பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow தொண்டர் நிறுவனங்களின் வேலைத்திட்டங்களுக்கு பாதிப்பு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தொண்டர் நிறுவனங்களின் வேலைத்திட்டங்களுக்கு பாதிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 14 February 2006

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் வெலிக்கந்தை பகுதியில் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்ப் பகுதிகளில் செயற்பட்டு வரும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த வேலைத் திட்டங்களில் பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் உருவாகியுள்ளது. இங்கு செயற்பட்டு வரும் தொண்டர் நிறுவனங்களில் பணி புரிபவர்கள் மத்தியில் அச்ச நிலை உருவாகியிருப்பதாக அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். இந்த நிலைமையில் அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது என்ற கேள்வி தான் இன்று முக்கியமாக எழுப்பப்படுகின்றது.

இருபது வருட காலமாகத் தொடரும் யுத்தத்தினால் பெரும் அவலங்களைச் சந்தித்த தமிழர்களுக்கு அரசாங்கம் எந்த வகையிலும் உதவவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அதன் பின்னர் 2004 டிசம்பர் 26 இல் இலங்கையைத் தாக்கிய கடல்கோளும் தமிழர்களுக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தியது. புனரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் என எந்த ஒரு வேலைத் திட்டமும் தமிழ்ப் பகுதிகளில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படாத நிலையில், அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களே தமிழ் மக்களுக்கு அபயமளித்தன.இவற்றில் குறிப்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மேற்கொண்ட பணி பலராலும் பாராட்டப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் அரச உதவிகள் சென்றடையாத முஸ்லிம், சிங்கள கிராமங்கள் சிலவற்றுக்குக் கூட, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரே உதவிகளுடன் விரைந்தார்கள் என்பது உண்மை. பல கிராமங்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் முயற்சியினால் மீளக் கட்டியமைக்கப்பட்டது என்பது கவனிக்கத் தக்கது. இந்தப் பின்னணியில் புனர்வாழ்வுக் கழகத்துக்கு எதிரான பிரசாரங்கள் பேரினவாத அமைப்புகளால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. அதன் செயற்பாடுகளைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இவை எதுவும் பயனளிக்காத நிலையிலேயே புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் ஆயுதந் தாங்கிய குழு ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார்கள். இது ஒரு தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது. நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வாகவே இது இருக்க வேண்டும் எனக் கருதுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

கடத்தல் சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்கள் சென்று விட்ட நிலையில் கூட, அரசாங்கத்தின் விசாரணைகள் ஆரம்பித்த இடத்திலேயே இருக்கின்றன. கடத்திச் செல்லப்பட்டவர்களின் உறவினர்கள் ஆபத்து நிறைந்த காட்டில் முகாமிட்டு, தேடுதலை மேற்கொள்ளும் அளவுக்கு நிலைமைகள் உள்ளன. அதாவது, காவல்துறையினர் மீது நம்பிக்கை வைக்க முடியாதவர்களாக அவர்கள் உள்ளார்கள்.

ஆரம்பம் முதலே இவ்விவகாரத்தை அரசாங்கம் கையாண்ட முறை நம்பிக்கையளிப்பதாக இருக்கவில்லை. இவ்வாறான கடத்தல் சம்பவம் ஒன்று இடம்பெறவேயில்லை என்ற வகையில் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் பொறுப்பற்ற வகையில் கூறியிருந்தார். ஆனால், இப்போது அனைத்துத் தரப்பினருமே இவ்வாறான ஒரு கடத்தல் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இராணுவச் சோதனைச் சாவடிக்கு சில மீற்றர் தொலைவில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பாக இவ்வாறான அணுகு முறையை அரசாங்கம் கடைப்பிடிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்றல்ல. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெறும் ஒரு சம்பவம் தொடர்பாகப் பொறுப்புக் கூற வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால், இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு எந்தளவுக்கு ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

இவ்விடயத்தைக் கையாள்வதில் அரசாங்கம் காட்டுகின்ற அக்கறையற்ற போக்குத்தான் ஏனைய தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள அச்ச நிலைக்குப் பிரதான காரணம். இவர்களின் இந்த அச்ச நிலையைப் போக்குவதற்கோ தொடர்ந்தும் இவர்கள் தமது பணிகளை முன்னெடுப்பதை ஊக்குவிப்பதற்கோ அரசாங்கம் எந்த விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இவர்களது பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை வழங்குவதற்குக் கூட அரசாங்கம் தயாராகவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

இந்த நிலைமைகள் காரணமாகவே தமிழ்ப் பகுதிளில் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் செயற்திட்டங்கள் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக சுட்டிக் காட்டப்படுகின்றது. தமிழ்ப் பிரதேசங்களில் அரசாங்கத்தின் புனரமைப்புத் திட்டங்கள் உரிய முறையில் சென்றடையாதுள்ள நிலைமையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிகளே அவர்களுக்கு நம்பிக்கையளிக்கக் கூடிய வையாக இருந்துள்ளன. அவற்றின் செயற்பாடுகளையும் முடக்கக் கூடிய விதமான நடவடிக்கைகளை மேற்கொள்வது பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.

இந்த நிலையில் அரசாங்கம் இவ்விடயத்தில் பேரினவாத அழுத்தங்களைப் புறக்கணித்து ஆக்க பூர்வமான முறையில் செயற்படுவது அவசியமாகும். தொண்டர் நிறுவனங்கள் சுயாதீனமான முறையில் அவற்றின் பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்குள்ளது என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்


thinakkural
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..