|
இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அவலங்களைத் தந்த உள்நாட்டுப் போர் மீண்டும் மூண்டு விடக்கூடாது என்று பிரார்த்தனை செய்யும் அதிகப் பெரும்பான்மையான மக்கள் எதிர்வரும் புதன்கிழமை ஜெனீவாவில் அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் ஆரம்பிக்கவிருக்கும் பேச்சுவார்த்தை பயனுறுதியுடைய விளைவுகளைத் தந்து போர் நிறுத்த உடன்படிக்கை சீர்குலைந்து விடாதிருப்பதை உறுதி செய்யவேண்டுமென்று ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற அதேவேளை,
புத்த பெருமானின் போதனைகளைப் பரப்புவதற்கென்றே வாழ்நாளை அர்ப்பணித்திருப்பதாகக் கூறித்திரியும் இலங்கையின் பிரபல்யமான பௌத்த மதத் தலைவர்களில் ஒருவர், நன்மையில் நம்பிக்கையற்ற மனோபாவத்துடன் ஜெனீவா பேச்சுவார்த்தையில் பெருமளவுக்கு முன்னேற்றம் ஏற்படுமென்று எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார். அத்துடன் நின்றுவிடாமல், பேச்சுவார்த்தை தோல்வியடையுமானால், விடுதலைப் புலிகளுடன் போரை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக வேண்டுமென்றும் அந்தத் துறவி வலியுறுத்தியிருக்கிறார். ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மெத்தானந்த தேரர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் ராய்ட்டர் செய்தியாளர் சைமன் கார்டினருக்கு பேட்டியொன்றை அளித்திருந்தார். `விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இல்லாவிட்டால் நாடு நன்றாக இருக்கும். சமாதான முயற்சிகளுக்கு பிரபாகரனே முட்டுக்கட்டையாக இருக்கிறார். சமுதாயத்தில் இருந்து அவரின் செல்வாக்கை அகற்ற வேண்டும். விடுதலைப் புலிகள் தங்களது தாயகக் கோட்பாட்டைக் கைவிட்டு, தனி நாட்டுக்கான போராட்டத்தையும் நிறுத்தினால் ஒற்றையாட்சி அரசியலமைப்பொன்றின் கீழ் சாத்தியமானளவு கூடுதல் அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்ய நாம் தயார். பேச்சுவார்த்தையூடாக சமாதானத்தைக் காண நாம் தவறுவோமேயானால், விடுதலைப் புலிகள் பொதுச் சொத்துக்கள் மீதும் மக்கள் மீதும் மீண்டும் தாக்குதல்களைத் தொடுப்பார்களேயானால், பயங்கரவாதிகளைத் தாக்கி அப்பாவி மக்களைப் பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டிருக்கிறது' என்று அவர் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். நோர்வேயின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட முன்னைய சமாதான முயற்சிகளுக்கு எதிராக தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாத முனைப்புடன் மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களைத் தளமாகக் கொண்டு அரசியலில் பிரவேசித்த பௌத்த துறவிகளுக்கு தலைமைதாங்கும் மெத்தானந்த தேரர் பேச்சுவார்த்தை மூலமான இணக்கத் தீர்வில் தனக்கு நம்பிக்கை வேறு இருப்பதாகவும் கூறுகிறார். ஜெனீவா பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், விடுதலைப் புலிகளுடன் மீண்டும் போரை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென்ற தனது கோரிக்கை உலகம் பூராவும் பௌத்த மதத்துக்கு மதிப்பைத் தேடிக் கொடுத்த அமைதி, சமாதானம், அகிம்சை என்ற சித்தாந்தங்களுக்கு முரணானது அல்ல என்றும் அவர் நியாயம் கற்பிக்கிறார். `பௌத்த பிக்குகள் கூட தற்பாதுகாப்புக்காக செயற்பட முடியும். குங் பூ போன்ற போர்க்கலைகளை உலகின் பல நாடுகளில் பௌத்த பிக்குகள் கற்றிருக்கிறார்கள். எனவே தற்காப்புக்காகச் சண்டையிடுவதென்பது பௌத்த சித்தாந்தத்துக்கு எதிரான தல்ல. நாம் இப்போது பயங்கரவாதப் பிரச்சினையையே எதிர்நோக்குகிறோம். அவர்கள் எம்மைத் தாக்குகிறார்கள். எனவே, தற்காப்புக்காக நாம் ஏன் சண்டையிட முடியாது?' என்று மெத்தானந்த தேரர் கேள்வியெழுப்பியிருக்கிறார். ஜெனீவா பேச்சுவார்த்தை