பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

ஜப்பானை நுழையவிடாது தடுப்பதற்கு நோர்வேயை முன்னிறுத்தும் இந்தியா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 21 December 2005

மேற்கு நாடுகளின் செல்வாக்கை குறைக்க இலங்கைக்கு இந்தியாவின் அழுத்தம்!

இலங்கையில் மீண்டும் யுத்தம் வெடிக்கலாமென்ற எதிர்பார்ப்பின் மத்தியில் சமாதானப் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கு புதிய ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். எனினும் சமாதானப் பேச்சுக்கான வாய்ப்புகள் குறித்துத் தொடர்ந்தும் கேள்வி எழுப்பப்படுகிறது. யுத்தத்திற்குரியதொரு அரசாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் அரசு பார்க்கப்படும் சூழ்நிலையில் சமாதானத்திற்கான வாய்ப்பு எப்படி உருவாகுமெனப் பலரும் வினாத் தொடுக்கின்றனர்.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், இனப்பிரச்சினைக்கு சமாதான ரீதியில் தீர்வொன்றைக் காணும் முயற்சிகளை ஊக்குவிக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவாயிருப்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இலங்கையில் போர்நிறுத்த காலத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் சமாதான முயற்சிகளை கேள்விக் குறியாக்கிவிட்டன.

ஐக்கிய தேசியக் கட்சி அரசு விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட போர்நிறுத்த உடன்பாடானது நாட்டில் சமாதானத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தியபோதும் அந்தப் போர்நிறுத்த உடன்பாட்டைப் பயன்படுத்தி இன்று மேற்கொள்ளப்படும் நிழல் யுத்தமானது, நிஜப் போரொன்றுக்கு வழி வகுத்து வருகிறது. அதேநேரம், சமாதான முயற்சியில் அனுசரணைப் பணியிலீடுபட்ட நோர்வேயை அதிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சிகளும் தீவிரமடைகின்றன.

காலத்தை இழுத்தடித்து சமாதான முயற்சிகளைக் குழப்பும் நோக்கிலேயே இவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலிகளுடன் ஐ.தே.க.அரசு நேரடிப் பேச்சுகளை ஆரம்பித்த போதிலும், பேச்சுகளில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை ஐ.தே.க. அமுல்படுத்த தவறியதால் பேச்சுகள் முறிந்துபோனது.

மீண்டும் பேச்சுகளை ஆரம்பிக்க புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை யோசனை ஐ.தே.க.அரசுக்கும், அடுத்து வந்த ஜனாதிபதி சந்திரிகாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசுக்கும் ஏற்புடையதாயிருக்கவில்லை.

இந்த நிலையில் தான் நிழல் யுத்தம் ஆரம்பமானது. அரசின் பூரண ஆதரவுடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவும் தமிழ்க் குழுக்களும் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் நிழல் யுத்தத்தை தீவிரப்படுத்தின. இது இன்று நிஜப் போருக்கே வழிவகுத்துள்ளது.

வடக்கு - கிழக்கை பிரிக்கும் நோக்கில் இந்த நிழல் யுத்தம் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. ஒருபுறம் தமிழர்களையும் தமிழர்களையும் மோதவிடும் அதேநேரம், மறுபுறம் தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோதவிடும் சூழ்ச்சிகளும் அரங்கேற்றப்படுகிறது. இதற்கு தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் துணை போவது அம்பலமாகியுள்ளது.

நிழல் யுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தினால் தாங்கள் விரும்பும் இலக்கை அடைய முடியுமென பேரினவாதிகள் கருதுகின்றனர். இதற்கு கருணா குழுவும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் துணைபோவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால், சமாதான முயற்சிகளில் நாட்டம் காட்டுவதை விடுத்து நிழல் யுத்தத்தில் புதிய அரசு நாட்டம் காட்டுகிறது.

இதனால் நோர்வேயை அப்புறப்படுத்தும் முயற்சிகளும் தீவிரமடைந்துள்ளன. முன்னைய ஆட்சியாளர்களான சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க போன்று மேற்குலகுடன் கைகோர்க்க மகிந்த தயாரில்லை. சந்திரிகாவும், லக்ஷ்மன் கதிர்காமரும் மேற்குலகின் மூலம் புலிகளை அடிபணிய வைக்க முயன்றனர். இதேபாணியில்தான் ரணில் விக்கிரமசிங்கவும் சர்வதேச பாதுகாப்பு வலையமைப்பை ஏற்படுத்த முயன்றார்.

