பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow நிழற்போரின் தொடக்கம் நிஜப்போரில் முடியும்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

நிழற்போரின் தொடக்கம் நிஜப்போரில் முடியும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 17 September 2005

பாவைக் கூத்து என்ற பழம்பெரும் கிராமியக் கலையில் நிழல் ஆட்டம் என்ற கூத்து காணப்படுகின்றது. இவ்வகைக் கூத்து மேடையில் நன்கு இழுத்துக் கட்டப்பட்ட திரைக்குப் பின்னால் நடக்கும். திரைமீது படும்படியாக வெளிச்சம் போடப்பட்டிருக்கும். பாவைகளை ஆட்டுவிப்போரும், பாவைகள் பேசுவதுபோல் குரல் கொடுப்போரும் திரைக்குப் பின்னாலுள்ள மறைவிடத்தில் இருந்து நிகழ்ச்சியை நடத்துவார்கள். பாவைகளின் நிழல் மாத்திரம் திரைக்கு முன்னால் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களின் கண்ணில் படும் இதுதான் நிழல் ஆட்டம்.

இன்று சிறிலங்காவில் நடக்கும் படுகொலைகளை விளங்கிக் கொள்வதற்கு நிழல் ஆட்டம் பற்றிய இந்த முகவுரை தேவைப்படுகிறது.

அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட சிறிது காலத்திற்கு நிழல் ஆட்டத்திற்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. பின்பு கருணாவிவகாரம் ஆரம்பித்தவுடன் நிழல்ஆட்ட மேடை போடப்பட்டுத் திரைச் சீலைக்குப் பின்னால் ஆட்டம் படுவேகமாகத் தொடங்கப்பட்டது. எம்போன்றோர் நிழல் ஆட்டம் பார்க்கிறோம் ஆனால் ஆட்டத்தை யார் நடத்துகிறார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். நிழல் ஆட்டத்திற்கு நாம்புதியவர்களல்ல. இப்போதைய நிழல் ஆட்டத்தை சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவும் தேசத்துரோகத் தமழ் குழுக்களும் இணைந்து நடத்துகின்றனர். யார் யாரோ எல்லாம் குரல் கொடுக்கிறார்கள். ஒரே சந்தை இரைச்சலாக இருந்தாலும் எம்மால் சில பழக்கப்பட்ட குரல்களை நன்கு அடையாளம் காணமுடிகிறது.

சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு ஒன்றும் வழங்குவதற்குத் தயாரில்லை. பண்டுதொட்டு தமிழர்களை ஏமாற்றியே அரசியல் நடத்தியவர்கள் இப்போது ஏதோ உரிமையைக் கொடுத்துவிடுவார்களா என்ன? புலிகளை நிர்மூலமாக்கி விட்டால் ஒட்டுண்ணிகளின் உதவியோடு தமிழர் கதையை முடித்துவிடலாம் என்ற நப்பாசை அவர்களிடம் உண்டு. சிங்கள அரசியல் வாதிகளுக்கும் அவர்களுடைய ஊதுகுழல் ஊடகங்களுக்கும் ஏகப்பட்ட துணிச்சல், தாம் சொல்வதை உலகம் நம்பிவிடும் என்று பலமான நம்பிக்கை. விடுதலைப் புலி உறுப்பினர்களின் படுகொலை சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் இராணுவ முகாமிற்கு அருகாமையில் எப்போதும் நடக்கின்றன. குற்றவாளி பிடிபடுவதில்லை. படுகொலை பற்றி விசாரணை நடக்கும், ஆனால் ஒருவரும் கைது செய்யப்படமாட்டார்கள். இராணுவம் இயக்கும் கொலையாளியை எப்படிக் கைது செய்ய முடியும்? கொலையாளியும், விசாரணை செய்பவரும் கொலையை ஊக்குவிப்பவரும் ஒரே நபராக இருக்கும்போது யார் யாரைக் கைது செய்வது.

புலிகள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மர்மக் கொலைகள் நிழற்போரின் முக்கிய அம்சம். புலிகளுக்கு எதிரான பிரசாரப் போர் நிழற் போரின் இன்னுமோர் அங்கம். கொழும்புப் பத்திரிகைகள் நிழற் போர் புரிகின்றன. புலிகளுக்கு எதிரான செய்திகளைச் சேகரிப்பதிலும் பிரசுரிப்பதிலும் அவை சாதனை படைக்கின்றன. உண்மையைச் சொல்லும் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இந்த வகையில் நாம் நிமலராஜன், நடேசன், சிவராம் போன்றோரை இழந்துள்ளோம். கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்று அரசு நினைக்கிறது. இன்று கொழும்பு அரசு படுகொலைகளுக்கு விளக்கம் தரமுடியாத நிலையில் இருக்கிறது. போதாக் குறைக்கு புலிகளுக்கு எதிரான பிரசாரப் போருக்கு சிறிலங்கா வானொலியில் ஒரு பகுதியை அரசு ஒதுக்கியுள்ளது. இது அமைதி உடன் படிக்கைக்கு எதிரான செயல் மாத்திரமல்ல, அப்பட்டமான போருக்கு விடப்படட அழைப்புமாகும். தேர்தலில் தோல்விகண்ட ஆனந்தசங்கரி இப்போது இந்திய உளவுத்துறையின் முகவராக மாறிவிட்டார். அவரும் நிழற்போர் நடத்துகிறார். பொறுமைக்கும் எல்லை உண்டு. இரவுக்குப்பின் விடியல் வரும். அப்போது நிழல் கலையும் நிஜம் பிறக்கும். அது வெகுதூரம் இல்லை.


erimalai
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..