|
இனப் பிரச்சினைக்கான அமைதி முயற்சியில் சிறிலங்கா அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் சில நிபந்தனைகளை முன்வைத்தே செயற்படப்போவதாக நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்ஹெய்ம் தெரிவித்துள்ளமை சிறிலங்கா அரசதரப்பில் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இது இராஜதந்திர வழிமுறைகளுக்கு அப்பாற்பட்டதொன்று எனவும், அனுசரணையாளராகச் செயற்படும் ஒரு நாடு சம்பந்தப்பட்ட அரசு மீது இவ்வாறு நிபந்தனைகளை விதிப்பதென்பது வரம்பு மீறிய செயல் என்பதுமே சிறிலங்கா அரசின் நிலைப்பாடாகும்.
நோர்வேயின் இத்தகைய நிலைப்பாடானது இராஜதந்திர வழிமுறைக்கு உட்பட்டதா? இல்லையா? என்பது ஒருபுறம் இருக்க, சிறிலங்கா அரசுடன் இராஜந்திர வழிமுறைகளுக்கு உட்பட்ட வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியுமா? என்பது முக்கியமானதொரு கேள்வியாகும். ஏனெனில், சிறிலங்கா ஆட்சியாளர்கள் சில வேளைகளில் இராஜதந்திர வழிமுறைகள் என்றால் கிலோ என்ன விலை? எனக் கேட்கக்கூடியவர்கள். சிறிலங்கா அரசாங்கத்துடன் நோர்வே அரசிற்கும் நிரம்பிய பட்டறிவுண்டு. ஒரு வகையில், நோர்வே அரசு - குறிப்பாக, அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்ஹெய்ம் நிபந்தனை முன்வைக்கப் போவதாகக் கூறிக் கொண்டமை கூட அவர் நேரடியாகப் பெற்றுக் கொண்ட அனுபவத்தின் காரணமாகவும் கூட இருக்கலாம். ஏனெனில், சிறிலங்கா அரச தரப்பால் இராஜதந்திர வழிமுறைகளையும் மீறி அதிக அளவில் அவமானப்பட்டுக் கொண்டவர் அவராவார். இராஜதந்திர வழிமுறைஃ அணுகு முறை என்பதில் நேரடிப் பேச்சுக்கள் மூலம் இருதரப்பும் எழுதப்படாத சில உடன்பாடுகளுக்கு வருதல் என்பதும் ஒன்று. இத்தகைய உடன்பாட்டிற்கு பின்னர் இரு தரப்பினரும் இதற்கு விசுவாசமாக நடந்து கொள்ளுதலும் அவசியமானதாகும். ஆனால், சிறிலங்கா ஆட்சியாளர்களுடன் இவ்வாறு நடந்து கொள்ளுதல் என்பது சாத்தியப்படானதல்ல. ஏனெனில், அவர்கள் இராஜதந்திர வழிமுறையிலான இணக்கப்பாடு தொடர்பாக மட்டுமல்ல, கையொப்பமிடப்பட்ட உடன்பாட்டில் கூட விசுவாசமாக நடந்துகொள்வதில்லை. இதேவேளை, சிறிலங்கா ஆட்சியாளர்கள் இராஜதந்திர ரீதியிலான பண்புகளுடன் செயற்படுபவர்களாகவும் இருந்ததில்லை. சிறிலங்காவின் தற்போதைய பிரதம மந்திரி ரட்ணசிறி விக்கிரமநாயக்க, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லகஸ்மன் கதிர்காமர், முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க போன்றவர்களுடன் நோர்வேக்கு ஏற்பட்ட அனுபவமே இவர்களின் இராஜதந்திர பண்புகள் எத்தகைய என்பதை வெளிப்படுத்துவதற்குப் போதுமானதாகும். அது மாத்திரமல்ல, விருந்தினர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது, அவர்களின் கௌரவத்தைப் பாதுகாப்பது என்பதைக்கூட சிறிலங்கா ஆட்சியாளர்கள் கடந்த காலத்தில் புரிந்து கொண்டு செயற்பட்டதாக இல்லை. எடுத்துக்காட்டாக சமாதான ஏற்பாட்டாளராக அழைக்கப்பட்ட நோர்வேத்தரப்பை ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் பௌத்த அடிப்படைவாத அமைப்புக்கள் அவமானப்படுத்திய போதும், ஆட்சியாளர்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை. மறைமுகமாக