இவர்களுக்கு முன்னைய ஆட்சியாளர்கள் புலிகளுக்கெதிராக இந்தியாவைப் பயன்படுத்தினர். ஆனாலும், புலிகளின் இராஜதந்திரத்தால் இந்தியாவின் அணுகுமுறைகளும் படுதோல்வியடைந்தன. இலங்கைப் பிரச்சினையில் அரசியல் ரீதியிலும், இராணுவ ரீதியிலும் இந்தியாவின் அணுகுமுறைகள் படுதோல்வியடையவே இலங்கைப் பிரச்சினையில் இந்தியா, மிக நீண்டகாலம் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தது.

ஆனாலும், மேற்குலகை விரும்பாத புதிய ஜனாதிபதி, மீண்டும் இந்தியாவை இப்பிரச்சினையில் நுழைக்கப் பெரிதும் முயலுகின்றார். இதனால் நோர்வேயின் அனுசரணை முயற்சிகளை புறந்தள்ளி, சர்வதேச மயப்படுத்தப்பட்டுவிட்ட இலங்கைப் பிரச்சினையை ஆசியமயப்படுத்த முனைகிறார். மகிந்தவின் சிந்தனையை மேற்குலகம் உணர்ந்துள்ள அதேநேரம், அவரது சிந்தனைக்கேற்ப புலிகளைத் தடைசெய்யும் விடயத்தில் மேற்குலகும் அவருக்கு உதவப்போகின்றது போலவே தென்படுகிறது.

மேற்குலகைத் தான் புறக்கணிக்கத் தொடங்கிவிட்டதை மேற்குலகும் உணர்ந்துள்ளதை மகிந்த அறிவார். நோர்வேயின் இடத்தில் இந்தியாவை அமர்த்த மகிந்த முயல்வதை மேற்குலகம் அறியும். மேற்குலகத்தைப் பயன்படுத்தி தங்கள் மீது தடையை ஏற்படுத்தவும் இதனைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சினையில் இந்தியாவை நுழையவைக்கவும் இலங்கை அரசியல் வாதிகள் முயல்வதைப் புலிகள் அறிவர். இதனால் இலங்கையில் மீண்டும் யுத்தம் வெடிக்கப்போவதை உலகம் அறியும்.

ஆடு - புலி ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. மேற்குலகை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் அதேநேரம், மேற்குலகின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் முயற்சிகளில் மகிந்தவின் அரசு ஈடுபடத் தொடங்கிவிட்டது. அவரது கூட்டாளிகளான ஜே.வி.பி.யும், ஜாதிக ஹெல உறுமயவும் இதில் மகிந்தவுக்கு தோளோடு தோள் நின்று உதவுகின்றன.

ஆனாலும், அனுசரணையாளராக இந்தியாவைக் கொண்டுவரும் மகிந்தவினதும், ஜே.வி.பி.யினதும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. புலிகளைத் தடை செய்து இலங்கை விவகாரத்தில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்து வரும் இந்தியாவால் இப்பிரச்சினையில் அனுசரணைப் பணியிலீடுபட முடியாதுள்ளது. இதற்கு புலிகளும் இடமளிக்கமாட்டார்களென்பதையும் இந்தியா நன்குணர்ந்துள்ளதால் அரசியல் ரீதியாக இலங்கை விவகாரத்தில் தலையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், நோர்வேயை வெளியேற்றுவதில் புதிய அரசும் அதன் பங்காளிகளும் தீவிரம் காட்டுவது இந்தியாவுக்கு தனிப்பட்ட ரீதியில் வாய்ப்பாயிருந்தாலும் தன்னால் எவ்விதத்திலும் அரசியல் ரீதியாக இலங்கைப் பிரச்சினையில் தலையிட முடியாததை உணர்ந்துள்ள அதேநேரம், இராணுவ ரீதியாக உள்ளே நுழையத் தருணம் பார்ப்பதுபோல் தெரிகிறது.

இந்தியப் படைத் தளபதிகளின் இலங்கை வருகை, இலங்கை - இந்திய கடற்படைகளின் கூட்டு நடவடிக்கைகள், பலாலி விமானத் தளத்தைப் பாரியளவில் விஸ்தரிப்பதற்கு பெரும் உதவிகள் வழங்கல் என்பனவெல்லாம், இலங்கை தொடர்பாக இராணுவ அணுகுமுறையைக் கடைப்பிடிக்கலாமா என்ற சிந்தனையை இந்தியாவிடம் ஏற்படுத்தியுள்ளது.

நோர்வே மற்றும் மேற்கு நாடுகள், இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சமஷ்டி ஆட்சி முறையை வலியுறுத்துகையில், இந்தியாவிலுள்ள மாநில ஆட்சி முறைக்குக் குறைவானதொரு தீர்வையே இலங்கையில் தீர்வாகத் திணிக்க இந்தியா முற்படுவது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இந்தியா மீது பெரும் விருப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும், இந்தியாவின் இரண்டும் கெட்டான் நிலைமை, இலங்கைப் பிரச்சினையில் அரசியல் ரீதியாகத் தலையிடமுடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளதால் இப்பிரச்சினையில் அனுசரணைப் பணியில் ஈடுபடவும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் தீவிர பணியாற்றவும் ஜப்பான் மிகுந்த அக்கறை காட்டுகிறது.

