உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

நாட்டின் எதிர்காலம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 24 November 2005

இனப்பிரச்சினைக்கான தீர்வு எவ்வாறு அமையப் போகின்றது என்பதில் சகல மக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். பேச்சுக்கள் மூலம் தொடர்ந்தும் இழுத்தடிப்பது இனிவரும் காலங்களில் சாத்தியமற்றது என்பது தற்போது தெளிவாகி வருகிறது

எவ்வாறெனினும் சமாதான சூழல் குழம்பி விடக் கூடாது என்பதிலும், மீண்டும் நாட்டில் யுத்தம் வெடித்து விடக் கூடாது என்பதிலும் இந்த நாட்டு மக்கள் மிகுந்த கவனத்துடனும், உறுதியுடனும் உள்ளனர். சமாதான விரும்பிகள் அதனை மிகவும் தெளிவாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துக் காட்டியுள்ளனர்.

தேர்தலுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்ட இனவாதக் கருத்துக்களால் சிறுபான்மை மக்கள் மிகவும் நொந்து போனதுடன், தங்கள் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றது என்பதிலும் மிகுந்த அச்சத்துடனும், நிச்சயமற்ற நிலையிலும் இருந்து வருகின்றனர்.

எவ்வாறெனினும், நாட்டில் சமாதானச் சூழலைத் தொடர்ந்து பேணவும், இனப் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வுகாணவும் உதவுவதாக மேற்குலக நாடுகள் மீண்டும் தெரிவித்துள்ளன.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகளும் இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் உதவுவதாக உறுதியளித்துள்ளன.

எவ்வாறெனினும் புதிய ஜனாதிபதியின் உரையின் அடிப்படையில், சமாதான முயற்சிகளுக்கு இந்தியா உட்பட ஆசிய பிராந்திய நாடுகளின் அனுசரணையும், உதவியுமே அதிகம் நாடப்படும் என்பது போன்று அமைந்துள்ளது.

அது மாத்திரமன்றி தேர்தலுக்கு முன்னர் கூறப்பட்ட உறுதி மொழிகள் பின்பற்றப்படுமா அல்லது நிலைமைக்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இனப் பிரச்சினை விவகாரம் மீண்டும் புதிய பாணியில் உருவெடுக்கப் போகின்றது என்பதை மாத்திரமே உணரக் கூடியதாக உள்ளது. இனப்பிரச்சினை விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு உறுதி மொழிகளை வழங்கியிருந்தார். எனினும், ஒரு வகையில் அவரது உறுதிமொழிகளும் நிராகரிக்கப்பட்டதிலிருந்து, பெரும் பான்மை மக்களின் தீர்ப்பு ஒரு வகையிலும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும், தீர்ப்பும் மற்றுமொரு வகையிலும் அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

பெரும்பான்மை மக்கள் தமிழ் மக்களுக்கு எதனையும் கொடுத்து விடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக உள்ளதை தெளிவாகக் காட்டியுள்ளனர். இந்நிலையில் தமிழ் மக்களை திருப்திப்படுத்துவதைப் போன்றோ அன்றேல் அரைகுறை தீர்வெதனையுமோ ஏற்க தாங்கள் தயாரில்லை என்பதையும் தமிழ் மக்கள் ஒரு வகையில் உணர்த்தியுள்ளனர்.

இவ்வாறானதோர் சூழலில் இலங்கையின் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை எதிர்வு கூறுவது அவ்வளவு சுலபமானதல்ல.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வாறு பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படப் போகின்றன, அவர்களின் கோரிக்கைகள் எவ்வாறு பரிசீலிக்கப்படப் போகின்றன என்பதும், ஒரேவேளையில் பௌத்த, சிங்கள மக்களையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் எவ்வாறு புதிய ஜனாதிபதி திருப்திப்படுத்தப் போகின்றார் என்பதிலேயே அனைத்து அம்சங்களும் அடங்கியுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் 27 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் ஆற்றவுள்ள மாவீரர் தின உரை சர்வதேச ரீதியிலும், உள்நாட்டிலும் முக்கியமாக எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய ஆட்சி மாற்றம், பெரும்பான்மை இன மக்களின் கடும் போக்கு, பேச்சுக்களின் இழுத்தடிப்பு, அதிகரித்து வரும் தமிழ் மக்களின் நெருக்கடிகள், சர்வதேச சமூகத்தின் அழுத்தம் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே புலிகளின் தலைவர் தமது உரையை ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த இருவேறுபட்ட மாறுபாடான நிலைமைகளின் மத்தியிலேயே இலங்கையின் எதிர்காலம் எழுதப்படவுள்ளது.

எவ்வாறெனினும் சமாதான முயற்சிகள் தாமதிக்குமானாலோ, அன்றேல் மேலும் பின் தள்ளப்படுமானாலோ, இன்றேல் இழுத்தடிக்கப்படுமானாலோ அதன் பின்னணியில் நாட்டில் மோசமான நிலைமைகளையே எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதே யதார்த்தம்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு புதிய ஜனாதிபதி, நாட்டை சரியான திசையில் கொண்டு செல்வது மிகவும் இன்றியமையாதது.

நாடு முன்னேற்றப் பாதையில் வீறு நடை போடுமா? இல்லையா? என்பதை அடுத்து வரும் நாட்களே பதில் கூறும் என்பது பொதுவான அபிப்பிராயம். எவ்வாறெனினும் நாட்டின் அமைதி சீர்குலைய எவரும் இடமளிக்கக் கூடாது. அவ்வாறு இடமளித்தார்களேயானால் அது மாபெரும் வரலாற்று தவறாக மாறி விடும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.


virakesari
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..