பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

அரசின் நிழல் யுத்தத்தை முறியடிக்க நிஜ யுத்தத்தை நாடும் தமிழ் மக்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 12 December 2005

* கிழக்கில் தமிழர்களையும் - தமிழர்களையும் மோதவிட்ட அரசு,  இப்போது தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோதவிடுகிறது

நாட்டில் மீண்டும் யுத்தம் வெடித்து விடுமோ என்றதொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதியின் பதவியேற்பும் புதிய அரசின் நிலைப்பாடும் இவ்வாறானதொரு சூழ்நிலையை ஏற்படுத்தி வருவது போல் தோன்றுகிறது. வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சம்பவங்களால், யுத்தம் படிப்படியாக உருவாகி வருவதாகவும் மக்கள் கருதுகின்றனர்.

மக்கள் போராட்டங்கள், படையினருக்கும் பொது மக்களுக்குமிடையிலான முறுகல் நிலைகள், ஆர்ப்பாட்டங்கள், இடைக்கிடையே நடைபெறும் கைக்குண்டு வீச்சு - துப்பாக்கிச் சூடு என்பன மாறி கிளேமோர் தாக்குதல் வரை நிலைமை சென்றுவிட்டதால், யுத்தம் வெடித்துவிடப் போவதாகவே பலரும் கருதுகின்றனர்.

ஜனாதிபதி சந்திரிகா கால நிழல் யுத்தத்திற்கு, தற்போதைய ஜனாதிபதியின் நிலைப்பாடு தீனி போடுகிறது. சமாதானத்திற்கான வாய்ப்பைவிட இவரது கொள்கைகள் சண்டைக்குரியனவாகவேயிருப்பதால் நிழல் யுத்தமும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் தொடர்ந்த நிழல் யுத்தமும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் தொடர்ந்த நிழல் யுத்தம் வடக்கிலும், குறிப்பாக யாழ்ப்பாணத்தையும் தொடவே அங்கு கடுமையான எதிர்விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

ஜனாதிபதி சந்திரிகாவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தபோது வடக்கு - கிழக்கெங்கும் துணைப் படைகளாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் புலிகளிடமிருந்து ஆயுதப் பயிற்சி பெற்றனர். இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வென்பது சாத்தியப்படாதெனவும் போரே இப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வெனவும் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து கோஷங்கள் எழுந்தன.

பொங்கு தமிழ் நிகழ்வுகளிலும் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடுகளிலும் மக்களின் உணர்வுகள் தெளிவாக வெளிப்பட்டன. போருக்கான அறைகூவலை புலிகளுக்குப் பதிலாக வடக்கு - கிழக்கெங்கும் மக்கள் விடுத்தபோது அதனை இலங்கை அரசு அலட்சியப்படுத்தியது. அவர்களது அபிலாஷைகளை தொடர்ந்தும் புறக்கணித்தபோது, ஆயிரக்கணக்கில் மக்கள் புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றனர். குறிப்பிட்ட கால ஆயுதப் பயிற்சியின் பின் சுமார் 25,000 பேர் துணைப் படைகளாக உருவெடுத்தனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சேர்ந்தவர்களைப் போல் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் ஆயுதப் பயிற்சி பெற்றனர். யுத்தம் தான் எமது பிரச்சினைக்கு இறுதித் தீர்வென்ற உணர்வுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான மக்கள் இன்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளினுள்ளும் இருக்கின்றனர். இதனை அண்மைக்கால சம்பவங்களின் போது அரசும் படைத்தரப்பும் உணர்ந்துள்ளன.

கிழக்கில் தொடரும் நிழல் யுத்தத்தை குடாநாட்டினுள்ளும் நகர்த்த முற்பட்டபோது இதற்கான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. கிளேமோர் குண்டுகள் மூலம் பதிலடி கொடுக்குமளவிற்கு நிலைமை எழுந்துள்ளது. இதன் அடுத்த கட்டம் என்ன என்பது இந்தக் கிளேமோர் தாக்குதல்கள் மூலம் உணரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முப்படைத் தளபதிகளையும் கூட்டுப் படைகளின் தளபதியையும் கொழும்பில் ஒன்றாக அமர வைத்து, படைகள் எதற்கும் தயார்; போரென்று வந்தால் புலிகளைத் தோற்கடிப்போமென அரசு சவால் விட்டுள்ளது.

