பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

நிழல் யுத்தத்துக்கு முடிவைக் காண்பதில் கவனத்தைச் செலுத்தாத ஜனாதிபதி! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 04 December 2005

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் அரசுக்கு விடுதலைப் புலிகள் காலக்கெடு விதித்துள்ளனர். இதனை இலங்கை அரசு சரியாகப் புரிந்து கொண்டுள்ளதா அல்லது புரியாதது போல் நடிக்கிறதா எனத் தெரியவில்லை. புலிகளின் தலைவரது, மாவீரர்தின உரையை பாராட்டும் அரசு, அதில் அவர் தெரிவித்த விடயங்களின் பாரதூரத் தன்மையை மறைக்கப் பார்க்கிறது.

புதிய ஜனாதிபதிக்கு சிறிது கால அவகாசம் வழங்கியுள்ள புலிகளின் தலைவர், வரையறுக்கப்பட்டதொரு குறுகிய கால இடைவெளிக்குள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை திருப்தி செய்யும் வகையில் நியாயமானதொரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கத் தவறினால் தன்னாட்சி நிறுவும் போராட்டம் அடுத்த வருடம் முதல் தீவிரப்படுத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் புலிகளின் நிலைப்பாட்டை புதிய அரசாங்கம் உணர்ந்து கொள்ளவில்லையென்றே கருதப்படுகிறது. சமாதானப் பேச்சுகளை ஆரம்பிக்க வருமாறு ஜனாதிபதி மகிந்த விடுத்த அழைப்பை புலிகள் ஏற்றுள்ளதாகவும் அவர்களும் புதிய அரசுடன் பேசத் தயாராயிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க விடயமெனவும் அரசுத் தரப்பினர் கூறுகின்றனர்.

புதிய அரசுடன் பேச்சுகள் நடத்துவதால் பலனில்லை, முற்று முழுதாக இனவாதிகளைக் கொண்டதொரு அரசுடன் எப்படிப் பேசுவது. மீண்டும் போரைத் தொடங்குவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லையென்றெல்லாம் பிரபாகரன் தனதுரையில் தெரிவிப்பாரென பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனாலும், அவர் அவ்வாறு கூறாது புதிய ஜனாதிபதிக்கும், புதிய அரசுக்கும் சிறிது கால அவகாசம் வழங்கியமை இந்த அரசுக்கு பெரும் ஆறுதலாகவுள்ளது.

மகிந்த ஆட்சிக்கு வந்தால் போர் வெடிக்குமெனவும் சமாதானத்திற்கான வாய்ப்பே இல்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சி பிரசாரங்களை செய்துவந்த நிலையில், மகிந்தவுடனும் நியாயமான தீர்வொன்றுக்காக பேசத் தயாரென பிரபாகரன் கூறியதன் மூலம் மகிந்த ராஜபக்‌ஷ நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார். மற்றவர்கள் கூறியது போல், தாங்கள் போருக்கான அரசொன்றை அமைக்கவில்லையென்பதை புலிகளின் பேச்சுக்கான அழைப்பு காட்டி நிற்பதாகவும் அவர்கள் கூறிவருகின்றனர்.

ஆனாலும், புலிகளின் தலைவர் விதித்த காலக்கெடுவின் பாரதூரத் தன்மையை அவர்கள் உணரவில்லை அல்லது உணரவிரும்பவில்லை போன்றே தென்படுகிறது. குறுகியதொரு கால அவகாசம் வழங்கி, அதற்குள் நியாயமானதொரு தீர்வை முன்வைக்குமாறும் கேட்டதன் மூலம், புதிய அரசுடனான பேச்சுக்கு முன்னர் அவர்களிடமிருந்து தீர்வுத் திட்டமொன்றை புலிகள் எதிர்பார்க்கிறார்களென்ற உண்மையை புதிய அரசு உணரவேண்டும்.

