பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow ஒட்டுக்குழுக்களின் சரணாலயம்!
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஒட்டுக்குழுக்களின் சரணாலயம்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 12 February 2006

சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள வெலிக்கந்தைப் பகுதியில் இருந்து மட்டு. மாவட்ட போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவருக்குக் கொலை பயமுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இனி வெலிக்கந்தைப் பகுதிக்கு வந்தால் படுகொலை செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிறிலங்கா பொலிசாரிடம் முறைப்படி போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனால் பயன் ஏதும் ஏற்படும் என நம்பிக்கை கொள்வதற்கு எதுவுமே இல்லை. இத்தகைய அவநம்பிக்கை தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கும் ஏற்படுவதற்கு அவர்களுக்கும் பட்டறிவு உண்டு.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுதல் என்ற ரீதியில் இது முதலாவது சம்பவமாக இருக்கலாம். ஆனால் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர் மீது இதற்கு முன்பே எச்சரிக்கைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது உண்மையாகும். இதற்கு எடுத்துக் காட்டாக மட்டக்களப்பு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் வாகனத்தரிப்பிடத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் குறிப்பிடமுடியும்.

ஆனால் அத்;தாக்குதல் குறித்து சிறிலங்கா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், அத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதே சமயம் இக் குண்டுத் தாக்குதலை யார் நடத்தினர்? என்பது தமக்குத் தெரியும் எனப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத்தரப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, தற்பொழுது போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையானது சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து அதிலும் வெலிக்கந்தைப் பகுதிக்குள் இருந்து வெளிவந்துள்ளமையானது சிறிலங்கா இராணுவத்தரப்பு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் நடமாட்டத்தை ஒரு பகுதிக்குள் அனுமதிப்பதற்கு தடைகள் ஏற்படுத்த முற்பட்டுள்ளது என்றே கொள்ள வேண்டியுள்ளது.

யுத்த நிறுத்த உடன்பாட்டின்படி வெலிக்கந்தைப் பகுதி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி என வரையறை செய்யப்பட்ட பகுதியாகும். ஆனால் தற்பொழுது வெளியாகும் தகவலின்படி அப்பகுதியைத் தற்பொழுது சிறிலங்கா அரச தரப்பு ஒட்டுக்குழுக்களின் சரணாலயம் ஆக்கியுள்ளது போன்று உள்ளது.

சிறிலங்கா அரசினது இந் நடவடிக்கையானது யுத்த நிறுத்த விதிகளுக்கு மாறானது என்பது வெளிப்படையானது. குறிப்பாக ஒட்டுக்குழுக்களை வெளியேற்றும் யுத்த நிறுத்த உடன்பாட்டுவிதியை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்குச் சவால் விடுக்கும் வகையில் அதன் நடவடிக்கை உள்ளது என்பதே யதார்த்தமானதாய் உள்ளது.

சிறிலங்கா ஆட்சியாளர்கள் ஒட்டுக் குழுக்களின் செயற்பாடுகளுக்கும், தமக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி இவ் விவகாரத்தில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முடியும் எனக் கருதின் அது சிறு பிள்ளைத்தனமானதாகும். ஏனெனில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தமது கட்டுப்பாட்டில் இல்லாத ஆயுதக்குழுக்கள் செயற்படுவதாகக்கூறுவது அவமானமானது என்பது ஒருபுறமிருக்க, சிறிலங்காஅரசு சமாதான முயற்சிகளுக்கு விரோதமான செயற்பாட்டை முன்னெடுப்பதாகிறது என்றே கொள்ளத்தக்கதாகும்.

சிறிலங்கா ஆட்சியாளர்கள் ஜெனீவாவில் யுத்த நிறுத்த உடன்பாடு குறித்துப் பேசுவதற்கு உடன்பட்டுள்ள போதிலும், அதற்கு இடையூறு விளைவிக்கும், தொடர்ச்சியான செயல்களில் ஒன்றே இறுதியாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும். அதாவது தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்ட பின்னரும் எதிர்பார்த்ததிற்கு மாறாக ஜெனீவாப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற நிலையிலேயே கண்காணிப்புக் குழுவினருக்கு இவ் எச்சரிக்கை வெளிவந்துள்ளது.

இவ் எச்சரிக்கையானது அரசாங்கம் யுத்த நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை வேறொரு வழியில் இழுத்துச் செல்வதற்குமானதாகவும் இருத்தல் கூடும். ஏனெனில் சிறிலங்கா அமைச்சர்கள் சிலரது பேச்சானது ஒட்டுக்குழுக்களில் சில தமது கட்டுப்பாட்டில் இல்லை என்பது போலவும், தேவையானால் அவர்களுடன் பேசிக் கொள்ளட்டும் என்பது போலும் உள்ளது.

கடந்த ஐ.தே.க. அரசாங்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டைகளைத் தோற்றுவிக்க அரசியல் ரீதியிலான புதிய தரப்புக்களை உருவாக்க முனைந்தது போல் தற்போதைய அரசாங்கம், அரசியற் குழுக்களுக்குப் பதில் ஒட்டுக் குழுக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை தெரிகின்றது. ஆனால் அரசாங்கத்தின் இம் முயற்சிகள் விசப்பரீட்சையாகி யுத்த நிறுத்த உடன்பாட்டையே கேள்விக்குள்ளாக்கி விடும். இத்தகையதொரு நிலையில் யுத்தம் ஒன்று ஏற்படுமானால் அதன் விளைவுகள் தற்போதைய அரசின் மதிப்பீடுகளுக்கு நிச்சயமாக மாறுபட்டதாகவே இருக்கும் என்று துணிந்து கூறமுடியும்.


ஈழநாதம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..