புதிய அரசினதும் புதிய ஜனாதிபதியினதும் நிலைப்பாடு சமாதானத்துக்குரியதல்ல என்று எதிர்க்கட்சிகளே பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டும் நிலையில், போர் மூலம் தான் இறுதித் தீர்வென்ற நிலைக்கு வந்துவிட்ட தமிழ் மக்கள் மத்தியில் நிழல் யுத்தம் எந்தளவிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதென்பதை குடாநாட்டு நிலைமைகள் நன்கு தெளிவுபடுத்தியுள்ளன.

ஆனாலும், வடக்கு நிலைமைகளுக்கு, வழமைபோல் புலிகளையே அரசு குற்றஞ்சாட்டுகிறது. அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட புலிகள் குடாநாட்டிலிருந்து வெளியேற, படையினர் மீது தாக்குதல்களைத் தொடுப்பதற்காக புலிகளின் அணிகள் குடாநாட்டிற்குள் வந்துள்ளதாக புதிய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேக்கா கூறியுள்ளார்.

பாடசாலை அதிபர்களின் கொலை, மாவீரர் தின நிகழ்வுகளில் ஈடுபட்டோர் மீதான துப்பாக்கிச் சூடுகள், நீர்வேலியில் இருவர் படுகொலை செய்யப்பட்டமையென்பனவெல்லாம், குடாநாட்டில் படையினருக்கெதிரான தாக்குதல்களாக வெளிப்பட்டுள்ளன. மாணவர் சமூகமும் இவ்வேளையில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றது.

புலிகள் தான் இத்தாக்குதல்களின் பின்னணியிலிருப்பதாகப் படையினர் கூறினாலும் மக்களும் மாணவர்களும் பல்வேறு பகுதிகளிலும் திரெண்டெழுந்து படையினருடன் மோதுவதை எவரும் மறந்துவிடக்கூடாது. படையினரின் பதில் தாக்குதல்களிலெல்லாம் பாதிக்கப்பட்ட அனைவரும் பொதுமக்களும் மாணவர்களுமே என்பதை வைத்தியசாலை புள்ளி விபரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

புதிய ஜனாதிபதி பதவியேற்ற பின் அவரது கொள்கைப் பிரகடனங்களும், உரைகளும் யுத்த சூழ்நிலையொன்றை தோற்றுவித்து வருவதாக எதிர்க்கட்சிகளே பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டி வருகின்றன. அதற்கேற்ப கடும் போக்கான பிரதமரும் கடும் போக்கான இராணுவத் தளபதியும் நியமிக்கப்பட்டதுடன் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஆலோசகர்களாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கொட்டகதெனியவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் பங்காளிக் கட்சிகளான ஜே.வி.பி.யும், ஜாதிக ஹெல உறுமயவும் நோர்வேயை இங்கிருந்து அப்புறப்படுத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. நோர்வேயின் பங்களிப்பை வரையறை செய்யவும் முற்படுகின்றன. முன்னைய தங்களது எதிரிகளெல்லாம் தற்போது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்களென்பதால் அவர்களையெல்லாம் செங்கம்பளம் விரித்து வரவேற்கவும் ஜே.வி.பி. தயாராகிவிட்டது.

இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கைக்கு எதிராகவும் இந்தியப் படையினர் வருகையை எதிர்த்தும் தெற்கில் ஆயுதக் கிளர்ச்சியை நடத்தியவர்கள் ஜே.வி.பி.யினர். ஒரு இலட்சம் சிங்களவர் கொல்லப்படவும் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போவதற்கும் காரணமானவர்கள் இவர்கள். இந்தியப் படையுடன் புலிகள் போரில் குதித்தபோது, புலிகளே தேச பக்தர்களெனக் கூறியெல்லாம் புகழாரம் செய்தவர்கள்.

இன்று, அந்த இந்தியாவின் வருகைக்காக தவமிருக்கிறார்கள். நோர்வேயை அனுசரணைப் பணியிலிருந்து அல்லது போர் நிறுத்தக் கண்காணிப்புப் பணியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமென்பதில் ஜே.வி.பி. தீவிரம் காட்டுகிறது. ஜனாதிபதி மகிந்தவின் சிந்தனையும் அவ்வாறே உள்ளதால் நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது.

இதனால் தான் இலங்கைக்கான தனது அவசர விஜயத்தை கைவிட்ட நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இந்தியா சென்றிருந்தார். அங்கு இந்தியத் தலைவர்களின் நிலைப்பாட்டை அறிந்துகொண்டார். இலங்கையில் அனுசரணை முயற்சிகளில் ஈடுபடும் எண்ணம் எதுவும் உண்டா, இல்லையா என்பதை வெட்டொன்று துண்டு இரண்டாக அறிந்துகொண்டார். மீண்டும் கையை சுட்டுக்கொண்டு அவமானப்படத் தாங்கள் தயாரில்லை என்பதை இந்தியா நோர்வேயிடம் தெளிவாகக் கூறிவிட்டது.