அதாவது, பேசவருமாறு புதிய ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்று புலிகள் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்துவிடப் போவதில்லை. அரசு முன்வைக்கவுள்ள தீர்வுத் திட்டத்தைப் பொறுத்தே அது அமையப் போகிறது. இல்லையேல் அடுத்த வருடம், தன்னாட்சியை நிறுவும் போராட்டம் தீவிரப்படுத்தப்படுமென்பதை புதிய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனாலும், தற்போதைய அரசின் இதுவரையான நிலைப்பாடானது பேச்சுக்கான வாய்ப்பை அறவே இல்லாது செய்துள்ளது. ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பரவலாக்கல், தாயகக் கோட்பாடு நிராகரிப்பு, சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்படாது, சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றெல்லாம் நீட்டி முழக்கிக்கொண்டு செல்கிறது.

இவையாவும், புதிய அரசின் பங்காளிக் கட்சிகளான ஜே.வி.பி.யையும், ஜாதிக ஹெல உறுமயவையும் திருப்தி செய்து சிங்களக் கடும்போக்காளர்களின் ஆதரவைப் பெற உதவுமே தவிர நாட்டில் பிரிவினையைத் தடுக்க எந்த விதத்திலும் உதவமாட்டாது.

ஜனாதிபதி மகிந்தவின் இந்தச் சிந்தனைகளுக்கும், புலிகளின் தலைவரது சிந்தனைகளுக்கும் இடையிலான இடைவெளி மிக மிக அதிகம். இப்போதும், 56 நிலையில் (1956) இருக்கப் பார்க்கும் அரசுடன் 2005 இல் புலிகள் எப்படிப் பேசப்போகிறார்களென்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

புலிகள் பேச்சுகளுக்கு முன்வந்துவிட்டார்கள், போர் நிறுத்த உடன்பாட்டிலும் தங்களுக்கு மாறானவற்றையெல்லாம் திருத்தி போரையும் தடுத்து விடலாமென்ற நப்பாசையில் புதிய அரசு இருக்கிறது. எனினும், புலிகள் தங்கள் பலத்தை மீண்டும் நிரூபிப்பதுடன், முன்னைய அரசுகளுடன் போலன்றி இந்த அரசுடன் தங்கள் பேரம் பேசும் பலத்தை அதிகரிக்க வேண்டுமென தமிழ் மக்கள் விரும்புகின்றனர்.

இதற்காக ஆயிரம், இரண்டாயிரம் படையினரை கொல்ல வேண்டுமென்றோ அல்லது கொழும்பில் குண்டுகள் வெடிக்க வேண்டுமென்றோ அவர்கள் விரும்பவில்லை. புலிகளின் தற்போதைய படை பலமானது, பெரும் யுத்தமொன்றை இரத்தம் சிந்த நடத்தாமலே பெரும்பாலான நிலப் பகுதியை மீட்கும் ஆற்றல் கொண்டதை அனைவரும் அறிவர். இந்த ஆற்றலின் மூலம் மேலும் சில முக்கிய பிரதேசங்கள் தமிழர்களின் ஆளுகைக்குள் வரும்போது சிங்கள தேசம் அடுத்த நிலைமைகள் குறித்து நன்குணரும்.

இதைத்தான் தமிழ் மக்கள் விரும்புகின்றனர். அதற்கான தமது விருப்பத்தை அவர்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டனர். புலிகளும் இதனை நன்குணருவர் என்பதாலேயே புதிய ஜனாதிபதிக்கும், புதிய அரசுக்கும் அவர்கள் சிறிது கால அவகாசம் வழங்கியுள்ளனர். இதனைப் புதிய அரசு புரிந்துகொள்ள வேண்டும். யதார்த்த நிலையை உணராது, சற்றும் பொருந்தாத விதத்தில் பேசக் கூடாது.

ஒற்றையாட்சி என்ற காலம் மலையேறி நீண்டகாலமாகிவிட்டது. சமஷ்டியா அல்லது பிரிவினையா என்பதைச் சிங்கள தேசம் உணரவேண்டும். தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் அவர்களது உணர்வுகளையும் புரிந்துகொள்ளத் தவறும் சர்வதேச சமூகம், புலிகளுக்கு போக்குவரத்துத் தடை விதிக்கவும், புலிகளை தடை செய்யவும் ஆலோசிக்கிறது. இதன் மூலம் இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியிலிருந்து சர்வதேச சமூகம் இன்று அந்நியப்பட்டுச் செல்கிறது.