ஊக்கமளிக்கவே செய்தனர். இந்த வகையில், இராஜதந்திர வழிமுறைகள்ஃ பண்புகள் என்பனவற்றிற்கு அப்பாற்பட்டவிதத்தில் சிறிலங்கா ஆட்சியாளர்கள் நடந்துகொண்டமைக்காகவே நோர்வே அரசும் சமாதான முயற்சிகளில் தாம் பங்கேற்பதானால், நிபந்தனையுடன் கூடியதாகவே அது இருக்கும் என நிபந்தனை விதித்துள்ளது. இந்நிலையில், சிறிலங்கா அரசாங்கம் இதில் ஆத்திரப்பட எதுவுமில்லை. இது மாத்திரமல்லாது சமாதான முயற்சிகளில் ஏற்பாட்டாளர்களாகச் செயற்படுவர்கள் ஒருதலைப்பபட்சமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டும் என எதிர்பார்க்கும் சிறிலங்கா ஆட்சியாளர்கள் எவ்வாறு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாட்டாளராகச் செயற்படுபவர்கள் தமது கௌரவத்தைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இராஜதந்திர வழிமுறைக்கு அப்பாற்பட்டதெனக் கூறமுடியும்? நோர்வே அரசு சிறிலங்கா ஆட்சியாளர்களிடம் விதிக்கும்ஃ கோரும் நிபந்தனைகளுக்கு இரண்டு வகைப்பட்ட காரணங்கள் உள்ளன. 01) நோர்வே அரசும், அதன் சமாதான ஏற்பாட்டாளர்களும் கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட அனுபவம். 02) தற்போதைய புதிய அரசின் இனப் பிரச்சினை தொடர்பான நிலைப்பாடு. இதில் முதலாவது காரணி பற்றி விபரிப்பதென்பது அதிகம் தேவையற்ற தொன்று. ஏனெனில், அவை அடிக்கடி கூறப்பட்ட விடயங்களாகவும், பல இடங்களில் இருந்தும் அறியப்பட்டவையுமாகும். இருப்பினும், நோர்வேத் தரப்பை அழைத்து விட்டு அவர்களின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமலும், அவர்களை அவமரியாதை செய்யும் வகையிலும், அவர்கள் தேசத்தையும், மக்களையும் அவமானப்படுத்தும் வகையிலும் நடந்துகொண்டவற்றையும் சுட்டிக்காட்டமுடியும். எடுத்துக்காட்டாக, கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்தின் முன்பாக நோர்வேயின் தேசியக்கொடியை எரித்தமை, நோர்வே மக்களை பச்சை மீன் தின்னிகள் என ஏசியமை, சமாதான ஏற்பாட்டாளராகச் செயற்பட்டு வந்தவர்களை வெள்ளைப்;புலிகள் என அவதூறு பேசியமை என்பன நோர்வே அரசின் கௌரவத்தைப் பாதிக்கும் விடங்களாகவே கொள்ளத்தக்கதாகும். நோர்வே அரசை சமாதான ஏற்பாட்டாளராக அழைத்தவர்கள் சிறிலங்கா ஆட்சியாளர்கள். நோர்வேயின் சமாதான முயற்சிகள் ஏற்புடையதாக இல்லை எனக் கருதின் அவர்களை இவ்விடயத்தில் இருந்து வெளியேறுமாறு கோருவதே இராஜதந்திர வழிமுறையும், அரசியல் நாகரிகமுமாகும். ஆனால், சிறிலங்கா ஆட்சியாளர்கள் அவ்வாறு நடந்துகொண்டதாக இல்லை. நோர்வே அரசை இழிவுபடுத்தவே முற்பட்டனர். இதன் மூலம் நோர்வே தானாகவே வெளியேற வேண்டும் என்றே கருதுகின்றனர். இதில் கூட சிறிலங்கா அரசு இலக்கு ஒன்றுடனேயே செயற்பட்டது. அதாவது, நோர்வே தானாக வெளியேறும் பட்சத்தில் அதற்கான பொறுப்பைத் தான் ஏற்க வேண்டியதாக இருக்கமாட்டாது. ஆகையினால், மேற்குலகிலும் சரி, அதற்குவெளி உலகிலும்; சரி சமாதான முயற்சிகளை தாம் குழப்பியடித்தமைக்கானதொரு தோற்றப்பாடு உருவாகாது தடுத்து விடலாம் என்பதே அதன் குறியாக இருந்தது. இதேவேளை நேர்வேத்தரப்பை மீண்டும் ஏற்பாட்டாளராகப் பணியாற்றுமாறு சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முழு விருப்பத்துடன் அழைத்ததாகவும் இல்லை. இந்தியாவை