மக்கள் சார்பில் தெரிவிக்கும் அபிப்பிராயமாகவுள்ளது. ஆகையினால் தமிழ் மக்களின் பகிஷ்கரிப்பின் மத்தியிலேயே பெரும்பாலும் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்கா ஆயுதப்படையுடன் இயங்கும் ஈ.பி.டி.பி போன்ற இனவிரோதக்குழுக்கள் தேர்தல் மோசடியில் ஈடுபடுவதற்கு வாய்ப்புண்டு. இதனை வலியுறுத்துமாப்போல் தேர்தல் மோசடிகள் நடைபெறலாமென ஐ.தே.கட்சியும் எச்சரித்துள்ளது. ஐ.தே.கட்சியின் உறுப்பினரும், முன்னாள் இராணுவ அதிகாரியுமான சரத் முனசிங்க தப்பியோடிய படையினரைக் கொண்டு யாழ். குடாநாட்டில் தேர்தல் மோசடியில் ஈடுபட மகிந்த ராஜபக்ச தரப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. ஆனால் எது எவ்வாறு இருப்பினும், அதாவது தமிழ்மக்களின் தேர்தல் பகிஷ்கரிப்பு, தேர்தலின் போது மேற்கொள்ளப்படும் மோசடிகள் என்பனவற்றையும் கடந்து சனாதிபதித் தேர்தல் நடைபெறுவதும். அதில் புதிய சனாதிபதி தெரிவு செய்யப்படுவதும் தடையின்றி நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையினால் நாளை மறுதினம் ரணில் விக்கிரமசிங்கவா? மகிந்தராஜபக்சவா? அடுத்த சனாதிபதி என்பது தெரியவந்துவிடும். ஆனால் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் இனப்பிரச்சினை குறித்து உடனடியாகவே முடிவொன்றை மேற்கொள்ளல் வேண்டும். அதாவது தமிழ் மக்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தார்கள் என்பதற்காகவோ, விடுதலைப் புலிகள் தேர்தலில் பங்காற்றவில்லை என்பதன் காரணமாகவோ இனப்பிரச்சினைக்கான தீர்வு தாமதப்படுத்தப்படக்கூடிய தொன்றாக இருக்கமுடியாது. இனப்பிரச்சினை விடயத்தில் ரணில் விக்கிரமசிங்கவும் சரி, மகிந்த ராஜபக்சவும் சரி தமிழ்மக்கள் குறித்த சரியான நிலைப்பாட்டை மேற்கொள்ளவில்லை என்பதன் காரணமாகவே தேர்தலைப் பகிஷ்கரித்தனர். இதேவேளை மகிந்தராஜபக்சவின் தீர்வு குறித்த யோசனைக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது மகிந்த ராஜபக்ச இனப் பிரச்சினைக்கு ஒற்றையாட்சி முறைக்கு உட்பட்டதாகவே இனப்பிரச்சினைத் தீர்வு இருக்க முடியும் எனக் கூறுகின்றார். ரணில் விக்கிரமசிங்க சமஷ்டி முறையிலான தீர்வுக்கு உடன்படுவது போன்று கூறிக்கொண்டாலும் அது குறித்த தெளிவானதும் உறுதியானதுமான நிலைப்பாட்டுடன் எவரும் இல்லை. ஆகையினால் இருதரப்புமே இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தெளிவான கருத்தோ, ஒருமித்த முடிவோ கொண்டவர்களாக இல்லை. ஆனால் தேர்தல் முடிவின் பின்னர் இத்தகையதொரு நிலைப்பாட்டுடனேயே இவர்கள் செயற்படுவார்களேயானால் விரைவிலேயே யுத்தம் தவிர்க்கமுடியாததாகிவிடும். ஆகையினால் தேர்தலில் வெற்றிபெறுபவர்கள் யாராகிலும் சரி, இனப்பிரச்சினை குறித்த தீர்மானத்திற்கு உடனடியாக வருதல் வேண்டும். அத்தகைய முயற்சியில் ஈடுபடுபவர்கள் எவ்வாறு இனப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணவேண்டும் என எண்ணுகின்றனரோ அதேபோன்று பின்வரும் விடயங்களிலும் அக்கறை கொண்டவர்களாக, நடைமுறைப்படுத்துபவர்களாக இருத்தல் வேண்டும். ஏனெனில், இதுவே சமாதான முயற்சிகளுக்கான குறைந்தபட்ச வழிமுறையாக இருக்கமுடியும். 1. மறைமுகப்போரை உடனநிறுத்தல் வேண்டும். 2. யுத்தநிறுத்த உடன்பாடு சீராக அமுலாக்கப்படுதல் வேண்டும். 3. பேச்சுவார்த்தைகள் உடன் ஆரம்பிக்கப்படுதல் வேண்டும். 