|
புதிய அரசின் வருகையோடு சமாதான முயற்சிகள் எவ்வாறு அமையப் போகின்றன? எங்கே மீண்டும் நாட்டில் யுத்தம் வெடித்து விடுமோ என மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்பட்டனர். எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் தினத்தையொட்டி ஆற்றிய உரை மக்கள் மத்தியில் மிகுந்த ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.நாட்டின் அரசியல் நிலைவரங்கள் மற்றும் மக்களின் உணர்வுகளை நன்கு உணர்ந்த நிலையில் தலைவர் பிரபாகரன் மிகுந்த நிதானத்துடன் ஆற்றிய உரை உள் நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.
பேரினவாதிகள் எதிர்பார்க்குமளவுக்கு புலிகள் யுத்த வெறியர்கள் அல்லர். தமது நியாயமான அடிப்படை உரிமைகளுக்காகவே போராடுகிறார்கள் என்பதை உலகறியச் செய்யும் வகையில் தமது தரப்பு நியாயங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உலகுக்கு எடுத்துக் காட்டியிருப்பதுடன் தமிழ் மக்கள் பொறுமையின் எல்லைக்கு சென்றுள்ளார்கள் என்பதையும் இனிமேல் ஒரு போதும் அவர்கள் ஏமாறத் தயாரில்லை என்பதையும் மிக இரத்தினச் சுருக்கமாக எடுத்துக் காட்டியுள்ளார். புதிய அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் தேசிய இனப் பிரச்சினை தொடர்பான தனது கொள்கைத் திட்டங்களை முன் வைத்துள்ள நிலையிலும் சமாதான முயற்சிகளுக்கான கதவை எந்த வகையிலும் மூடாது சமாதான முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பமொன்றை வழங்கியுள்ளமை பல்வேறு மட்டங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மிகுந்த பாராட்டை ஈட்டிக் கொடுத்துள்ளது என்று கூறலாம். தலைவர் பிரபாகரன் தமதுரையில் வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய கால இடைவெளிக்குள் எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை திருப்திப்படுத்தும் வகையில் நியாயமான தீர்வுத் திட்டத்தை புதிய அரசாங்கம் முன் வைக்க வேண்டும். இது எமது இறுதியானதும் உறுதியுமானதுமான அவசர வேண்டுகோளாகும். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, கடும் போக்கை கடைப் பிடித்து காலத்தை இழுத்தடிக்க புதிய அரசாங்கம் முற்படுமானால் நாம் எமது மக்களுடன் ஒன்றிணைந்து எமது சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் தேச சுதந்திரப் போராட்டத்தை அடுத்த ஆண்டில் தீவிரப்படுத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் அர்த்தத்தை நன்குணர்ந்து புதிய அரசாங்கம் தேசிய இனப் பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வை முன் வைக்குமானால், இந்த நாட்டில் சமாதானம் நீடித்து நிலைத்து நிற்கவும் வழி பிறக்கும் என்பது யதார்த்தமாகும். சமாதானப் பேச்சுக்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் நேசக் கரம் நீட்டுவதாக தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், நடைமுறை அரசியலில் நம்பிக்கை கொண்ட யதார்த்தவாதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று கூறியிருக்கிறார். அத்துடன், கடந்த கால சமாதானப் பேச்சுக்கள் இழுத்தடிப்புகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், பேரினவாதிகளிடமிருந்து நீதியை எதிர் பார்ப்பது முட்டாள் தனம் என்றும் தன்னாட்சி