நோர்வேயில் தற்போது புதிய அரசு பதவியேற்றுள்ளது. முன்னைய அரசு அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாகவிருந்தது. இதனால் நோர்வே ஊடாக அமெரிக்காவும் இலங்கைப் பிரச்சினையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், நோர்வேயின் புதிய அரசு அமெரிக்காவுக்கும், நேட்டோவுக்கும் கடும் எதிர்ப்பானதென்பதால் இனி நோர்வே மூலம் இலங்கை விவகாரத்தில் தலையிட முடியாதென்பதால் தனது மற்றொரு செல்லப் பிள்ளையான ஜப்பானை இலங்கை விவகாரத்தில் தலையிட வைக்க அமெரிக்கா மிகுந்த ஆர்வம் காட்டுகிறது.

நோர்வேயின் பங்களிப்பை புதிய ஜனாதிபதி மகிந்த கடுமையாக எதிர்ப்பது அமெரிக்காவுக்கு வாய்ப்பாகிவிட்டது. தருணம் பார்த்து ஜப்பானை இதற்குள் நுழைக்க அமெரிக்கா தீவிரம் காட்டுகிறது. இதனால்தான் ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி அண்மையில் இலங்கைக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டதுடன், இலங்கை அரசைத் திருப்திப்படுத்தும் விதத்தில் பத்திரிகையாளர் மாநாட்டிலும் அகாசி கருத்துகளை வெளியிட்டு, போர்நிறுத்த உடன்பாட்டை மறுபரிசீலனை செய்யும் பேச்சுகளை ஜப்பானில் நடத்த இடமளிப்போமென்றும் கூறினார்.

போர்நிறுத்த உடன்பாட்டை அமுலாக்குவது குறித்து மட்டுமே பேசுவோமென்றும், அதனை மறுபரிசீலனை செய்வதென்ற பேச்சுக்கே இடமில்லையெனப் புலிகள் மீண்டும் மீண்டும் கூறிவருகையில், `உடன்பாட்டை மறுபரிசீலனை' செய்யும் பேச்சுகளை ஜப்பானில் நடத்த தாங்கள் தயாராயிருப்பதாகக் கூறி உடன்பாட்டில் திருத்தம் செய்யவேண்டுமென்ற இலங்கை அரசின் விருப்பத்தை ஜப்பானும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அவர்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளது.

அதேநேரம், வன்னிக்குச் செல்ல அகாசிக்கு புதிய அரசு அனுமதி மறுத்துவிட்டது. இனிமேல் வெளிநாட்டு தூதர்களோ, இராஜதந்திரிகளோ (நோர்வேயைத் தவிர) எவருமே புலிகளைச் சந்திக்க வன்னிசெல்ல முடியாதெனவும் புதிய ஜனாதிபதி மகிந்த தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆனாலும், தனது வன்னிப் பயணத்திற்கு இலங்கை அரசு தடைவிதித்ததை கண்டிக்காது மூடிமறைத்த அகாசி, தமிழ்ச்செல்வனுடன் எப்படித் தொடர்புகொள்வதெனத் தனக்குத் தெரியுமென பத்திரிகையாளர்களின் கேள்விக்கு நாசுக்காகப் பதிலளித்து அந்த விவகாரத்திற்கு முற்றுப் புள்ளிவைத்துவிட்டார்.

இலங்கைப் பிரச்சினையில் நோர்வேக்கு பதிலாக தாங்கள் நுழைவதற்காகவே அவமானத்தைக்கூட பெரிதுபடுத்தாது ஜப்பான் அடக்கி வாசிக்கிறது.

இந்தியா இவ்விவகாரத்தில் அனுசரணைக்கு வராவிட்டால் ஜப்பானை ஈடுபடுத்த இலங்கை அரசும் விருப்பம் கொண்டுள்ளதை ஜப்பானும், அமெரிக்காவும் நன்கறியும். இதனால் இவையிரண்டும் சந்தர்ப்பத்திற்காக தருணம் பார்த்துக் காத்திருக்கின்றன.

ஆனால், இந்தியா இதனை உணர்ந்துள்ளது. தனது கட்டுப்பாட்டிலிருக்கும் அண்டை நாட்டுக்குள், தெற்காசியாவின் வல்லரசான தன்னையும் மீறி ஆசிய நாடொன்று தலையிடுவதை இந்தியா எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளாது.