4 இடைக்காலத்தன்னாட்சி அதிகாரசபை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும். இன்று சமாதானப் பேச்சுவார்த்தைகள் மட்டுமன்றி யுத்த நிறுத்தமும் பெரும் கேள்விக்குள்ளாகியுள்ளமைக்கு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் மறைமுகப்போரே காரணமாகும். இது இன்று யுத்த நிறுத்தத்தைச் சிதைக்கும் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. இம்மறைமுகப் போருக்கு அரசாங்கம் தனது இராணுவத்துடன் துணைப்படைகளாக இயங்கும் தமிழ்க் குழுக்களைப் பயன்படுத்தி வருகின்றது என்பது வெளிப்படையானது. இதனை அரசாங்கம் எந்தளவிற்கு மறுத்துரைப்பதாக இருப்பினும் இது உண்மையென உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இராணுவத்துடன் துணைப் படைகளாக இயங்கும் ஆயுதக்குழுக்களினாலேயே யுத்த நிறுத்தம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது என்பதைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவும், சர்வதேச நாடுகளுமே ஊர்ஜிதம் செய்வதாகவுள்ளன. இந்நிலையில் புதிய சனாதிபதியாக யார் பதவிக்கு வந்தாலும் அவர் உடனடியாக இக்குழுக்களின் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் எதிர்காலத்திலும் சமாதானம் என்பது கேள்விக்குள்ளாகிவிடும். வன்முறைகள் நிறுத்தப்பட முடியாதவை ஆகிவிடும். அடுத்ததாக யுத்தநிறுத்த உடன்பாட்டை அமுல் செய்வதற்கு அரசாங்கம் உடன் முன்வருதல் வேண்டும். அதாவது யுத்த நிறுத்த உடன்பாடு கைச்சாத்தாகி மூன்றே முக்கால் வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் அதன் அமுலாக்கம் என்பது கேள்விக்குரியதொன்றாகவே உள்ளது. அதாவது சிறிலங்கா அரசும், ஆயுதப்படைத்தரப்பும் அவற்றை ஏதோ ஒருவகையில் தட்டிக் கழித்த வண்ணமே உள்ளன. இதன் காரணமாக யுத்தநிறுத்தத்தின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. ஆகையினால் யுத்த நிறுத்த உடன்பாடு பாதுகாக்கப்படுதல் வேண்டும். சமாதான முயற்சிகள் தொடரப்பட வேண்டுமானால் யுத்த நிறுத்தம் உடனடியாக அமுலாக்கம் பெறவேண்டும். குறிப்பாக வடக்கு-கிழக்கிலுள்ள துணை இராணுவக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும், உயர்பாதுகாப்பு வலயம் எனக்கூறி சிறிலங்கா இராணுவமும் ஏனைய ஆயுதப்படையினரும் ஆக்கிரமித்துள்ள நிலங்களையும், தனியார் சொத்துடமைகளையும் உடனடியாக மக்களிடம் கையளிக்க வேண்டும், கடற்றொழில் உட்பட அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி அனுமதி அளித்தல் வேண்டும். அப்பொழுதே மக்கள் யுத்த நிறுத்த உடன்பாட்டில் கூறப்பட்டதான இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புதல் முடியும். இதேவேளை மகிந்த ராஜபக்ச சனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவாரேயானால் அவர் கூறிக்கொள்வது போன்று யுத்த நிறுத்த உடன்பாட்டை மறுபரிசீலனை செய்தல் என்பது சாத்தியப்பாடான தொன்றாக இருக்கப்போவதில்லை. அதாவது தற்போதைய யுத்தநிறுத்த உடன்பாடானது மாற்றியமைக்;கப்பட தேவை எதனையும் கொண்டதாக இல்லை. இன்று யுத்த நிறுத்தம் கேள்விக்குள்ளாகியுள்ளமையானது யுத்த நிறுத்த உடன்பாட்டில் உள்ள தவறினால் அல்ல. யுத்த நிறுத்தத்தைச் சீரான முறையில் அமுலாக்க அரசு தயாராக இல்லாமையினாலேயே ஆகும். இதற்கு அடுத்ததாக உடன் ஆரம்பிக்கப்பட வேண்டியது சமாதானப் பேச்சுவார்த்தையே ஆகும். இப் பேச்சுவார்த்தையானது ஏற்கனவே இடம்பெற்றது போன்று- நடு நிலையான வெளிநாடு ஒன்றில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதோடு- சமாதான ஏற்பாட்டாளர்களான நோர்வேத்தரப்பினரதும் அனுசரணையையும் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். நோர்வேத்தரப்பிற்கு சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கான அழைப்பினை உடனடியாக விடுத்தல் வேண்டும். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளில் ஏற்பட்ட பின்னடைவால் நோர்வேத்தரப்பு சற்று விரக்தியுற்றதோடு, தமது செயற்பாடுகளையும் இடைநிறுத்தியது போன்றதொரு நிலையிலேயே உள்ளது. அது மட்டுமன்றி நோர்வேயினதும் புதிய அரசாங்கம் பதவி ஏற்றுள்ளமையாலும், நோர்வேத்தரப்பு யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதிலும் நோர்வே ஏற்பாட்டாளர்களை மீளவும் செயற்படுமாறு அழைப்புவிடுக்கப்படுதல் வேண்டும். இதற்கு அடுத்ததாக அரசாங்கம் விடுதலைப் புலிகள் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தத் தயாராக வேண்டும். ஏனெனில் யுத்த நிறுத்தம் அமுலாகி நான்கு வருடங்களை எட்டும் நிலையிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு பணிகள் மேற்கொள்ளப்படாமையால் மக்கள் பெரும் இன்னல்களுக்குள்ளாகியுள்ளனர். ஆகையினால் உடனடியாகப் புனர்வாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுதல் அவசியமானதொன்றாகும். ஆகையினால் இது குறித்துப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படாது போனால் யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பது என்பது அர்த்தமற்றதொன்றாகிவிடும். இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை குறித்த பேச்சுவார்த்தை மகிந்த ராஜபக்ச சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் நிராகரிக்கக்கூடும். இது தமது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மாறானதெனக் கூறக்கூடும். அவரது கூட்டணியினரும் இவற்றை ஆதரிக்கக்கூடும். இதேவேளை ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டால்; பேச்சுவார்த்தை மேலும் இழுத்தடிக்கவும் புதிய தடைகளை உருவாக்கக் கூடும். ஆனால் இவற்றிற்குச் சந்தர்ப்பமோ வாய்ப்போ அளிக்கக் கூடிய வகையில் தமிழ் மக்கள் இல்லை என்பதே இன்றைய அரசியல் யதார்த்தமாகும். ஏனெனில், தமிழ் மக்களின் பொறுமை எல்லை கடந்ததாகியுள்ளது. ஆகையினால் குறைந்த பட்சம் புதிய சனாதிபதியால் மேற்கூறப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகிறது. சுருக்கமாகக் கூறுவதானால் சனாதிபதித் தேர்தலில் யார் வென்றாலும் அது பற்றித் தமிழ் மக்களுக்கு எதுவித மகிழ்ச்சியோ, துயரமோ கிடையாது. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்து தேர்தலில் வெற்றி பெறுபவர் முக்கிய முடிவுகள் சிலவற்றிக்கு வந்தாக வேண்டும் என்பதே. அதாவது மறைமுகப் போரை நிறுத்தி யுத்த நிறுத்த உடன்பாட்டை அமுலாக்கிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கி இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைகுறித்த தீர்மானத்திற்கு உடன் வருதல் அவசியமானதாகும். தற்போதைய சூழ்நிலையில்- அதாவது யுத்த நிறுத்த உடன்பாடு செய்துகொள்ளப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவு நெருங்கிக் கொண்டிருக்கையில் மீண்டும் யுத்த நிறுத்த உடன்பாடு பற்றியும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் பற்றியும் பேசிக்கொண்டிருப்பது காலம் கடந்ததெனினும் புதியவர்கள் தமக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும். இதனைக் கருத்திற் கொள்ளாது- புதிய ஆட்சியாளர்கள் என்ற அடிப்படையில் புதிய அணுகுமுறைகள், நடைமுறைகள் எனக்கூறிக் காலம் தாழ்த்துவதும், இழுத்தடிப்புச் செய்வதும் புதிய குழப்பங்களைத் தோற்றுவிப்பதும், அவற்றைத் தமது கொள்கைக் கோட்பாட்டிற்குட்பட்டதாகக் கூறிக்கொள்ள முனைவதும் இனப்பிரச்;சினைத் தீர்விற்கும் வழிவகுக்காது. இலங்கையின் அமைதிக்கும் உதவமாட்டாது.
ஜெயராஜ்
|