அதிகாரத்தைப் பேசி பெற்றுக் கொள்ள நினைப்பது பகற் கனவு என்றும் கூறியிருப்பது மிகவும் கவனத்துக்குரியதாகும். மீண்டும் பேச்சுவார்த்தைகள் இழுத்தடிக்கப்படுமானாலோ சமாதானப் பேச்சு என்ற பெயரில் விடுதலைப் போராட்டத்தை நசுக்க ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானாலோ அதன் பின்னணியில் பாரிய விளைவுகளை நாடு எதிர் நோக்க நேரிடும் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மறை முகமாகக் கூறியிருப்பதையே அவதானிக்க முடிகிறது. எனவே நாட்டின் அமைதியைத் தக்க வைத்துக் கொள்வதும் சமாதான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதும் தற்பொழுது புதிய ஜனாதிபதியின் கரங்களிலேயே தங்கியுள்ளது. இரு வேறுபட்ட கொள்கைகளுக்கு மத்தியில் சமாதான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வது என்பது அவ்வளவு தூரம் இலகுவான காரியமாக அமையாத போதிலும் புதிய ஜனாதிபதி யதார்த்தத்தை உணர்ந்த நிலையில் தென் பகுதியில் மாற்றத்தை உருவாக்கி, நாட்டின் சுபிட்சத்துக்கான வழியைத் தேட வேண்டிய பாரிய பொறுப்புக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பதை நன்கு அவதானிக்க முடிகிறது. தேசிய இனப் பிரச்சினையை தீர்க்கும் முகமாக வாய்த்த ஒவ்வொரு சந்தர்ப்பமும் சறுக்கிச் சென்றுள்ளது. மீண்டும் யுத்த முனைப்புகளே அரங்கேறத் தொடங்கின. இதன் பின்னணியில் உருவான யுத்தத்தால் நாடு சின்னாபின்னமாகி சீரழிந்து சென்றுள்ளது. எதிர்வரும் காலங்களிலேனும், இதனை உணர்ந்து சந்தர்ப்பத்தை சாத்தியமான வழியில் பயன்படுத்த சகல தரப்பினரும் முன்வர வேண்டும். இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தை சர்வதேச சக்திகள் தங்கள் சுய நலன்களுக்காக பயன்படுத்துவதும் அதன் பின்னணியில் இனப் பிரச்சினைக்கான தீர்வு வெண்ணெய் திரண்டு வரும் போது தாழி உடைந்த கதையாக மாறி விடுவதும், பல்வேறு சந்தர்ப்பங்களில் அவதானிக்கப்பட்டு வருகிறது. இதே நிலைமை தொடருமானால் இனப் பிரச்சினை விவகாரம் ஒரு போதும் சாத்தியமான தீர்வை எட்டும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த கால அனுபவங்களை நன்குணர்ந்த நிலையில் குறுகிய காலத்துக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பது மிகவும் இன்றியமையாதது. இதன் பின்னணியில் தென் பகுதியில் பொது இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த முடியுமென்று எதிர்பார்ப்பது அவ்வளவு தூரம் சுலபமான விடயமல்ல. இந்நிலையில் ஜனாதிபதி எதேச்சையான தீர்மானங்களை முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். நாட்டின் நலனின் அடிப்படையில் சகல இன மக்களும் சம அந்தஸ்த்துடன் வாழ வேண்டுமென ஜனாதிபதி நினைப்பாரேயானால் சிங்கள கடும் போக்காளர்களை மீறி தனது தற்போதைய கொள்கையிலிருந்தும் மாறுபட்டதோர் கொள்கையினை கடைப்பிடிக்க வேண்டியது அத்தியாவசியமாகும். அதன் மூலமே அவர் தான் பௌத்தர்களுக்கு மாத்திரம் ஜனாதிபதியல்ல என்பதையும் நிரூபிக்கக்கூடிதாக அமையும். இவையனைத்துக்கும், அடுத்து வரும் நாட்களே பதில் கூறுவதாகவிருக்கும். எனவே நெருங்கி வரும் அடுத்த ஆண்டை சமாதான ஆண்டாக ஜனாதிபதி பிரகடனப்படுத்துவதன் மூலமே போராட்டத்தின் தீவிரத்தை தணிக்கக் கூடியதாகவிருக்கும் என்பதே யதார்த்தமானதாகும். virakesari
|