|
தங்கத் தமிழீழ மண்ணில் ஒரு தலைவன் பிறந்தான். தமிழீழ நெஞ்சங்களில் எல்லாம் தம்பி நிறைந்தான் என்று களிப்படைந்து கானம் இசைக்கும் இன்றைய தினம் தான் எங்கள் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 51 ஆவது அகவையை அருந்தமிழ் இனம் மட்டுமல்ல, தமிழ் கூறும் நல்லுலகமும் கொண்டாடுகிறது.
தமிழகத்தில் தஞ்சம்புகுந்த வேளையிலும் சரி, இங்கு ஈராயிரம் டிசம்பரில் நாடுகடத்தப்பட்ட நிலையிலும் சரி, இங்கு கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ச்சியாக எம் கிடைத்தற்கரிய தலைவர் புகழைப்பாடி வருகின்றோம். நீ வாழும் காலத்தில் நாமும் வாழ்கின்றோம் என்று பெருமையும் பேருவகையும் கொள்கிறோம். "உன்நாமம் எம் நாவில் மறந்தறியோம்" என்றும் நாவுக்கரசர் நவின்ற பாடலை நாள்தோறும் உச்சரித்தபடி இருக்கிறோம். இதுகால வரையில் தமிழ் அறிஞர் கூற்றின் அடிப்படையிலும் தமிழர் அல்லாதோர் கூற்றின் அடிப்படையிலும் எங்கள் தலைவனை ஆய்வு செய்தோம். அருந்தமிழ்க்கவிஞர்கள் பாடல்களை எம் நெஞ்சில் ஏற்றி பாமாலையும் புகழ் மாலையும் சூட்டி மகிழ்ந்தோம். உலகிலே எமக்கு சோர்வடையாத நிகழ்ச்சி ஒன்று உண்டெனில், அது அவர் புகழ் பாடுவதேயாம். தனி மனிதன் புகழ் பாடுவதை தவிர்த்துக் கொள்பவன் யான். அதனை அவ்வளவு தூரம் விரும்பாதவனும் நான். ஆனால், இன்றைய சூழ்நிலையில் விதிவிலக்காக புறநடையாக, அவர் புகழ் பாடாது இருக்க முடியாத நிலையில் நான் இருக்கின்றேன். நெருக்கடிக்கு ஈடுகொடுப்பவன் தான் தலைவன் (Leader in crisis) என்ற சொற்றொடரையும் நாம் அடிக்கடி கையாள்வதுண்டு. தமிழீழத்தின் வரலாற்றை வரலாற்றுக் கண்கொண்டு பார்க்கையில், நெருக்கடிக்கு ஈடுகொடுத்த மூன்று தலைவர்களை நாம் எண்ணிப் பார்ப்போம். "Donoghmore means Tamils no more, We are handing over power to the vulgar mob. if we do not have adequate safeguards it will be a death - knell to the tamils'' ( டொனமூர் எனில், இனிமேல் தமிழர் இல்லை வெறிகொண்ட கும்பலுக்கே நாம் ஆட்சியை ஒப்படைக்கின்றோம். போதிய பாதுகாப்பற்ற நிலையில் இந்த அரசியல் யாப்பை ஏற்போமாயின் எம் இனம் பூண்டோடு அழிக்கப்படும்) என்று தனது 77 ஆவது அகவையில் 1928 சட்டசபையில் எச்சரித்தவர் சேர்.பொன்.இராமநாதன் அவர்கள். இவரின் எச்சரிப்பை "அறளைபேந்த கிழவனின் கூற்று" என்று சிங்களத் தலைமைப்பீடம் எள்ளிநகையாடியது. அன்றைய எம் தமிழ்த்தலைவர்களோ "அறிவுடையார் ஆவதறிவர்" என்ற வள்ளுவரின் கூற்றை மறந்து சேர்.பொன். இராமநாதன் இடித்துரைத்த உண்மைகளைப் பொருட்படுத்தவில்லை. அரசியலிலும் ஆன்மீகத்திலும் முதிர்ச்சி பெற்ற ஞானியான இராமநாதன், "முத்திநெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனே" என்று திருவாசகத்தை மேற்கோள்காட்டி எப்படியும் தமிழினத்திற்கு ஏற்படும் அழிவைத் தடுக்க டொனமூர் யாப்பினை எதிர்த்து ஓர் அறிக்கையினை பிரித்தானிய அரசனிடம் ஒப்படைத்தார். இவரின் இந்த அறிக்கை (The Constitutional Bible of the Tamils'' (தமிழ் மக்களின் அரசியல் யாப்பு விவிலியம்) என்று , அறிஞர் உலகினால் வர்ணிக்கப்பட்டது. 