ஐம்பது வருடங்களுக்கு மேலான சுதந்திரப் போராட்டத்தையும், 20 வருடங்களுக்கும் மேலான ஆயுதப் போராட்டத்தையும் சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளவில்லை. தமிழர்களின் போராட்டத்தை அடக்க சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறமுயலும் இலங்கை அரசு, அந்த சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண ஒருபோதும் முற்பட்டதில்லை.

இலங்கை அரசின் இந்த இரட்டைத் தன்மையை புரிந்துகொள்ள சர்வதேச சமூகம் தவறிவிட்டதைத் தமிழ் மக்கள் வேதனையுடன் நினைவு கூருகின்றனர்.

இதனை வலியுறுத்துவதுபோல், தற்போதைய போர்நிறுத்த உடன்பாட்டை திருத்தியமைக்க புதிய அரசு முற்படுகிறது. இந்த உடன்பாட்டில் தமிழ் மக்களுக்குச் சாதகமான அம்சங்களை வெட்டி நீக்க முற்படுகிறது.

ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைந்து அவர்களை வடக்கு -கிழக்கிலிருந்து வெளியேற்ற வேண்டுமென உடன்பாடு தெரிவிக்கின்றபோதும், தமிழ் குழுக்களை ஆயுதமயப்படுத்தி அவர்களைப் பயன்படுத்தி இராணுவ புலனாய்வுப் பிரிவு நிழல் யுத்தத்தை நடத்துகிறது. இதனைச் சர்வதேச சமூகம் நன்கு தெரிந்துள்ளபோதிலும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முற்படவில்லை.

போர்நிறுத்த உடன்பாட்டை எப்படியாவது திருத்த வேண்டுமென புதிய அரசு கங்கணம் கட்டி நிற்கிறது. ஆனால், அதற்குப் புலிகள் தயாரில்லை. உடன்பாட்டை முழுமையாக அமுல்படுத்தினால் நிழல் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானச் சூழ்நிலையை ஏற்படுத்த முடியுமெனப் புலிகள் கூறுகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவருடனான சந்திப்பில் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் இதனைத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அதேநேரம், மாவீரர்தின உரையிலும் தலைவர் பிரபாகரன் நிழல் யுத்தம் பற்றி தெளிவாகக் கூறியுள்ளதுடன், தனது உரையில் அதற்கும் முக்கியத்துவமளித்ததன் மூலம் இலங்கை அரசியல்வாதிகள் பற்றி தெளிவாகக் கூறியுள்ளார். நிழல் யுத்தத்தின் உண்மையான சூத்திரதாரிகள் யாரென்பது தங்களுக்கு தெரியுமென்றும் அரசியல்வாதிகள் இதனை ஊக்குவித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்நிறுத்த உடன்பாட்டில் திருத்தங்களைச் செய்ய முயல்வதன் மூலம் நிழல் யுத்தத்தைத் தீவிரப்படுத்த அரசு முற்படுவதாகவே புலிகள் கருதுகின்றனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆசியுடனேயே நிழல் யுத்தம் தொடர்வதாக புலிகள் பல தடவைகள் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். புதிய ஜனாதிபதிகூட அதனை முடிவுக்குக் கொண்டு வரமாட்டாரென்றே தெரிகிறது. யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு இரு பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம் இது தெளிவாகிறது.

தற்போதைய நிழல் யுத்தம் பற்றி தனதுரையில் புலிகளின் தலைவர் சுட்டிக் காட்டியதன் மூலம், புதிய அரசு இந்த நிழல் யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்பது உணர்த்தப்பட்டுள்ளது. ஆனால், போர்நிறுத்த உடன்பாட்டை திருத்துவதில் ஆர்வம் காட்டும் ஜனாதிபதி மகிந்த, நிழல் யுத்தத்தை நிறுத்த ஆர்வம் காட்டவில்லையென்றே தெரிகிறது.

