பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow தமிழ்,முஸ்லிம் மக்கள் நிதானம் இழக்கக்கூடாது
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தமிழ்,முஸ்லிம் மக்கள் நிதானம் இழக்கக்கூடாது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 05 December 2005

வடக்கிலும் கிழக்கிலும் தொடரும் வன்முறைகள் மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. ஏலவே நீர்வேலியில் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து படையினருக்கும் பொது மக்களுக்குமிடையே முறுகல் நிலை தோன்றியதுடன் விரும்பத்தகாத சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

சாவகச்சேரியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் இராணுவ வீரர் ஒருவர் பலியாக நேர்ந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவங்களையடுத்து வீதியில் சென்ற பொது மக்கள் படையினரின் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர்.

இவை ஒருபுறமிருக்க திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோப்பூரில் கடந்த இரு தினங்களõகப் பதற்றம் நிலவுகின்றது.

நேற்று முன்தினம் இனம் தெரியாத ஆயுதபாணிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இராணுவத்தின் முன்னாள் துணைப்படை வீரர் ஒருவர் காயமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணிந்தபாடில்லை.

இரு இனங்களுக்கிடையே அநாவசியமாக முறுகல் நிலை தோன்றியிருப்பதுடன் பழிக்குப்பழி என்ற வகையில் வாள் வெட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இதனால் இரு தினங்களில் ஐவர் பலியாகியுள்ளதாக அறிய முடிகின்றது.

தமிழ் முஸ்லிம் மக்களின் உறவை சீர்குலைத்து வட கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தி, அனைவரது கவனத்தையும் வேறு திசையிலும் நோக்கத்திலும் செலுத்தும் பொருட்டு இவ்வாறான சம்பவங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான சூழ்ச்சி வலைகளுக்குள் தமிழ் முஸ்லிம் மக்கள் சிக்கி, நிதானம் இழக்கக்கூடாது. தமிழ் முஸ்லிம் உறவு ஒருபோதும் பிரிக்க முடியாததாகும்.

பண்பாட்டு ரீதியிலும் கலாசார ரீதியிலும் தமிழ் முஸ்லிம் மக்கள் பின்னிப் பிணைந்தவர்கள். ஒரு தாயின் இரு பிள்ளைகளாகவே அவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். எனவே அவர்களிடையே மோதலை உருவாக்கி அவர்களின் அபிலாஷைகள், நோக்கங்களை சிதறடிக்க இவ்வாறான தந்திரோபாயங்களில் எவரும் ஈடுபடலாம். எனவே அவற்றுக்கு இரையாகாமலும் துணை போகாமலும் தமிழ் முஸ்லிம் மக்கள் நிதானமாகச் செயற்பட வேண்டும்.

இந்த நாட்டில் ஆட்சியாளர்கள் எவரும் தமிழ் முஸ்லிம் மக்களை பிரித்துப் பார்ப்பது கிடையாது. தமிழ்பேசும் மக்கள் என்ற வகையில் சிறுபான்மை சமூகமாக ஒரே கண்ணோட்டத்துடனேயே நோக்கி வருகின்றனர். அந்த வகையில் ஏற்ற இறக்கங்களுக்கு இரு சமூகங்களுமே முகம் கொடுத்து வருகின்றன. எனவே இரு சிறுபான்மை இனங்களும் பிளவுபடுமானாலோ அன்றேல் மோதிக்கொள்ளுமானாலோ அதனால் சிறுபான்மை இனங்களே பெரிதும் பாதிக்கப்படவும் பலவீனப்படவும் நேரும்.

அவ்வாறானதோர் நிலைமைக்கு இடங்கொடுத்து தனது தலையில் தானே மண்ணை போடும் நிலைமைக்குச் சென்று விடாமல் சற்று ஆழமாகவும் நிதானமாகவும் சிந்தித்துப் பார்க்க இரு தரப்பினரும் முன்வர வேண்டும்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒருவரில் ஒருவர் தங்கியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். எனவே யதார்த்தத்தை உணர்ந்து இரு தரப்பினரும் சகோதர உணர்வுடன் வாழ திடசங்கற்பம் பூண வேண்டும்.

வடக்கிலும், கிழக்கில் காத்தான்குடியிலும், திருகோணமலை தோப்பூரிலும் நடைபெற்ற சம்பவங்களைப் பார்க்கும் பொழுது அமைதியைச் சீர்குலைக்க முயலும் சக்திகளின் திட்டமிட்ட நடவடிக்கையாக இவை இருக்கலாம் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

எப்படியேனும் நாட்டில் கலவரத்தை தூண்டி தங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒரு சிலர் திட்டமிட்டு செயற்படுவதாகவும் அதன் பின்னணியிலேயே இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதாகவும் கூறப்படுகின்றது.

புதிய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு சவால் விடும் வகையிலும் மீண்டும் யுத்தத்துக்கு வழிவகுக்கும் நோக்குடனும் நாட்டில் இருக்கும் அமைதியையும் இல்லாமல் செய்யும் நோக்குடனும் இவ்வாறான சம்பவங்களில் அமைதியை விரும்பாத சக்திகள் ஈடுபடலாம்.

எனவே, அரசாங்கம் பதற்றத்தை தணிக்க உடன் நடவடிக்கை எடுப்பதுடன் போதிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

அதேவேளை, வெறுமனே உணர்ச்சிகளுக்கு ஆளாகி தமிழ் முஸ்லிம் மக்கள் நிதானம் இழக்கக்கூடாது என்பதையும் நிலைமையை நன்கு ஆராய்ந்து பார்க்கவும், பொறுமை காக்கவும் முன்வர வேண்டும் என்பதையும் மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.


virakesari
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..