|
இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையே தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதே போன்று குறுகிய விகிதாசார அடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிவாகை சூடியுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினமான 18 ஆம் திகதி, மக்கள் அவருக்கு மிகவுயர்ந்த பரிசாக ஜனாதிபதி பதவியை வழங்கியுள்ளனர். அதற்குப் பிரதியுபகாரமாக அவர் மக்களுக்கு என்ன செய்யப்போகின்றார் என்பதை இனி வரும் காலங்களே பதில் கூற வேண்டும். தேர்தல் முடிவுகளின்படி பார்த்தால், தென் பகுதி மற்றும் பெரும்பான்மை சிங்கள மக்கள் தங்கள் வாக்குகளை பிரதமருக்கு வாரி வழங்கியுள்ளனர். அதேவேளை சிறுபான்மை மக்கள் தங்கள் வாக்குகளை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு பெருமளவு வழங்கியுள்ளனர். அதேவேளை, வடகிழக்கில் இராணுவ கட்டுப்பாடற்ற பகுதி மக்கள் வாக்களிப்பில் ஈடுபடாமல் தேர்தலை முற்றாகப் புறக்கணித்து விட்டனர். இதனால் கணிசமான அளவு வாக்குகள் எவருக்கும் கிட்டாமல் போய்விட்டது. இதுவரை நடந்து முடிந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இத்தேர்தலிலேயே சிறுபான்மை மக்களின் பங்களிப்பு குறைந்த நிலையில் ஜனாதிபதியொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்தல் விஞ்ஞாபனத்துக்கமைய இரு பிரதான வேட்பாளர்களின் கொள்கைகள், கோட்பாடுகள் என்பவற்றை நன்கு சீர் தூக்கிப் பார்த்து மக்கள் இந்தத் தீர்வை வழங்கியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 1970 ஆம் ஆண்டு தனது 24 ஆவது வயதில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டி முதன் முதலில் அரசியலில் பிரவேசித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினரான டி.ஏ. ராஜபக்ஷவின் புதல்வரான மஹிந்த ராஜபக்ஷ 1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி பிறந்தவராவார். இவர் தனது ஆரம்பக் கல்வியை காலி ரிச் மண்ட் கல்லூரியிலும் பின்னர் நாலாந்தா, தேர்ஸ்டன் ஆகிய கல்லூரிகளிலும் பயின்றதுடன் சட்டத்தரணியாக தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து இவர் தனது அரசியல் வாழ்வில் தொழில் அமைச்சராக, மீன்பிடி துறை அமைச்சராக, பெருந்தெருக்கள் அமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக தற்பொழுது பிரதமராக பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். மக்களுடன் மிகவும் எளிமையாகப் பழகும் சுபாவம் கொண்டவரென பரவலாக மக்களால் பாராட்டப்படும் மஹிந்த ராஜபக்ஷ, இந்த நாட்டின் ஐந்தாவது ஜனாதிபதியாகப் பதவியேற்கும் அதேவேளை, நாடு எதிர் நோக்கும் பல்வேறு வகையான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையிலுள்ளார். அது மாத்திரமன்றி சிறுபான்மை மக்கள் மத்தியில் தோன்றியுள்ள பல்வேறு வகையான சந்தேகங்களை போக்குவதுடன் நாட்டின் இனப் பிரச்சினையை சமாதான வழியில் தீர்க்க வேண்டிய பாரிய பொறுப்பும் அவர் வசமே தங்கியுள்ளது. இதேவேளை இனப்பிரச்சினையை எவ்வாறு தீர்க்க போகிறார், அவரது பொருளாதார மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பது தொடர்பாக சர்வதேச உலகமே மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. அத்துடன் தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிகள் என்பவற்றை நிறைவேற்ற வேண்டிய பாரிய பொறுப்பும் புதிய ஜனாதிபதியையே சார்ந்ததாகும். நாட்டின் புதிய அரசியல் கலாசாரம் தொடர்பாக, தென் பகுதி மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் அதேவேளை, நாட்டின் வட கிழக்கு மக்கள் புதிய ஜனாதிபதி இனப்பிரச்சினை தொடர்பாக என்ன நிலைப்பாட்டை எடுக்கவுள்ளார்? அதன் பிரதிபலிப்புக்கள் எவ்வாறு இருக்கும் என்ற ஒருவகையான எதிர்பார்ப்புகளுடன் காணப்படுகின்றனர். புதிய ஜனாதிபதி, மக்கள் அனைவரது உணர்வுகளையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வதன் மூலமே அனைத்து மக்களின் மனங்களையும் வெற்றி கொள்ள முடியும். அது மாத்திரமன்றி, பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலையிலேயே புதிய ஜனாதிபதி காணப்படுகின்றார். நாட்டின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடுமையான போட்டிக்கு மத்தியிலேயே வெற்றியீட்டியுள்ளார். எனவே எதிர்காலத்தில் நாட்டின் பல்வேறு சவால்களையும் முறியடித்து அதில் வெற்றி கொள்வார் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் துளிர்விட ஆரம்பித்துள்ளது. அதேவேளை, தேர்தல் வெற்றிகரமாக முடிவடைந்த போதிலும், அரசியல் கட்சிகளுக்கான குத்து வெட்டுகளும், கட்சித் தாவல்களும் இனிவரும் காலங்களிலேயே அரங்கேறவுள்ளதுடன் புதிய அரசியல் திருப்பங்களும் ஏற்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. இவை அனைத்துக்கும் முகம் கொடுத்து நாட்டை சீரான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு புதிய ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் தனது பணியை சீராக முன்னெடுத்துச் செல்ல அனைத்துத் தரப்பினரும் பேதங்களை மறந்து கரம் கொடுப்பது இன்றியமையாதது. புதிய ஜனாதிபதியின் வருகையுடன் நாடு புதுப்பொலிவு பெறும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த கால அனுபவங்களைக் கொண்டு நாட்டின் சீரான பாதையில் வழி நடத்துவதன் மூலமே அனைத்து மக்களையும் திருப்திப்படுத்தி இலங்கையை சுபிட்சமான நாடாக முன்னேற்ற முடியும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம். virakesari
|