ஜப்பான், இலங்கை விவகாரத்தில் தலையிடுவதை மிக நீண்டகாலமாகவே இந்தியா எதிர்த்து வருகையில், தனக்குக் கட்டுப்பட்ட அரசொன்று இலங்கையில் ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் ஆசிய நாடொன்று, அதுவும் தனது எதிரியான ஜப்பான் இலங்கை விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

இதனால்தான், இலங்கைக்கான தனது விஜயத்தை ரத்துச் செய்துவிட்டு இந்தியா சென்ற நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்மிடம், நோர்வேயின் அனுசரணைப் பணிதொடர வேண்டும் எனவும் அதற்கு இந்தியா பூரண ஆதரவளிக்குமெனவும் உறுதியளித்ததுடன், இது குறித்து இலங்கை அரசுக்கும் இந்தியா தெரிவித்தது. இதையடுத்தே வேண்டா வெறுப்பாக நோர்வேயின் அனுசரணைக்கு ஜனாதிபதி மகிந்த அழைப்பு விடுத்தார்.

இலங்கையின் களநிலையை நன்குணர்ந்துள்ள நோர்வேயும், தனது அனுசரணைப் பணிக்குக் கடுமையான நிபந்தனைகளை விதிக்கவுள்ளது. இந்த நிபந்தனைகளை அரசும், புலிகளும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே தனது பணி தொடருமெனத் தெரிவித்துள்ளது.

இதேநேரம், இலங்கை விவகாரத்தில் மேற்குலகின் தலையீட்டை தவிர்க்க இலங்கையும், இந்தியாவும் சில திட்டங்களைத் தீட்டியுள்ளன. புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத் தடையை வாய்ப்பாகப் பயன்படுத்தும் அதேநேரம், ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத் தடை செய்யவேண்டுமென இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

புலிகளைத் தடைசெய்யுமாறு இலங்கை அரசும் வலியுறுத்தவுள்ளது. பிரசெல்ஸில் இந்தவாரம் நடைபெறவுள்ள இது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய மாநாட்டில் புலிகள் மீதான தடை குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்யும் பட்சத்தில், அது ஐரோப்பிய நாடுகளுக்கும் புலிகளுக்குமிடையிலான உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுமென இந்தியாவும், இலங்கையும் கருதுகின்றன. ஐரோப்பிய நாடுகளின் மூலம் புலிகளைத் தடைசெய்துவிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டை இலங்கை விவகாரத்திலிருந்து அகற்றிவிடலாமென இந்தியாவும், இலங்கையும் கருதுகின்றன. ஒரு கல்லில் இரண்டு மாங்காயை விழுத்த இவை திட்டமிட்டுள்ளன. இதனால் புலிகளைத் தடை செய்யுமாறு இலங்கையும், இந்தியாவும் பல்வேறு வழிகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்தை வற்புறுத்தி வருகின்றன.

இவ்வாறு புலிகளைத் தனிமைப்படுத்தி பலவீனப்படுத்திவிட்டு விரும்பிய தீர்வைத் திணிக்கவும், புலிகள் இராணுவ ரீதியில் இலங்கை அரசுக்கு சவால் விட்டால் இந்தியாவின் உதவியுடன் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் இலங்கையின் புதிய அரசு கருதுகிறது. இதனையே இந்தியாவும் விரும்புகிறது.

இதேநேரம், இலங்கையினதும், இந்தியாவினதும் இந்தத் திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் புரிந்துகொண்டிருக்குமெனக் கருதப்படுகிறது. புலிகளைத் தனிமைப்படுத்தி தங்கள் கபட நாடகங்களை அரங்கேற்ற இலங்கையும், இந்தியாவும் முயல்வதையும் இராஜதந்திரிகள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புலிகளைத் தடை செய்வதன் மூலம் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக கருத்துக்கூறும் தகைமையைக் கூட ஐரோப்பிய நாடுகள் இழந்து விடுமென்பதை அவை உணரவேண்டும். சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கும் இந்தப்பிரச்சினையை ஆசிய மயப்படுத்த முனையும் இலங்கை அரசும், நாளை நோர்வேயையும் வெளியேற்றிவிட்டால் இலங்கையில் மீண்டும் பெரும் இரத்தக்களரி ஏற்படுமென்பதை ஐரோப்பிய ஒன்றியம் உணர்ந்துகொண்டால் சரி.

இதேவேளை ஆசிய நாட்டில் பேச்சுகளை நடத்தலாமென்ற இலங்கை அரசின் கோரிக்கையை விடுதலைப் புலிகள் நிராகரித் துள்ளதுடன் அனுசரணையில் ஈடுபடும் நோர்வேயிலேயே முதல் கட்டப் பேச்சுகளை நடத்த வேண்டுமெனக் கூறியுள்ளளனர்.


vithuran
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..