|
கம்யூனிஸ நாடான சீனாவைப் பொறுத்தவரை அதன் பொருளாதாரத்தை தற்போது தனியாரினால் நடத்தப்படும் வணிக நிறுவனங்களே ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த நாட்டுக்கு தேவையான அநேகமான தொழில்வாய்ப்புக்களை இந்த தனியார் வணிக முயற்சிகளே உருவாக்கிவருவதாகவும், சீனாவில் முதன் முதலாக நடத்தப்பட்ட பொருளாதார கணிப்பீடு ஒன்று கூறுகிறது.
இந்த ஆய்வை பொருளாதாரக் கூட்டமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனம் என்னும் அமைப்பு நடத்தியுள்ளது. எந்தெந்த வகையான நிறுவனங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனவோ, அதற்கேற்ப சீனாவின் தனியார் நிறுவனங்கள் குறித்த இந்த ஆய்வின் அளவும் பரந்துபட்ட அளவில் மாறுபட்டிருந்தது.ஆனால் சீனாவின் வளர்ந்துவரும் துரித பொருளாதார முன்னேற்றம் அந்த நாட்டின் சமூகத்தை மாற்றமடையச் செய்துவருகிறது என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. 1980களின் பின்பகுதிகளில் பொருளாதார மறுசீரமைப்பு ஆரம்பமானது முதல், இந்த மறுசீரமைப்பு சீனாவின் அரசியல் முறைமையில் என்ன மாற்றங்களை நிர்ப்பந்திக்கும் என்ற தீவிரமான விவாதங்களும் நடந்தன. குறிப்பாக வணிக உலகில் செயற்பாடுகள் குறித்த கட்டுப்பாடுகள் ஓரளவு இலகுபடுத்தப்படும் என்று சிலர் வாதிட்டனர். ஆனால் பொதுவாக இதுவரை கால நிகழ்வுகளைப் பார்க்கும் போது, சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி தனது மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அதிகாரத்தை தளர்த்தாத நிலையிலேயே அங்கு அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரு கணிசமான விகித வணிகத்துறை முன்னவர்களும் மற்றும் தொழில் முனைவர்களும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாவர். இந்த விகிதம் மூன்றில் ஒரு பங்கு என்று ஒரு ஆய்வு கூறுகிறது.அதிகாரவர்க்க தாமதங்கள், இழுபறிகள் மற்றும் ஊழல் மலிந்த சூழ்நிலையில் கட்சியால் வழங்கப்படக்கூடிய பாதுகாப்பின் அளவு மற்றும் தொடர்புகள் காரணமாக இவர்கள் கவரப்பட்டிருந்தனர். வணிகத்துறையில் நுழைவதற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்புரிமை மிகவும் அவசியம் என்ற நிலைமை, வணிக உலகில் குறிப்பாக அதன் உயர்மட்டத்தில் கட்சிக்கு கணிசமான முக்கியத்துவத்தை தந்துள்ளது. துரிதமாகவும் மற்றும் சமச்சீரற்ற வகையிலும் செல்வச் செழிப்பு உருவாகியதால் ஏற்பட்டுள்ள சமூகப் பதற்றம், சீன நிர்வாகத்துக்கு ஒரு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சில பிராந்தியங்களுக்கு இடையில் வசதி வாய்ப்புகளில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் செல்வச் செழிப்பு மிக்க பகுதிகளை நோக்கி மக்களை இடம்பெயரச் செய்துள்ளன. இதனால் மக்கள் இன்றி சில பிராந்தியங்கள் வெறிச்சோடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான மலைக்கும் மடுவுக்கும் ஒத்த இடைவெளி மிகவும் துரிதமாக வளர்ந்து வருவதால், இந்த சமூக முன்னேற்றத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டதாக பிந்தங்கிய மக்கள் மத்தியில் ஆத்திரமும் அதிகரித்து வருகிறது. bbc
|