பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow தமிழர் விரோத சிந்தனையைக் கொண்டவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சில் முக்கியத்துவம் வழங்குவது ஏ
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தமிழர் விரோத சிந்தனையைக் கொண்டவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சில் முக்கியத்துவம் வழங்குவது ஏ அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 23 December 2005

இன நெருக்கடித் தீர்வுக்கான சமாதான முயற்சிகள் தொடர்பில் தொடர்ந்தும் சகிப்புத் தன்மையுடன் நடு நிலைமையை கடைப்பிடித்து வரும் நோர்வேயின் அனுசரணை முயற்சிகளுக்கு கடும் போக்கொன்றை வெளிக்காட்டி வரும் இலங்யைின் புதிய ஆட்சியாளர்கள் மறுபக்கத்தில் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை முன்னெடுக்கும் பதவிகளுக்கு சிங்கள பௌத்த கடும் போக்குடைய தமிழர் விரோத நிபந்தனையைக் கொண்டவர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கி வருவது யுத்த மொன்றிற்கான வழிவகைகளை நாடுவதையே துல்லியமாக வெளிக்காட்டி நிற்கின்றன.

பாராளுமன்றத்தில் இரண்டாவது தடவையாகவும் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டம் கூட நகர்ப்புற வறிய மக்களினதும் கிராமப்புற விவசாயிகளினதும் மேம்பாட்டிற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதாக ஒரு சில தரப்பினரால் கூறப்பட்டாலும் கூட மகிந்தவின் சிந்தனையென்பது மீண்டுமோர் போருக்கான அறைகூவல் என்பதையே வரவு-செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட பெருந்தொகை நிதியொதுக்கீடு துல்லியமாக சுட்டிக் காட்டுகின்றது.

இதனை விட நாட்டின் ஆட்சியதிகாரத்தை புதிதாக கைப்பற்றியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவினால் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக புதிதாக நியமனம் பெற்றுள்ள அனைத்துத் தரப்பினரும் தமிழர் விரோத சிந்தனையை சிங்கள பௌத்த தீவிரவாதிகளேயாவர் என்பதை எவரும் மறுக்க முடியாது.

பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ரட்ணசிறி விக்கிரமநாயக்க அவரின் கடந்த கால அனைத்து அரசியல் செயற்பாடுகளிலும் தமிழர் விரோத சிந்தனை என்பதற்கு அப்பால் இந்த நாட்டில் வாழும் அனைத்து சிறுபான்மை தேசிய இனங்களையும் சிங்கள பௌத்தர்களுக்கு அடிமையாக்க வேண்டுமென்ற கடும் போக்கான நிலைப்பாட்டைக் கொண்டவர் என்பது, இந்த நாட்டில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் தெரிந்த ஒரு விடயமாகும்.

நோர்வேயின் அனுசரணையுடன் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளுக்கு வெளிப்படையாகவே தனது எதிர்ப்பை வெளிக்காட்டியதுடன் படைத்தரப்பினர் மத்தியில் யுத்தமொன்றை நோக்கி நகர்வதற்கான தூண்டுதல்களை தனது பேச்சுகளின் ஊடாக தொடர்ந்தும் வெளிக்காட்டி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை விட ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரட்ணசிறி விக்கிரநாயக்க நோர்வேயின் அனுசரணையுடன் சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட வேளையில் அடிக்கடி யாழ்.குடா நாட்டுக்கு விஜயம் செய்து படைத்தரப்பினர் மத்தியில் யுத்த மனோபாவத்தை தூண்டிவிடுவதற்கான மூளைச்சலவை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கோதபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர். முன்னாள் இராணுவ அதிகாரியான இவர் சிங்கள பௌத்த கடும் போக்குக்குள் அடக்கப்பட்ட ஒருவராவார்.

இவ்வாறே புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா படைத் தரப்பினரை சீண்டும் எந்தவொரு நடவடிக்கையிலாவது எவராவது ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கையெடுக்கப்படும் என்று பதவியேற்றவுடனேயே தெரிவித்துள்ளதுடன் தற்போது வடக்கு, கிழக்கில் உள்ள படைமுகாம்களின் செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளதுடன் உஷார் நடவடிக்கைகளுக்கும் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கதொரு விடயமாகும்.

சரத் பொன்சேகா புதிய இராணுவத் தளபதியாக நியமனம் பெற்றதற்கு பின்னரே யாழ். குடாநாட்டில் படைத் தரப்பினருக்கும் பொது மக்களுக்குமிடையிலான முறுகல் நிலமைகள் மிக மோசமாக அதிகரித்துள்ளதுடன் பல்வேறு தாக்குதல் சம்பங்களும் இடம்பெற்றுள்ளமை கவனிக்கத்தக்கது.

சரத் பொன்சேகா புதிய இராணுவத் தளபதியாக நியமனம் பெற்று உத்தியோக பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற ஒரு மணிநேரத்திற்குள் யாழ்ப்பாணம்-பலாலி வீதியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் 6 படையினர் கொல்லப்பட்டு குடா நாட்டில் பதற்றமான ஒரு சூழ்நிலை உருவாகியது.

புரிந்துணர்வு உடன்படிக்கை போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு பின்னரான காலப்பகுதியில் யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற முதலாவது கிளேமோர் தாக்குதல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை விட இராணுவப் புலனாய்வுப் பிரிவிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அதன் செயற்பாடுகளிலும் புதிய அணுகுமுறைகள் கையாளப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.

இதெல்லாவற்றிற்கும் அப்பால் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கொட்டகதெனிய கடந்த காலங்களில் பதவியில் இருந்த வேளையில் எவ்வாறாக செயற்பட்டார் என்பது எவருக்கும் தெரியாத விடயமல்ல.

கொட்டகதெனிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய வேளையில் கொழும்பில் வகை தொகையின்றி தமிழர்கள் நூற்றுக்கணக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்கள்.

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழர்களில் மிகப் பெரும்பாலானோர் நிரபராதிகள் என்று நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கள, பௌத்த கடும்போக்கு கொள்கையைக் கொண்ட ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தராக செற்படும் கொட்டகதெனிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையே தோற்றுவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட மறுகணமே கொழும்பிலுள்ள தங்கு விடுதிகளை மட்டுமல்ல தமிழர் செறிந்து வாழும் பகுதிகளிலுள்ள வீடுகளையும் சோதனையிட்டு துப்புரவு செய்யும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமெனவும் கொட்டகதெனிய ஆலோசனை வழங்கியுள்ளது தமிழர்கள் தரப்பில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாவற்றிற்கும் அப்பால் காமினி பொன்சேகாவின் நெறியாள்கையில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை சிங்கள மக்கள் மத்தியில் திரிபுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட `நொமியன மினுசு' திரைப்படத்தில் பிரிகேடியராக பாத்திரமேற்று நடித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தற்போது யதார்த்தமாக செயற்படுவதாகவே அவரின் இராணுவ ரீதியான அனைத்து செயற்பாடுகளும் துல்லியமாக வெளிக்காட்டி நிற்கின்றன.


அஜாதசத்ரு
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..