பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow ஒட்டுப்படைகளா? சமாதானமா? அரசு முடிவு செய்ய வேண்டிய வேளை!
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஒட்டுப்படைகளா? சமாதானமா? அரசு முடிவு செய்ய வேண்டிய வேளை! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 02 February 2006

எமக்கு இப்போது தேவையானது வன்முறைகளை நிறுத்துவது என்பதுதான். வன்முறைகள் நிறுத்தப்பட்டுவிட்டால் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுகள் நடைபெறும். ஒவ்வொரு படிநிலையாக இது நடைபெறும்.
""அமைதியான சூழ்நிலையைத்தான் நாம் விரும்புகிறோம். குறிப்பாக வடக்கு, கிழக்கில் இந்த அமைதிச் சூழ்நிலை நிலவவேண்டும். வடக்கு கிழக்கில் எதுவிதப் படுகொலைகளும் இடம்பெறக்கூடாது.''
இப்படி திருவாய் மலர்ந்தருளியிருப்பவர் வேறு யாருமல்லர். இந்த நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான்.

ஜெனிவாவில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் பேச்சுகள் நடப்பதற்கான இணக்கம் எட்டப்பட்ட பின்னர் வெளிநாட்டுச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியிருக்கிறார்.
அவரது கருத்து வாய்மொழிகளில் பேச்சில் நன்றாகத்தான் இருக்கின்றது. செயலில் நடப்பதோ யதார்த்தத்தில் நிகழ்வதோ வேறானதாக அல்லவா உள்ளது?
ஜெனிவாவில் பேச்சு நடத்துவதற்கான இணக்கம் பற்றிய அறிவிப்பு கடந்த 25ஆம் திகதி கிளிநொச்சியில் வைத்து விடுக்கப்பட்டது.
அந்த அறிவிப்பு வெளியான கையோடே அரச படைகளுக்கு எதிரான வன்முறைகள் எதுவும் இடம்பெறக்கூடாது என்ற கடுமையான உத்தரவு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனினால் பிராந்தியத் தளபதிகளுக்கு விடுக்கப்பட்டதாகவும் செய்திகள் பிரசுரமாகின.
கடந்த ஒரு வார காலமாக அந்த உத்தரவு புலிகள் தரப்பினால் முழு அளவில் கடைப்பிடிக்கப்படுவதை கள நிலைவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இதேபோன்ற உத்தரவு ஒன்றை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கூட்டுப்படைகள் மற்றும் பொலீஸின் தளகர்த்தர் என்ற முறையில் முப்படைத் தளபதிகளையும் பொலீஸ்மா அதிபரையும் அழைத்து விடுத்தார் என்று கூறப்படுகின்றது.
ஆனால், தமிழர் தரப்புக்கு எதிரான நடவடிக்கைகள், தாக்குதல்கள், வன்முறைகள் நின்றபாடில்லை; அவை தொடர்கின்றன.
தமிழர் தாயகத்தில் படையினரின் கெடுபிடிகள், அட்டகாசங்கள் குறையவில்லை. மட்டக்களப்பு வடமுனையில் புலிகளின் போராளிகள் மீது ஒட்டுப்படைகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் மேஜர் கபிலன் என்ற போராளி உயிரிழந்திருக்கின்றார்.