யாழ்ப்பாணத்தில் அப்பாவி இளைஞர்கள் இருவரது கொலையும் அதன் பின்னரான ஹர்த்தாலும் அங்கு நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதை தெளிவாக்குகிறது. படையினரும், ஈ.பி.டி.பி.யும் இணைந்தே இந்தப் படுகொலையைச் செய்ததாக பொது அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

அத்துடன் ஹர்த்தாலின்போது பல பகுதிகளிலும் படையினருடன் பொதுமக்கள் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை, அங்கு இனிவரும் நாட்களில் நடக்கப்போவதற்கு கட்டியம் கூறுகிறது.

புதிய இராணுவத் தளபதியாக கடும் போக்காளரான மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளார். ஐ.தே.க.அரசுடன் புலிகள் பேச்சுகள் நடத்திய காலத்தில், போர்நிறுத்த உடன்பாட்டிற்கமைய அதியுயர் பாதுகாப்பு வலயங்களையும், மக்கள் குடியிருப்புகளிலிருந்து படையினரையும் வெளியேற்றுவதற்கு மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா மறுப்பு தெரிவித்ததால் பேச்சுகள் முறிவடைவதற்குக் காரணமாயிருந்தார்.

உடன்பாட்டிலுள்ளவற்றை அமுல்படுத்த மறுத்ததுடன் உடன்பாட்டிலுள்ளவற்றை அமுல்படுத்துவதற்கு நிபந்தனைகளும் விதித்தார். இது அன்றைய நிலையில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியிருந்தாலும் ஐ.தே.க.அரசு ஜெனரல் சரத் பொன்சேகாவின் நிபந்தனைகளை ஏற்றதால் புலிகளால் பேச்சுகளைத் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டது.

வலி. வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களின் அளவைக் குறைப்பதாயின், புலிகளது ஆட்லறிகள் செயலிழக்கச் செய்யப்பட்டு அவை சர்வதேச கண்காணிப்பாளர்களின் கண்காணிப்பில் வைக்கப்படவேண்டுமென்றும் இவரே கூறியிருந்தார். அத்துடன் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலிருந்து படையினர் வாபஸ் பெறுவதற்கும் நிபந்தனை விதித்து தமிழ் மக்களின் கடும் கண்டனத்திற்குள்ளானார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே புதிய அரசுக்கு புலிகள் காலக்கெடுவை விதித்துள்ளனர். ஐ.தே.க.ஆட்சி கலைக்கப்படுவதற்கு முன்னர், இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை யோசனையை முன்வைத்தனர். இனிவரும் காலங்களில் இந்த யோசனையின் அடிப்படையில்தான் பேசுவோமெனவும் கூறியிருந்தனர். புலிகளின் இந்த யோசனையானது இலங்கையின் அரசியலமைப்புக்கு அப்பால் சென்று தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒற்றையாட்சி முறை குறித்தும் சமஷ்டி என்ற பேச்சுக்கு இடமேயில்லையெனக் கூறும் புதிய அரசு புலிகளின் தன்னாட்சி அதிகாரசபை யோசனையை ஏற்றுக்கொள்ளும் சாத்தியமேயில்லை. அதேநேரம், அரசின் நிலைப்பாட்டை புலிகளும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதால் பேச்சுக்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவாகவே தென்படுகின்றன.

இந்த நிலையில் போர்நிறுத்த உடன்பாட்டையும் திருத்தியமைக்க அரசு முயல்கிறது. பேச்சுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாயிருக்கையில் போர்நிறுத்த உடன்பாட்டையும் திருத்திவிட்டால் எப்படியிருக்கும்?

புதிய அரசின் நடவடிக்கைகள் போருக்கான சூழ்நிலையை வேகமாகத் தோற்றுவித்து வருகிறது. எதிரும் புதிருமாக நிற்கும் இரு தரப்புகள் எப்படிப் பேசப்போகின்றன. இவ்வாறானதொரு நிலையில் புலிகளின் காலக்கெடு எதனை உணர்த்தப்போகின்றது என்பதே மிகப்பெரும் கேள்வியாகும்.


விதுரன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..