சமாதான ஏற்பாட்டாளராகச் செயற்பட வைக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்த நிலையிலேயே இத்தகையதொரு முடிவுக்கு மகிந்த ராஜபக்ஷ வரவேண்டியதாக இருந்தது. அதாவது, சிறிலங்கா அரசின் விருப்பத்திற்குரிய நண்பராக இன்னும் நோர்வே இல்லை. இந்நிலையில், மீண்டும் அழைக்கப்பட்ட நோர்வே அரசு தனது நாட்டினதும் மக்களினதும் கௌரவத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் நிபந்தனை முன்வைப்பது என்பது தவிர்க்க முடியாத hகவே இருக்கும். இரண்டாவதாக இனப்பிரச்சினை தொடர்பான தற்போதைய அரசின் நிலைப்பாடு அறியப்பட வேண்டியதாக உள்ளது. ஏனெனில், கடந்த அரசாங்கத்தினதும், (முன்னாள் சனாதிபதி சந்திரிகா தலைமையிலானது) அதற்கு முந்தைய அரசாங்கத்தினதும் (ரணில் விக்கிரமசிங்க தலைமையிலானது) இனப் பிரச்சினை மற்றும் யுத்தநிறுத்தம் தொடர்பானதுமான நிலைப்பாட்டிற்கும் தற்போதைய மகிந்தராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கும் இடையில் பாரிய இடைவெளியும், முரண் பாடும் உள்ளன. இதில் முக்கியமானவையாக, 01) யுத்த நிறுத்த உடன்பாட்டை மாற்றிஅமைத்தல் 02) ஒற்றையாட்சி முறைக்குள் தீர்வு. 03) சமாதான ஏற்பட்டாளராக நோர்வே பங்கேற்பது குறித்து அரசை ஆதரிக்கும் கூட்டாளிக் கட்சிகளின் நிலைப்பாடு என்பன குறிப்பிடத்தக்கவை. இதில் முதலாவதாக யுத்த நிறுத்த உடன்பாட்டை மாற்றி அமைத்தல் என்பது நோர்வேத்தரப்புடன் இரு வகையில் தொடர்புபடுகின்றது. ஒன்று இவ்யுத்த நிறுத்த உடன்பாட்டை நோர்வேத்தரப்பு முற்றாக ஆதரிக்கின்றது. இவ்யுத்த நிறுத்த உடன்பாடுமாற்றி அமைக்கப்பட வேண்டியதில்லை என்பது அதன் நிலைப்பாடாகும். இன்று யுத்த நிறுத்த உடன்பாடு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளமை யுத்தநிறுத்த உடன்பாட்டில் உள்ள தவறு காரணமாக அல்ல. யுத்த நிறுத்த உடன்பாடு சீராக அமுல் செய்யப்படாமல் இருப்பதே காரணம் என்பது நோர்வேயின் அபிப்பிராயமாகும். இந்த நிலையில், யுத்த நிறுத்த உடன்பாடு மாற்றி அமைத்தல் என்பது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து நோர்வே அரசாங்கத்துடன் முடிவொன்றிற்கு வரவேண்டியதாகவுள்ளது. ஏனெனில், யுத்த நிறுத்த உடன்பாட்டின் பிரகாரமே நோர்வேத் தரப்பு சமாதானப் பேச்சுவார்த்தையிலும், யுத்த நிறுத்தக் கண்காணிப்பிலும் கணிசமான பங்களிப்பை ஆற்ற வேண்டியதாகவுள்ளது. அடுத்ததாக, இனப் பிரச்சினைக்கு ஒற்றையாட்சி முறைக்குள் தீர்வு என அரசாங்கம் தனது கொள்கைப் பிரகடனத்தில் தெரிவித்துள்ளமை தொடர்பானதாகும். அதாவது, இனப் பிரச்சினைத்தீர்விற்கு சமஷ்டி முறையிலான - அதாவது தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் அடிப்படையில் தீர்வை எட்டுதல் என்பது தொடர்பாகவே முன்னைய பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு, சர்வதேச சமூகமும் சமஷ்டி ஆட்சி முறையையே தீர்விற்குப் பொருத்தமானதெனக் கருதுகின்றன. ஆனால், சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவோ ஒற்றையாட்சி முறைக்குள்ளாகவே தீர்வு, தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற பேச்சிற்கே இடமில்லை என பல தடவை தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக அரசு எத்தகைய நிலைப்பாட்டுடன் செயற்படப் போவதாக அறிந்துகொள்வதும் நோர்வேத் தரப்பின் கடப்பாடாகவுள்ளது. சில வேளைகளில் நோர்வேத் தரப்பும் சரி, சர்வதேசமும் சரி ஒற்றையாட்சி முறைக்குள் தான் தீர்வு என்ற அரசாங்கத்தின் கொள்கையை ஏற்றுக்கொண்டாலும் கூட அதில் எந்தவிதமான முன்னேற்றமும் காணப்பட முடியாது என நோர்வே அரசிற்கு நன்கே தெரியும். அதாவது விடுதலைப் புலிகளுடனான பட்டறிவு அவர்களுக்கு இதனைத் தெளிவுபடுத்தியிருக்கும் ஆகையினால், தனது காலத்தையும், பொருளாதாரத்தையும் விரயம் செய்து மேற்கொள்ளப்படும் சமாதான முயற்சியில் முன்னேற்றம் காணக்கூடியதான ஏது நிலைகள் ஏதும் உண்டா? அவை குறித்து சிறிலங்கா அரசாங்கம், ஆட்சியாளர்கள் அளிக்கக்கூடிய உத்தரவாதங்கள் என்ன என்பதை அறிய வேண்டிய தேவை நோர்வேக்கு உண்டு. ஏனெனில், அதனை அடி ஒற்றியே நோர்வே ஏற்பாட்டாளராகச் செயற்படுவதா? இல்லையா? என்ற தீர்மானத்திற்கு வர முடியும். இறுதியாக அரசை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகளின் இனப்பிரச்சினை தொடர்பான நிலைப்பாடு என்ன? அது குறித்து ஆளும் கட்சியின்ஃ தலைமையின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்தும் நோர்வே அரசு தெளிவான முடிவினைஃ உத்தரவாதத்தினை ஆட்சியாளரிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமான தாகவுள்ளது. ஏனெனில், ஆட்சியாளர்கள் இன்று சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளமையும், நோர்வேயை சமாதான ஏற்பாட்டாளராக பணிபுரிய அழைத்தமையும் வெளிநாட்டு, உள்நாட்டு அழுத்தங்களின்; காரணமாகவே என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், சிறுபான்மையான அரசாங்கத்திற்கு ஆதரவளித்துவரும் கூட்டாளிகளான ஜே.வி.பி.யும், ஜாதிக ஹெல உறுமயவும் அரசின் நிலைப்பாட்டை எதுவரையில் ஆதரிப்பார்களெனக் கூறுவதற்கில்லை. ஆகையினால், இக்கட்சிகளின் நிலைப்பாடும் - இக்கட்சிகள் தொடர்பாக அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடு தொடர்பாகவும் நோர்வேத்தரப்பு அறிய முற்படுவதில் தவறு எதுவும் இருப்பதாகக்கொள்ள முடியாது. ஏனெனில் அரசின் கூட்டாளிகளினால், நோர்வேத்தரப்பு பல தடவை அவமானப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, அரசாங்கத்தின் கூட்டாளிகளாக இருப்பவர்கள் அரசாங்கம் கூறும் இராஜதந்திர வழிமுறைகளுக்கோ, அரசியல் நாகரிகத்திற்கோ உட்பட்டுச் செயற்படுபவர்களாகவும் இல்லை. இந்நிலையில். நோர்வேத் தரப்பு சமாதான ஏற்பாட்டாளர்களாக மீண்டும் செயற்படத் தொடங்குவதற்கு முன்பாக - தனது நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் சமாதான முயற்சிகளுக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் வேறுவிதமாகக் கூறின் சில உத்தரவாதங்களின் பின்னர் செயற்பட முடிவெடுத்ததில் தவறில்லை என்றே கூறலாம். இதேவேளை நோர்வே அரசின் செயற்பாடு இராஜதந்திரச் செயற்பாடுகளுக்கு மாறானதென்ற குற்றச்சாட்டும் பொருத்தப்பாடானதாகத் தெரியவில்லை. ஏனெனில், இராஜதந்திர நடைமுறைகள் அரசியல் நாகரிகம் என்பனவற்றைக் கடைப்பிடிக்கும் அரசு ஒன்றே அது குறித்துப் பேசுவதற்கு அருகதை உடையதாகும்.
ஜெயராஜ்
|