எதிர்பார்க்கும் பயனைத் தராவிட்டாலும் கூட மீண்டும் போரை ஆரம்பிக்கப்போவதில்லை என்று அரசாங்கத் தலைவர்களே பகிரங்கமாக அறிவித்திருக்கும் போது ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் மீண்டும் அரசாங்கம் போருக்குச் செல்ல வேண்டுமென்று கோருகிறார். ஜெனீவா பேச்சுவார்த்தையை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி மீண்டும் சமாதான முயற்சிகளை முன்னெடுக்கக் கூடிய சூழ்நிலையைத் தோற்றுவிக்க வேண்டுமென்று அரசாங்கத்துக்கு ஆலோசனை கூற வேண்டிய மெத்தானந்த தேரர், இலங்கையின் அதிகப் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்பட வேண்டுமென்று - அதாவது நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட வேண்டுமென்று விரும்புகிறார். உலகிற்கு அகிம்சை, சமாதானம், அமைதி மற்றும் கருணையை போதித்த போதி மாதவனின் நல்லொழுக்க போதனைகளை உச்சாடனம் செய்யும் பணியை தனதாகக் கொண்ட இந்த பௌத்த துறவி, சாதாரண ஒரு அரசியல்வாதியின் வக்கிர உணர்விற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத முரட்டுப் பிடிவாதத்துடன் போர் வெறியைத் தூண்டும் தன்மையில் பேசுவதை நோக்கும்போது இலங்கையில் பௌத்த மதத்தின் நிலை குறித்து என்னவென்று வர்ணிப்பதென்றே புரியவில்லை. போரை நியாயப்படுத்தும் வகையிலான தனது வாதங்களுக்காக புத்த பெருமானின் போதனைகளுக்கே மெத்தானந்த தேரர் புது விளக்கம் அளிக்கத் தலைப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பௌத்த மதம் எப்போதுமே அமைதி, சமாதானம் மற்றும் அகிம்சையுடன் சம்பந்தப்பட்டதாகவே இருந்து வந்திருக்கிறது. சர்வ சாதாரணமாக இலங்கையில் எங்குமே காணக்கூடியதாயிருக்கும் புத்தர் பெருமான் தியானம் செய்வது போன்ற உருவச் சிலைகளின் தோற்றம் உள் மன அமைதியினதும் வெளி அமைதியினதும் குறியீடாகவே கருதப்படுகிறது. எந்த உயிரையும் கொல்லவோ அல்லது அதற்கு ஊறு விளைவிக்கவோ கூடாது - சகல உயிர்களையும் காக்க வேண்டுமென்பதே பௌத்த மதத்தின் முதன்மைப் போதனையாகும். சமாதான வழிமுறைகளுக்குப் புறம்பாக தங்களின் இலக்குகளை அடைவதற்கு அவ்வப்போது பௌத்தர்கள் நாட்டம் காட்டியிருக்கிறார்கள் என்ற போதிலும், பௌத்தத்தின் பெயரில் உலகில் எந்தவொரு பெரிய யுத்தமும் நடத்தப்பட்டதாக வரலாறு இல்லை. காலஞ் சென்ற பேராசிரியர் வல்பொல ராஹுல தேரர் எழுதிய `புத்தர் போதித்தது என்ன?' என்ற நூல் தேரவாத பௌத்தம் தொடர்பான பிரபல்யமான பாடநூலாக அங்கீகரிக்கப்பட்டது. அரசியல், போர் மற்றும் சமாதானம் தொடர்பில் புத்தரின் போதனை குறித்து அந்நூலில் ராஹுல தேரர் அளித்திருக்கும் விளக்கத்தை இங்கு மேற்கோள் காட்டுவது பொருத்தமானதாக இருக்கும். `புத்தர் அரசியல் குறித்தும் போர் மற்றும் சமாதானம் குறித்தும் தெளிவாகவே விளக்கமளித்திருக்கிறார். பௌத்த மதம் உலகிற்கான அதன் செய்தியாக அகிம்சையையும் சமாதானத்தையுமே போதிக்கிறது. எந்தவிதமான வன்முறையையும் அல்லது உயிரழிவையும் அது நியாயப்படுத்தவில்லை. பௌத்த மதத்தின்படி நீதியான போர் (Just war) என்று எதையுமே அழைக்க முடியாது. வெறுப்பையும் வன்முறையையும் கொடூரத்தையும் படுகொலைகளையும் நியாயப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சொற்பதமே `நீதியான போர்'. நீதியான போர் அல்லது அநீதியான போர் (Unjust war) என்பதைத் தீர்மானிப்பது யார்? வல்லமையுடையவனும் வெற்றி பெற்றவனும் நீதியானவன் - பலவீனமானவனும் தோற்கடிக்கப்பட்டவனும் அநீதியானவன் என்றாகி விடுகிறது. எங்களது போர் எப்போதும் நீதியானது - உங்களது போர் எப்போதும் அநீதியானது என்ற நிலைப்பாட்டை பௌத்த மதம் ஏற்றுக் கொள்வதில்லை. கௌதம புத்தர் அகிம்சையையும் சமாதானத்தையும் போதித்தது மாத்திரமல்ல, போர்க்களத்துக்கு நேரடியாகச் சென்று தலையிட்டு மோதல்களைத் தடுத்துமிருக்கிறார்' thinakkural
|