1915 இல் சிங்களவரைக் காக்க இவர் இலண்டன் சென்று ஓர் அறிக்கையை விடுத்து திரும்பி வரும்போது சிங்களத்தலைமைப் பீடத்தினால் வாகைசூடி வரவேற்கப்பட்டார். 1930 இல் தமிழருக்காக இலண்டனில் குரலெழுப்பி திரும்பியபோது இவரை வரவேற்க ஆட்களில்லை. எனினும் "என்கடன் பணி செய்துகிடப்பதே" என்று மெய்யியல் நிலையில் விளக்கமளித்த இவர், 1930 நவம்பர் மாதம் 26 ஆம் திகதி உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற நிலையில் இவர் உயிர் பிரிகின்றது. மெல்ல மெல்லப் பணிபுரிந்த மேதை செல்வநாயகம். அடுத்து எம் நினைவுக்கு வருபவர் மெல்ல மெல்லப் பணிபுரிந்த மேதை செல்வநாயகம். "தீர்க்கதரிசி" என்றும் "ஆவது அறியும் அறிஞர்" (Political Prophet) என்றும் அரசியல் உலகம் இவரை வாழ்த்துகின்றது. தொலைநோக்குப் படைத்த இப்பெருமகன், 1948 இல் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்ட போது, "இவர்களின் கழுத்து இன்று அறுக்கப்படுகிறது, நாளை நமக்கும் இந்நிலையே ஏற்படும்" என்று எச்சரித்தார். இவரின் எச்சரிப்பை பொருட்படுத்தியோர் எத்தனை பேர் என்பதை நாம் அறியோம். ஆனால், தொலைநோக்குச் சிந்தனையோடு அவர் கூறிய கூற்றுக்கள் அனைத்தும் மெய்ப்பிக்கப்பட்டன. பட்டிப்பளை ஆறு பாய்ந்தோடிய மண் கல்லோயாவாக மாற்றப்பட்டு அரசின் ஆதரவோடு சிங்கள குடியேற்றம் நடைபெற்றபோது "அபிவிருத்தியின் பெயரில் தமிழ் மண் அபகரிக்கப்படுகின்றது" என்று தந்தை செல்வா அன்று கூறிய போது, அவருக்குக் கிடைத்த பரிசு, யாரோ ஒரு முஸ்லிம் இளைஞன் அவர் நெற்றியில் கல்லெறிய இரத்தம் பாய்ந்தோடிய நிகழ்ச்சியாகும். நல்ல கிறிஸ்தவராகிய தந்தை செல்வா இவ்விளைஞனின் செயல் கண்டு ஆத்திரப்படாது "இவன் செய்வது யாதென்றறியான் மன்னித்திடுக" என்று கூறினார். அம்பாறையை அபகரிக்கும் இச் செய்தியை 1955 இல் வீரகேசரி தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டது, தரப்படுத்தலின் பெயரில் தமிழ்ப் பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்லாது தடுக்கப்பட்டது, பின்பு தென்பகுதியில் "பெற்றோர் விரும்பிய மொழியில் பிள்ளைகள் பயிலலாம்" எனக் கூறி தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு மூடுவிழா நடாத்த, தென் பகுதிகளில் நூற்றுக்கணக்கான தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதன் விளைவால் தமிழ்ப் பிள்ளைகள் சிங்களத்தில் பயிற்சி பெற, குடித்தொகை கணக்கில் அவர்கள் சிங்களவர்களாக கணிக்கப்பட்டனர். அத்தோடு, புத்தமதத்திற்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும் என்று முதலில் சட்டத்தைக் கொண்டுவந்த சிங்கள அரசு, பின்பு மேலும் அதனை மாற்றி பௌத்தத்திற்கு முதன்மை இடம் கொடுக்க வேண்டுமென்றும் பௌத்தத்தை அரசு பேணிக்காக்க வேண்டுமென்றும் சட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றியது. தமிழீழமே தந்தை செல்வாவின் இறுதி உயில் இத்தகைய