இதன் பின்பே கடந்த வெள்ளிக்கிழமை மிகவும் தாமதமாக நோர்வேயின் அனுசரணைக்கு ஜனாதிபதி மகிந்த அழைப்பு விடுத்தார். ஜே.வி.பி.யின் பிடியிலேயே ஜனாதிபதி இருப்பதை இது தெளிவுபடுத்துகிறது. அத்துடன், இலங்கை அரசின் இந்த நிலைப்பாடுகள் நோர்வேயை எச்சரிப்பது போலுமுள்ளது. அதனால் தான், அனுசரணை முயற்சிக்காக நோர்வே அரசு சம்பந்தப்பட்ட இரு தரப்பிற்கும் சில முக்கிய நிபந்தனைகளை விதிக்கவுள்ளது.

அந்த நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில் நோர்வே தனது பணியைக் கைவிட்டு வெளியேறத் தயங்காதென்பது தெளிவாகியுள்ளது. சர்வதேச சமூகமும் நோர்வேயின் பணிக்கு பூரண ஆதரவு வழங்குவதால், அனுசரணைப் பணியிலிருந்து நோர்வே விலகும் பட்சத்தில் இலங்கையில் யுத்தம் வெடித்தால் அதனைக் காணாது விட்டு விடலாமென்ற சூழ்நிலையும் தோன்றியுள்ளது.

இந்திய தரப்பினருடனான சந்திப்பின் போது கிழக்கில் இடம்பெறும் நிழல்யுத்தம் குறித்தும் எரிக் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியிருந்தார். கருணா குழுவை ஆதரித்து முழு நிலைமையையும் மோசமடைய இலங்கை அரசு வழிவகுப்பதாக இந்தியாவும் நோர்வேயிடம் தெரிவித்துள்ளது. நிழல் யுத்தத்தை, அரசின் பூரண ஆதரவுடன் படைகள் முன்னெடுத்துச் செல்வதை நோர்வேயும் இந்தியாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

இந்த நிழல் யுத்தம் குறித்து நாட்டில் முஸ்லிம்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டுமெனப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிழக்கில் கருணா குழுவென்ற பெயரில் தமிழர்களையும் தமிழர்களையும் மோதவிடும் நிழல் யுத்தம், இன்று தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோதவிடப் பயன்படுத்தப்படுவதை முஸ்லிம்கள் உணராதது குறித்து தமிழ் மக்கள் கவலை கொண்டுள்ளனர். இதற்கு துணை போகும் முஸ்லிம் அரசியல்வாதிகள் குறித்தும் புலிகள் எச்சரித்துள்ளனர்.

வடக்கு - கிழக்கை பிரிக்க வேண்டுமென்பதில் ஜே.வி.பி. தீவிரம் காட்டுகிறது. ஜனாதிபதி மகிந்தவும் இதற்கு ஆதரவு வழங்குகிறார். இந்தப் பிரதேசங்களைப் பிரிக்க வேண்டுமானால் தமிழர்களிடமிருந்து முஸ்லிம்களை தனிமைப்படுத்த வேண்டுமென்பதையும் இவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். கருணா விவகாரத்தைப் பயன்படுத்தி கிழக்கு தமிழ் மக்களைப் பிரிக்க முயன்ற சதியிலிருந்து அவர்களைப் புலிகள் மீட்டுள்ள நிலையில் தமிழ் மக்களையும் முஸ்லிம்களையும் புலிகள் மோதவிடுவார்களா என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.

வடக்கு - கிழக்கின் ஒற்றுமைக்கு தமிழ், முஸ்லிம்களின் ஒற்றுமை மிக மிக அவசியமென்பதை புலிகள் மட்டுமன்றி தமிழர்களும் நன்குணர்ந்துள்ளனர். ஆனால், தமிழர்களதும் முஸ்லிம்களதும் ஒற்றுமை வடக்கு- கிழக்கு இணைப்பை மேலும் பலப்படுத்துமென்பதை சிங்களப் பேரினவாதிகள் நன்குணர்ந்துள்ளனர். சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வெனவும் தாயகப் பிரதேசமென்று எவருக்குமில்லையெனக் கூறும் புதிய அரசு, தமிழ் - முஸ்லிம் பிளவின் மூலம் வடக்கு - கிழக்கைப் பிரித்து சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லாது செய்து விடத் தீவிரம் காட்டுகிறது.