அதேசமயம், தமிழர் தாயகப் பிரதேசத்தில் போரினாலும், ஆழிப்பேரலை அழிவுகளினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு, புனர் நிர்மாணப் பணிகளைக் கவனித்து வந்த தொண்டு அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பத்து ஊழியர்கள் கடத்தப்பட்டிருக்கின்றார்கள். அரச படைகளின் புலனாய்வுப் பிரிவுகளின் கையாள்களாக இயங்கும் ஒட்டுப்படைகளின் கைவரிசையே இது என்று சந்தேகிக்கப்படுகின்றது.
ஒருபுறம் வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும் என்ற தமது அவாவை ஜனாதிபதி மஹிந்த வெளிப்படுத்துகின்றார். அத்தோடு புலிகளுக்கும், தமிழர்களுக்கும் எதிரான வன்முறைகள் இடம்பெறக்கூடாது என்று தளபதிகளுக்கு அவர் உத்தரவிடுகின்றார்.
ஆனால், மறுபுறத்தில் இராணுவச் சோதனை நிலைக்கு நெருக்கமாக வைத்தே, ஒட்டுப்படையினர் என்று கருதப்படுவோரால், தமிழ் அகதிகளுக்கான தொண்டர் பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள் ஆயுத முனையில் கூட்டாகக் கடத்தப்பட்டு காணாமல் போகின்றனர். இவற்றை நோக்கும்போது என்ன தெளிவாகின்றது?
ஒட்டுப்படைகள் மீதும் அவற்றை இயக்குகின்ற புலனாய்வு அதிகாரிகள் மீதும் தமது அதிகாரத்தைச் செலுத்த முடியாத அவர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கமுடியாத தளகர்த்தராக ஜனாதிபதி மஹிந்த விளங்குகின்றார் என்ற முடிவுக்கே தமிழர் தரப்பு வரவேண்டியிருக்கின்றது.
தற்போதைய அமைதி முயற்சிகளுக்கான புறச்சூழலை ஏற்படுத்துவதாயின் இந்த ஒட்டுப்படைகளை அரசுத் தலைமை கட்டுப்படுத்தி,நிராயுதபாணிகளாக்கி, வடக்கு, கிழக்குக்கு வெளியே தமிழர்தாயகத்திற்கு அப்பால் அனுப்பவேண்டியது அத்தியாவசியமானது என்று இப்பத்தியில் பல தடவைகள் திரும்பத் திரும்பக் கூறிவந்துள்ளோம்.
அதைச் செய்வதை விடுத்து, ஒட்டுப்படைகள் தமது அராஜகத்தைப் புரிவதற்கு வசதியாக அவர்களை அரசுத்தலைமை கட்டுக்குள் வைக்காமல் திறந்துவிடுமானால், அமைதிப் பேச்சுகளுக்கான புறச்சூழல் ஏற்படாமலேயே போய்விடும். அத்தகைய நிலையில் சமாதானப் பேச்சுகள் இடம்பெறுவதும் சாத்தியமற்றதாகிவிடும்.
அந்நிலையில், ஒட்டுப்படைகளை கட்டுப்படுத்தி, அவர்களின் கைகளைக் கட்டி ஓரப்படுத்தும் வேலையை பணியை தாங்களே பொறுப்பெடுத்து, நிறைவேற்றிவிட்டு அதற்குப் பின்னர் அமைதிப்பேச்சுக்குத் திரும்புவது குறித்து ஆலோசிக்க வேண்டிய நிலைமைக்குத் தமிழர் தலைமை விடுதலைப் புலிகள் அமைப்பு தள்ளப்படும் என்பதையும் அரசுத் தலைமை உணர்வது நல்லது.
தன்னை விஞ்சி நிற்கும் ஒட்டுப்படைகளின் போக்குக்கு அரசுத்தலைமை மண்டியிடப் போகின்றதா? அல்லது அதைக் கட்டுப்படுத்தி, அமைதி முயற்சிகளுக்கான புறச்சூழலை ஏற்படுத்தும் கடப்பாட்டையும் பொறுப்பையும் நிறைவு செய்யப்போகின்றதா?
அதில்தான் அமைதி முயற்சிகளின் சமாதான நடவடிக்கைகளின் எதிர்காலம் தங்கியிருக்கின்றது.
ஒட்டுப் படைகளா? சமாதான முயற்சிகளா? எது தனக்கு அவசியம் என்பதை அரசுத் தலைமை தீர்மானிக்கவேண்டிய இறுதிவேளை வந்துவிட்டதாகவே தெரிகிறது.


uthayan
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..