|
தெற்கில் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தாமல் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது. பெரும் பான்மையினரான சிங்களவர்களையும் நாம் முதலில் திருப்திப்படுத்தியாகவேண்டும். அதுவே முதல் வேலை. அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தீர்வு முயற்சியில் நாம் முன்னோக்கிச் செல்லவே முடியாது. அதனைப் புலிகளும் புரிந்துகொள்ளவேண்டும்.'
இவ்வாறு கூறியிருக்கின்றார் பிரதமரும், ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான மஹிந்த ராஜ பக்ஷ. அண்மைக் காலமாகத் தாம் எடுத்துவரும் நிலைப் பாட்டுக்கு நடவடிக்கைகளுக்கு இவ்வாறு விளக்கம், வியாக்கியானம், காரணம் என்பன கூற முயல்கிறார் பிரதமர். கடும்போக்குடைய சிங்கள, பௌத்த தீவிரவாத சக்திகளுடன் தாம் அணி சேர்வதற்கு இத்தகைய விளக் கத்தை அவர் அண்மைக் காலத்தில் தம்மைச் சந்தித்து வரும் முக்கிய பிரமுகர்களுக்குக் கூறிவருவதையும் அறிய முடிகின்றது. தீர்வு முயற்சிக்கு முன்னோடியாக பெரும்பான்மைச் சிங்கள மக்கள் அனைவரையும் தென்னிலங்கைச் சக்தி கள் அனைத்தையும் தமக்குப் பின்னால் அணி திரட்டு வதற்காகவே இத்தகைய கொள்கைப் போக்கைத் தாம் கடைப்பிடித்து வருகின்றார் என்று "சமாளிப்பு' கூறமுயல் கின்றார் அவர். அவரது இந்த செயற்பாடு "குளிக்கப்போய் சேறு பூசிக் கொண்டதற்கு' ஒப்பானதாகும். பேரினவாதத்தின் பின்னால் மறைப்பு எடுப்பதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என நப்பாசை கொண்டிருக்கும் பிரதமர், அதற்காகத் தான் செய்யும் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பொருத்த மற்ற விளக்கம் கொடுத்து சமாளிக்கப் பார்க்கின்றார். இனப்பிரச்சினைக்கு சகல தரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான இணக்கத் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு, பெரும்பான்மையினரிடத்தே இணக்கப்பாடு ஒன்றை உருவாக்குவது அவசியமானது என்பதை எல் லோருமே ஏற்றுக்கொள்வர். அது நியாயமானதுதான். ஆனால், இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தமி ழர் தரப்பின் நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய்யாத எந்தத் தீர்வும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதும், அத்தகைய தீர்வு எதுவும் நின்று, நிலைத்து நீடிக்கமாட்டாது என்பதும் கூட வெள்ளிடைமலை. தமிழர்களின் நியாயமான கைவிடவே முடியாத அவர்களின் அபிலாஷைகளை அடியோடு நிராகரித்துப் புறம் ஒதுக்குகின்ற வகையில், அத்தகைய கடும்போக்கை முன்னிறுத்தி அவற்றின் அடிப்படையில் பௌத்த, சிங் கள மேலாண்மைவாதிகளைத் தமக்குப் பின்னால் அணி திரட்டும் பிரதமர், அத்தகைய அணியை வைத்துக் கொண்டு அமைதித் தீர்வு காண்பேன் என்று கூறுவது இலங்கை மக்கள் அனைவரினதும் காதில் பூச்சுற்றும் வேலையேயன்றி வேறில்லை. பிரதமர் என்ற உயர்பதவி நிலையையும் ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்ற மேன்மை ஸ்தா னத்தையும் தம்வசம் வைத்துக்கொண்டு, அந்த அந்தஸ்தை உபயோகித்து, ஜனாதிபதித் தேர்தல் என்ற சந்தர்ப்பத் தைப் பயன்படுத்தி, இதுவரை நாலாபுறமும் சிதறிக் கிடந்த பேரினவாதிகளை தமக்குப் பின்னால் ஒன்று திரட்டுகின்றார் பிரதமர். அதுமட்டுமல்ல, தமிழர்கள் ஒரு தேசிய இனம் அல்ல அவர்களுக்குத் தனியான தாயகம் ஏதும் இலங்கைத் தீவில் இல்லை. அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை என்று எதுவும் கிடையாது, எந்தத் தீர்வும் ஒற்றையாட்சி முறைக் குள்தான் பரிசீலிக்கப்பட முடியும். ஆயுதக் களைவோடு தான் புலிகளுடன் பேச்சு என்பன போன்ற சாத்தியப் பாடற்ற, யதார்த்த பூர்வமற்ற, விவரீதமான அம்சங்களை எழுத்தில் ஒப்புக்கொண்டு, இந்தக் கருத்து நிலைப்பாடு டன் இதுவரை தென்னிலங்கையில் பல்வேறு துண்டுக ளாகச் சிதறிக் கிடந்த பேரினவாத சக்திகளைத் தட்டி விழிக்கச்செய்து, கட்டி எழுப்பி, தன்னை மையமாக வைத்து ஒன்றுபடுத்தி, தூக்கி நிறுத்து கிறார் பிரதமர் மஹிந்த. இணக்கத் தீர்வுக்கும், அதற்கு வழிசெய்யும் அமை திப் பேச்சுக்கும் இடைஞ்சல்களை ஏற்படுத்தக்கூடிய பேரினவாதிகளைத் தமது தேர்தல் வெற்றி என்ற சுய லாப அரசியலுக்காக ஓரணி சேர்க்கும் பிரதமர், அமை தித் தீர்வுக்குச் சிங்களவர்களை ஒன்றுதிரட்டும் முயற்சி என அதை சித்திரிக்க முயல்கிறார். அமைதித் தீர்வுக்கான வாய்ப்புகளை அடியோடு அழிக்கும் விடயங்களின் அடிப்படையில் பேரினவாதி களை ஐக்கியப்பட வைக்கும் பிரதமர், தீர்வுக்கு வசதியா கப் பெரும்பான்மையினரை ஒன்றுபடுத்தி இணக்கப் பாட்டுக்குக் கொண்டுவர வைக்கிறேன் என அதற்கு விளக்கம் கூற முற்படுவது குளிக்கப் போய் சேறு பூசும் வேலையன்றி வேறென்ன? இது தீர்வுக்கு வழிசெய்யும் நடவடிக்கை அல்ல. இணக்கத் தீர்வுக்கு இடுக்கண் ஏற்படுத்தும் சதிச் செயற் பாடாகும். நாட்டைக் கொடூர யுத்தத்தின் பால் விழ வைக்கக்கூடிய இனமுரண்பாட்டைத் தீவிரப்படுத்தும் நடவடிக்கையாகும்.
uthayan
|