ஆபத்துக்களை எதிர்நோக்கிய எம் தந்தை அவர்கள், பல்லினம், பலமொழி, பலசமயம் உள்ள நாட்டில் ஒற்றையாட்சி உதவாது. எனவே, இணைப்பாட்சியில் இனிய வாழ்வு காண்போம் என 25 ஆண்டுகளாக இடித்துரைத்தார். இக் கூற்றினை சிங்களப் பேரினவாதம் ஏற்க மறுத்ததன் காரணமாக நவம்பர் 19 ஆம் திகதி தம் மக்களுக்கு இறுதி உயிலாக அவர் கூறிச்சென்றது, இணைப்பாட்சி ஈழத்தமிழ் மக்களுக்கு தீர்வில்லை, தனிநாடு அமைத்தால் தான் தமிழன் வாழமுடியும். சிங்கள வெறியாட்டத்தைத் தடுக்க முடியும் என முழங்கினார். இது நவம்பர் மாதம் 19 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்ச்சி. ஈழத் தமிழன் வாழ்வில் நவம்பர் மாதம் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக விளங்குகின்றது. நவம்பர் 19 இல் தந்தை செல்வா தனிநாடு கேட்டது, பின்னோக்கிப் பார்க்கையில் சேர்.பொன்.இராமநாதனின் இறப்பு 26.11.1930 இல் நடைபெற்றது. 24 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் நீண்டகால வெற்றிடத்துக்குப் பின்பு எங்கள் தேசியத் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன் 26.11.1954 இல் பிறக்கிறான். இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்துப் போலும் " தங்கத் தமிழீழ மண்ணில் ஓர் தலைவன் பிறந்தான். தமிழீழ நெஞ்சங்களிலெல்லாம் தம்பி நிறைந்தான்" என்று களிப்படைந்து கானமிசைக்கும் நாளாக நவம்பர் 26 அமைகிறது. சென்ற ஆண்டு எங்கள் பிரபாகரனுக்கு அகவை 50, இன்று அவருக்கு அகவை 51. இதனை தமிழீழக் கவிஞர் ஒருவர் உணர்ச்சி பொங்க "பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே மங்களம் தங்கிடும் நேரத்திலே - எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே" என்று பாடி மகிழ்ச்சி அடைகின்றார். எங்கள் தலைவர் பிரபாகரன் பாசத்தில் எங்கள் தாயாகவும், கவி பாடுதற்குரிய மாபெரும் பேராளனாகவும் விளங்குகிறார். இவர் எம் தேசத்திலே எங்ஙணும் நிலையான புகழ் பெற்று விலை தேடி வருவதற்குரிய தலைவனாக விளங்குகிறார். ஆனால், இவரோ விலைபோக மறுக்கின்ற தலைவனாவார். இவர் தமிழ் இனத்திற்கு ஏற்படும் இன்னல்கள் கண்டு கொதித்தெழுந்தார். பல இளைஞர்களை சேர்த்து களம் குதித்த வரலாறு படைத்தார். தன் இன மானத்தை மட்டும் மதித்த இவர் தன் பகை தாவியே வந்திட்ட போது தன் தாள் கொண்டு மிதித்தார். எங்கள் தாயகம் எமக்கு மூச்சு என்றவர் தமிழீழமே எங்கள் பேச்சு என்றவர் வந்திடும் படைகளை வீச்சென்று வீழ்த்தினார். எம் புலிகள் வாழ்ந்திடும் வரையில் பகைவர் எமக்கு தூசென்று கூறுகிறான். விடுதலைப் புலிகளால் பலம் பெற்ற இவர் தமிழ் வீடுகள் யாவிலும் மலர்சூட்டி வழிபடப்படுகிறார். படுகளத்தில் புலியாக விளங்குகின்ற எங்கள் பிரபாகரன் எங்கள் உயிராக விளங்குகிறார். இவன் என்றும் எங்கள் தளபதியாக எங்கள் வானகத்து வளர்மதியாக விளங்குகின்றான். எனவே, எங்கள் பிரபாகரனை பின்பற்றி எம் பிறந்த மண்மீது பற்றுவை. எங்கள் தாய் மண்ணில் பிள்ளையாய் பிறந்த இவர் தமிழீழ மாளிகை