|
நாடு பூராவும் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியிருப்பதாகவும் வெள்ள அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 50 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த மழை அடுத்த சில நாட்களுக்கு தொடரலாமென வானிலை அவதான நிலையம் அறிவித்திருக்கின்றது. காற்றுடன் கூடிய அடை மழை பெய்யக் கூடுமென அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை தொடரும் பட்சத்தில் மக்கள் பெருமளவில் தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் குடும்பங்களைப் பாதுகாக்க உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாதுகாப்புத் தரப்பினரையும், அனர்த்த முகாமைத்துவக் குழுவையும் அழைத்து நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்திருக்கின்றார். மழை தொடருமானால் அதற்கு முகம் கொடுத்து பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். இதேவேளை, இந்த மழை தொடர்ந்து பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் அதனையடுத்து நோய் பரவக்கூடிய அபாயம் காணப்படுகிறது. வெள்ளப் பகுதிகளில் தான் கூடுதலான தொற்று நோய் பரவலாம். நோய் பரவுவதை தடுக்க சுகாதாரப் பகுதியினர் உடனடி கவனம் செலுத்த வேண்டும். நோய் பரவியதன் பின்னர் நடவடிக்கை எடுப்பதானது காலம் கடந்த செயலாகி மோசமான விளைவுகளைத் தோற்றுவிக்கலாம். அதற்கு இடமளிக்காத வகையில் அரசாங்கம் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுவது அவசியம். நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரப் பகுதியினர் உடன் மேற்கொள்ளும் பட்சத்தில் நோய் பரவுவதை தடுப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். நோய் பரவியதன் பின்னர் தடுப்பு நடவடிக்கைகள் பயனளிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம். நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்தல், நோய் மேலும் பரவுவதை தடுத்தல் என இரண்டு சவால்களுக்கு முகம் கொடுப்பதை விட முன் கூட்டியே நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதன் மூலம் ஆரோக்கியமான பலாபலன்களை பெற்றுக் கொள்ள முடியும். முக்கியமாக கடல்கோள் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் வாழும் மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த மழைகாரணமாக பலத்த கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். முகாம்களில் வாழும் சிறு குழந்தைகளுக்கு நோய் ஏற்படும் அபாயம் கூட ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவிடயத்தில் சுகாதாரத்துறை சார்ந்தவர்கள் பாராமுகமாக இருந்து விடக்கூடாது. அந்த அகதி முகாம் குடும்பங்களை முன்னெச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டிய பொறுப்பு சுகாதாரத்துறையைச் சார்ந்ததாகும். இதேவேளை, தலைநகர் கொழும்பில் மீண்டும் ஆட்கொல்லி நோயான டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் கொழும்பு நகரில் 29 டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்திருக்கின்றார். மருதானை, வெள்ளவத்தை, பாமன்கடை ஆகிய பகுதிகளிலேயே கூடுதலாக டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் மாநகரசபை சுகாதாரப் பிரிவினர் நகரின் ஏனைய பகுதிகளிலும் பரவக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்திருக்கின்றனர். தற்போதைய கடும் மழை காரணமாக தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள் அதிகமாக காணப்படுவதால் ஆட்கொல்லி டெங்கு நுளம்புகள் அதிகமாக உருவாகக் காரணமாக அமைவதால் குப்பை கூளங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது மிகமிக அவசியமானதாகும். அத்துடன், இளநீர் கோம்பைகள், பிளாஸ்டிக் பைகள், வெற்று தகர டப்பாக்கள் போன்றவற்றை கண்டகண்ட இடங்களில் போடாமல் அவற்றை அழித்துவிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். டெங்கு பரவும் அபாயத்திலிருந்து கொழும்பு நகரைக் காப்பாற்றுவதற்கு நகர மக்கள் மாநகரசபைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாநகர சுகாதாரத்துறை மேலாளர் டாக்டர் பிரதீப் காரியவசம் விடுத்திருக்கும் கோரிக்கைக்கு கட்டாயமாக கொழும்பு வாழ் மக்கள் செவி சாய்த்தே ஆக வேண்டும். வந்த பின்னர் காப்பதற்கு முயற்சிப்பதைவிட வருமுன் காப்பது மேலல்லவா? thinakkural
|