பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow மகிந்தவின் முதல் தெரிவு!
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

மகிந்தவின் முதல் தெரிவு! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 23 November 2005

சிறிலங்காவின் புதிய பிரத மந்திரியாக ரட்ணசிறி விக்கிரமநாயக்க சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுசன ஐக்கிய முன்னணியின் செயலாளரான டி.எம்.ஜயரட்ணா பிரதமராக நியமிக்கப்படலாம் என நியமனத்திற்கு முதல்நாள் இரவுவரை நிலவிய ஊகம் பொய்யாக்கப்பட்டு ரட்ணசிறி விக்கிரமநாயக்க பிரதமர் ஆக்கப்பட்டுள்ளார்.

ரட்ணசிறி விக்கிரமநாயக்கவை பிரதமர் பதவிக்கு மகிந்த ராஜபக்ஷ தெரிவு செய்தமைக்குக் காரணம் என்ன என்பது பற்றியதான சரியான காரணமோ, அன்றி பொருத்தப்பாடான ஆருடமோ இதுவரை வெளிவரவில்லை. ஆனால். மகிந்த ராஜபக்ஷவின் தெரிவில் இரண்டு காரணங்கள் செல்வாக்குச் செலுத்தியிருத்தல் வேண்டும் என்பது நிராகரிக்கப்பட முடியாதவையாகவே இருக்கும்.

ஒன்று சனாதிபதியின் விருப்பு வெறுப்பும், மன உணர்வுகளும், இராண்டாவது மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றிக்கு உழைத்த கூட்டணிக் கட்சியிலிருந்து எழக் கூடிய உணர்வுகள்.

சனாதிபதித் தேர்தலில், மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றால், அனுரா பண்டாரநாயக்கா பிரதமராகப் பதவி ஏற்பார் என்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செயற்குழுவின் தீர்மானம் அனுரா பண்டாரநாயக்கா மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாகத் தேர்தலின்போது உழைக்காமை காரணமாக வலுவிழந்து போய்விட்டது.

இதன் காரணமாகப் பண்டாரநாயக்க குடும்பம், தானாகவே ஒதுங்கிக்கொள்ள வேண்டியதாகிவிட்டது என்றுகூடக் கூறலாம். ஆயினும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பலம் பொருந்திய தலைவர்கள் பலர் இருக்கையில் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவு சுதந்திரக்கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் மீது சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பூரண நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவே கொள்ளவேண்டியுள்ளது.

ஒரு புறத்தில் டி.எம்.ஜயரட்னா சிறிலங்கா சுதந்திரக்கட்சி உட்பட பொ.ஐ. முன்னணிக்குள் பெற்றுள்ள செல்வாக்குக்கு, டி.எம்.ஜயரட்ணவின் தனிப்பட்ட ஆளுமை, தலைமைத்துவம் என்பன மகிந்த ராஜபக்ஷவிற்கு அவரை தமது இஷ்டத்திற்கு ஏற்ப கையாள முடியாது போய்விடும் என்ற உணர்வை அவருக்கு இறுதி நேரத்தில் கொடுத்திருக்கலாம்.

அடுத்தாக டி.எம்.ஜயரட்ணாவின் வருகையை ஜே.வி.பி. விரும்பாது இருந்திருத்தல் கூடும். பொ.ஐ. முன்னணியின் பலமானதொரு சக்தி அதிகாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதானது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ள ஜே.வி.பி இடையூறாகக் கருதியிருக்கலாம்.

இந்நிலையில், பலவீனமானதொரு நிலையிலுள்ள அதேவேளை தமது நிலைப்பாட்டை பிரதிபலிக்கத்தக்கவரான ரட்ணசிறி விக்கிரமநாயக்கவை பிரதமராக்க மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்திருத்தல் கூடும். அதற்கு ஜே.வி.பியும் பச்சை விளக்கைக் காட்டியிருத்தல் கூடும்.

ரட்ணசிறி விக்கிரமநாயக்க கடும் கோட்பாட்டாளர் - அதாவது பௌத்த-சிங்கள பேரினவாதி என்ற பெயரினை ஏற்கனவே பெற்றவர். சந்திரிகா அரசாங்கத்தில் பிரதமராகவும் பிரதிப்பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்து போரை முன்னெடுப்பதில் அதீத கரிசனை காட்டியவர். முன்னர் பிரதமராக இருந்தவேளை இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பதற்கான பிரச்சாரத்தில் நேரடியாகவே ஈடுபட்டவர்.

மற்றொரு புறத்தில் அவர் நோர்வேயின் சமாதான முயற்;சிகளை வெளிப்படையாகவே எதிர்த்தவர். சமாதான ஏற்பாட்டாளர்களாகச் செயற்படும் நோர்வே அரசுப் பிரதிநிதிகளை அவமானப்படுத்தும் வகையிலும், கண்டு கொள்ளாத வகையிலும்; நடந்து கொண்டவர்.

இதேவேளை, அரசியல் ரீதியில் மிகவும் பலவீனமான நிலையிலேயே அவர் உள்ளார். கடந்த முறை பொதுத்தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் இவரின் பெயர் இடம்பெறவில்லை. தேர்தல் முடிந்த பின்னர் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குத் தெரிவானவர்.

இந்நிலையில், ஓய்வுபெற வேண்டிய வயதை ஒட்டிய ஒருவரை மகிந்த ராஜபக்ஷ பிரதமராகத் தெரிவு செய்துள்ளமையானது, ராஜபக்ஷ குறித்த சில தீர்மானங்களுக்கு வரக்கூடியதான சமிக்கையைத் தருவதாகவே இது உள்ளது. அதாவது மகிந்த ராஜபக்ஷ தனக்குப் பக்கத்தில் பலமான சக்திகளை வைத்துக்கொள்ளத் தயாராக இல்லை என்பதை மட்டுமல்ல, இனப்பிரச்சினை விடயத்தில் ஜே.வி.பி. ஜாதிக ஹெல உறுமய போன்ற இனவாத சக்திகளைத் திருப்திப்படுத்தக் கூடிய நடவடிக்ககைகளையே மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளார் என்பதையும் வெளிப்படுத்துவதாய் உள்ளது.


eelanatham
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..