வாசலைத் திறந்துள்ளார். பாய்புலிப் படைகொண்டு களமிசை நிற்கின்ற இவர் பகைவனைப் பந்தாடிப் பந்தாடி சாகடிக்கிறார். விடுதலை ஒன்றே எம் தலைவன் இலக்கு. வெற்றி ஒன்றே அவர் முரசின் முழக்கம். தலைவன் வாழும் இக்காலத்தில் தவறாது தலைதூக்கும் ஈழம் என்பது எமது உறுதிப்பாடாகும். ஆழ்கடல் எங்கும் சோழ மன்னன் அன்று ஆட்சி புரிந்தான். இன்று ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் தமிழீழக் கடல் எங்கும் எங்கள் கரிகாலன் பிரபாகரன் ஏறி நடக்கின்றான். எனவே, காலை விடிந்ததென்று பாடுவோம் சங்க காலம் தொடங்கியதென்று ஆடுவோம். எட்டுச் திசையும் தொட்டு பெருஞ்சோழன் ஏரிக்கடல் வென்றதுண்டு. அவன் விட்ட இடம் அனைத்தையும் வென்று வருகின்றான், எங்கள் வேங்கைக் கடல் வீரன். எனவே மீளவும் காலை விடிந்ததென்று பாடு சங்க காலம் தொடங்கியதென்று ஆடு. எங்கள் கடல் மீது எதிரிகள் வருகின்ற இன்னல் இனி இல்லை, புலி பொங்கி எழுந்திட்ட தங்கத் தமிழீழ பூமியில் இனி எதிரிக்கு என்ன வேலை. கடலில் என்றாலும் கடற்கரையில் என்றாலும் காவல் இருக்கின்ற தம்பி எதிரிப் படைகள் வரும்போது பாய்ந்து புலிவீரன் கதையை இனிதே முடிப்பான் தம்பி, வலிமை தரும் எங்கள் தலைவன் வழிதன்னில் வங்கக்கடல் இன்று பாடும், கடற் புலிகள் எழுகின்ற போர்கள் தனில் வெற்றி பெற்று தமிழீழம் ஆடும். மீண்டும் காலை விடிந்ததென்றும் பாடுவோம், இந்தக்கடல் ஈழத்தமிழரின் சொந்தக்கடல், இரத்தம் சிந்திச் சிவந்திடும் தங்கக்கடல், பொங்கிக் கடற்புலி வெல்லப்போகும் கடல், பிரபாகரன் தோன்றிய ஊரைத் தழுவிய வீரக்கடல். ஒரு தலைவன் வருகைக்காகக் காத்திருந்தோம். எங்கள் தலைவன் பிறந்தான்.எங்கள் பகைவன் எங்கோ ஓடி மறைந்தான். எம் மண்ணை மறவாத எம் தலைவன் எங்கள் மண்ணில் வேரூன்றி நிற்பவன். அன்னை மண்ணைப்பறிக்கும் வெறியர் மீது இவன் பொழிகின்ற ஏவுகணை எதிரியை ஏக்கத்தில் ஆழ்த்தும். பிரபாகரன் காலம் தந்த கொடை. அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை. நெஞ்சை நெருப்பாக்கிய நிமிர்ந்த தமிழீழத்தை உருவாக்கிக் காட்டியவன் எங்கள் பிரபாகரன். பிஞ்சு மழலைக்கும் வீரமூட்டி பகைவனைத் தூரத்துரத்தியவன் பிரபாகரன். வாழத்துடித்த தமிழ் இனத்தின் வசை தீர்த்து வரலாறு படைத்த வழிகாட்டி. ஈழத்தமிழ் மண்ணின் தலைவன் அவன். எங்கள் இனத்தை கரைசேர்த்த படகோட்டி. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமையான அடிமைக்கும் அடிமைகளாக வாழ்ந்த எம் தமிழரின் வேதனை மிக்க எம் வாழ்வை முடிக்க வந்த இவன் தமிழின் எழுச்சியை முடுக்க வந்துள்ளான். மேடையில் பேச இவன் ஏறியதில்லை தேர்தல் சேற்றிலும் இறங்கியதில்லை. தன் தாயை அதிகம் பார்த்தவனில்லை. ஆனால், தமிழ்த்தாய் நெடுநாள் எதிர்பார்த்த பிள்ளை இவன். தமிழ்த்தாய் நெடுநாள் எதிர்பார்த்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் 51 ஆவது பிறந்தநாள் இன்று. பீடு நடை உடைய பிரபாகரன் புகழ் பாடி தமிழ் ஈழத்தை அவன் வாழும் காலத்திலேயே காண்போம்.
எம்.கே.ஈழவேந்தன்
|