பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow தீர்மானிக்க இவர் யார்?
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தீர்மானிக்க இவர் யார்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 13 February 2006

சிறிலங்கா அரசியல்வாதிகளும் சரி, படை அதிகாரிகளும் சரி சில வேளைகளில் பேசும் விடயங்கள் ஆச்சரியம் அளிப்பதாகவும், இவர்களுக்கு இவ்வாறு பேசவேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியையும் எழுப்புவதுண்டு. ஏனெனில் இவர்களின் பேச்சிற்கும், செயலுக்கும் எந்தவித தொடர்புகள், அற்றதாகவே யதார்த்தம் இருப்பதுண்டு.

விடுதலைப் புலிகளின் மீதோ அன்றி தமிழ் மக்கள் மீதோ சிறிலங்கா ஆயுதப் படைத்தரப்பு அன்றி அதன் ஆதரவுடன் இயங்கும் ஒட்டுக் குழுக்கள் தாக்குதல்கள் நடத்தி சேதத்தை விளைவிக்கும் நிலையில் அரசாங்கத் தரப்பு அரசியல்வாதியோ அன்றி அதிகாரியோ இத்தகைய சம்பவங்கள் சமாதான முயற்சிகளை- பேச்சுவார்த்தைகளை பாதிக்காது எனக் கூறிவிடுவது குறித்தே மேற்படி கேள்விகள் எழுப்பப்படுகின்றது.

எடுத்துக் காட்டாக வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து தமிழர் புனர்வாழ்வுக்கழக பணியாளர்கள் கடத்தப்பட்ட விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கொட்டகதெனிய தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்டமை ஜெனீவாவில் பேச்சுக்களைப் பாதிக்காது எனத் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். அதாவது ஏழு அப்பாவித்தமிழ் மக்களின் உயிர்கள் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களுக்குப் பொருட்படுத்தத்தக்கதொன்றாக இல்லை.

இதே போன்றே மன்னார்- பேசாலைக் கடற்பரப்பில் நேற்று முன்தினம் நால்வருடன் சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய படகு தொடர்பாகவும், சிறிலங்கா அரசின் நிலைப்பாடு உள்ளது. மன்னார் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க கூறுகையில்; மன்னார் கடற்பரப்பில் நிகழ்ந்த சிறுசம்பவம் நடைபெறவிருக்கும் சமாதானப் பேச்சுக்களைப் பாதிக்காது எனத் தெரிவித்துள்ளார்.

இவர்களின் இத்தகைய பேச்சுக்கள் தாக்குதலுக்குள்ளானவர்களைச் சீண்டுவதற்கும் அவமானப்படுவதற்கும் ஒப்பானதாகும். ஏனெனில் அவர்களே தாக்குதலை நடத்திவிட்டு இத்தகைய தாக்குதல் சமாதான முயற்சிகளைப் பாதிக்காது எனக் கூறுவது தமிழ் மக்கள் மீதான உரிமையைத் தாம் எடுத்துக்கொண்டுள்ளது போன்றதொரு நிலைப்பாடாகும். இது ஒருவகையில் அதிக பிரசங்கித் மானதாகவும், கொள்ளத்தக்கதாகும்.

ஏனெனில் பாதிப்பிற்குள்ளாக்கப்பட்ட மக்களே தமது அடுத்த வழியைத் தீர்மானிக்கும் உரிமை பெற்றவர்களாகும். சுருக்கமாகக் கூறுவதால்; பாதிக்கப்பட்ட மக்களே பேச்சிற்குச் செல்வதா? அன்றி யுத்தத்திற்குச் செல்வதா? என்பதைத் தீர்மானிக்க முடியும்.

ஆனால் அரசாங்கத்தரப்பின் அணுகுமுறையானது தமிழ் மக்களின்- விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு என்பதற்கு அப்பால் தமது நிலைப்பாட்டில் அவர்கள் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவுள்ளது.

இது ஒரு வகையில் தமிழ்மக்களின் மீதான படுகொலைகள் அலட்டிக்கொள்ளத்தக்கவையல்ல. இவை சாதாரண நிகழ்வுகள் ஜெனீவாப் பேச்சுக்களில் கிட்டப்போகும் பயன்களைப் பெற்றுக் கொண்டு அமைதியாகி விடுங்கள் என்பதாகவே உள்ளது. அவ்வாறு இல்லாது விட்டால் ஜெனீவாப் பேச்சுவார்த்தை தொடர்பாகத் தமிழர் தரப்பின் தீர்மானத்தை அரசாங்கத்தரப்பு எவ்வாறு கூற முடியும்?

ஜெனீவாப் பேச்சுக்கள் நடைபெற வேண்டுமானால் வன்முறைகள் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் நிலைப்பாடு. ஆனால் அரசின் நடவடிக்கைகள் இதற்கு இசைவானவையாக இல்லை. மாறாக வன்முறைகளை அதிகரிப்பவையாகவே உள்ளன.

ஆகையினால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளை அடுத்து பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கும் உரிமை கொண்டவர்களாக தமிழ் மக்களே உள்ளனர். வேறுவிதமாகக் கூறுவதானால் விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டுமா? வேண்டாமா? என்பதைக் கூறும் அதிகாரம் தமிழ் மக்களுக்கே உண்டு.

ஆகையினால் பேச்சுவார்த்தையில் தமிழர்தரப்பு பங்கேற்குமா? இல்லையா? என்பது குறித்து ஆரூடம் கூறுவதை விடுத்து பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு ஏற்றவகையில் ஆட்சியாளர் நடந்து கொள்வதே சிறந்ததாக இருக்கும் ஏனெனில் தமிழர்தரப்பு அரச தரப்பின் அபிலாசைகளுக்கு ஏற்றவகையில் செயற்படவேண்டும் என்ற தேவை எதையும் கொண்டிருக்கவில்லை. 


ஈழநாதம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..