முஸ்லிம்கள் இதனை நன்குணர்வது அவசியம். கிழக்கில் தமிழர்களையும் தமிழர்களையும் மோதவிடுவோர், ஏன் தமிழர்களையும் சிங்களவர்களையும் மோதவிடமாட்டார்களென்ற கேள்வியை முஸ்லிம்கள் தங்களுக்குள் எழுப்ப வேண்டும். கிழக்கில் முஸ்லிம் ஒருவர் தாக்கப்பட்டால் பதிலுக்குத் தமிழர்களை இலக்கு வைக்க வேண்டுமென்பதை விட, இதற்கு சிங்களப் பேரினவாதிகளும் அவர்களால் தூண்டப்படும் படைகளும் ஏன் காரணமாயிருக்க மாட்டார்களென்பதை அறிய முற்பட வேண்டும்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் அவர்களோடு இணைந்து செயற்படும் கருணா குழுவினரும் அண்மைக் காலமாக தமிழ் முஸ்லிம் மோதலைத் தூண்டி வருவதைப் புலிகள் நிரூபித்துள்ளனர். கஞ்சிகுடிச்சாறுப் பகுதியில் கருணா குழுவின் இனியபாரதி உட்பட நால்வரைக் கொன்று விட்டு புலிகளிடம் சரணடைந்த இரு போராளிகள், இவர்களது திட்டங்களை அம்பலப்படுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்தே இவர்களில் ஒருவரது குடும்பத்தை கருணா குழுவினர் அழித்துள்ளனர்.

தங்கள் குழுவிலிருந்து எவராவது தப்பிச் சென்று புலிகளுடன் சேர்ந்தால் அவர்களது குடும்பங்களுக்கு என்ன நடக்குமென்பதை மறைமுகமாக எச்சரிக்கும் நோக்கிலும் வந்தாறுமூலையில், கருணா குழுவால் ஒரு குடும்பம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் கிழக்கில் அடிக்கடி நடைபெறும் நிலைமையும் இதன் மூலம் உருவாகியுள்ளது.

இவ்வாறு தமிழர்களுக்கும் தமிழர்களுக்குமிடையே மோதல்களையும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே மோதல்களையும் தொடர்வதைத் தடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை புலிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், நிழல் யுத்தத்தை தொடர்வதன் மூலம் பல்வேறு இலாபங்களைப் பெற முடியுமென்பதை சிங்களப் பேரினவாதிகள் புரிந்து கொண்டுள்ளதால் போர்நிறுத்த உடன்பாட்டை முழுமையாக அமுல்படுத்தாது அதனைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைத்து நிழல் யுத்தத்தை மேலும் தொடரவே விரும்புகின்றனர்.

இதேநேரம், பேரினவாதிகளின் இந்தக் கபடத் திட்டங்களைத் தவிடு பொடியாக்க வேண்டிய கட்டாய தேவை புலிகளுக்குள்ளது. மீண்டுமொரு போரின் மூலமே பேரினவாதிகளின் திட்டங்களை முறியடிக்க முடியும். அதனாலேயே தற்போதைய நிழல் யுத்தத்தை முறியடிப்பதற்காக புலிகள் நிஜ யுத்தத்தைத் தொடங்க வேண்டுமென்ற கருத்து தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் வலுப்பெற்றுள்ளது.

வடக்கு -கிழக்கில் முக்கிய பிரதேசங்களை புலிகள் கைப்பற்றுவதன் மூலமே பல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமென மக்கள் கருதுகின்றனர். கிழக்கிலும் மேலும் பல பிரதேசங்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் வருமானால் தமிழர்களுக்கும், தமிழர்களுக்குமிடையிலான நிழல் யுத்தமும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான நிழல் யுத்தமும் முடிவுக்கு வருமெனவும் கருதப்படுகிறது.

தற்போதைய அரசு நிழல் யுத்தத்தைத் தீவிரப்படுத்தி இனக்கலவரங்களை தூண்டி போராட்டத்தை மேலும் பலப்படுத்த முற்படுகிறது. யாழ்.குடாநாட்டில் நடைபெற்ற கிளேமோர் தாக்குதல்கள் உட்பட சிறுசிறு தாக்குதல்கள் கூட, இங்கு நிழல் யுத்தத்தை விஸ்தரித்தால் பதில் நடவடிக்கை எப்படியிருக்குமென்பதை உணர்த்தியுள்ளது.

இதன் மூலம் நிழல் யுத்தத்தையும் தாயகக் கோட்பாட்டையும் சுய நிர்ணய உரிமையையும் வலியுறுத்த ஒரு நிஜ யுத்தம் அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.


vithuran
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..