|
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் தரப்பினரும் தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பினரும் முதல் தடவையாக எதிர்வரும் 22 ஆம் 23 ஆம் திகதிகளில் ஜெனீவா நகரில் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளனர். அரசாங்கத் தூதுக்குழுவுக்கு சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமை தாங்கவுள்ளார். சிரேஷ்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் தூதுக்குழுவில் அங்கம்வகிப்பார்.
இவர்கள் இருவரும் சிரேஷ்ட அரசியல் வாதிகள் மட்டுமல்லாமல் சிரேஷ்ட சட்டத்தரணிகளும் ஆவர். தூதுக்குழுவினருக்கு பட்டறை பட்டறையாக பயிற்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. ஜெனீவா நகரில் பேசப்படவுள்ளது 2002 பெப்ரவரியில் அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் செய்து கொண்ட யுத்தநிறுத்த ஒப்பந்தம் தொடர்பானதாகும். பேச்சுவார்த்தை மேசையில் நோர்வே அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்மும் வீற்றிருப்பார். அரசாங்கத் தூதுக்குழுவினருக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சியின் உள்ளடக்கத்தையும் உள்நோக்கத்தையும் பார்த்தால் பேச்சுவார்த்தைகளை சாதமாக திசை வழியில் முன்னெடுப்பதற்கு ராஜபக்ஷ அரசாங்கம் கிஞ்சித்தும் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்பது துலாம்பரமாகத் தெரிகிறது. விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எழக்கூடிய நிலைப்பாடுகள் மற்றும் வாதங்கள் முதலியவற்றை எவ்வாறு முறியடித்து வென்று வரவேண்டும் என்பதே அரசாங்கத்தின் பிரயத்தனமாகும். பேச்சுவார்த்தைகளில் அரசியல் உள்ளடக்கத்தைக் காட்டிலும் சட்டவாதம் புரிந்து விடுதலைப் புலிகளை வீழ்த்தி விடலாமென ராஜபக்ஷ அரசாங்கம் எண்ணுகிறது. தமிழர் என்பதற்காகத் தமிழருக்கு பிரச்சினை என்றொன்று உண்டு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனும் அசைக்க முடியாத நிலைப்பாடு கொண்டவர் தான் ஜாதிக்க ஹெல உறுமய ( JHU) வின் முன்னோடியான " சிஹல உறுமய " வின் காரணகர்த்தாவாகியவரும் சிரேஷ்ட சட்டத் தரணியுமாகிய எஸ்.எல். குணசேகர. இதே எஸ்.எல். தான் அரசாங்க தூதுக்குழுவினருக்கு சட்டப்பயிற்சிப்பட்டறை நடத்தி வருகிறார். எஸ்.எல்.ஐ. விட மூத்த சட்டத்தரணியாகிய எச்.எல்.டி. சில்வா என்பவரையும் ஜனாதிபதி ராஜபக்ஷ இணைத்துக் கொள்ள எண்ணியிருந்தார். வெளிநாடு சென்றிருந்த அவரை உடனடியாக நாடுதிரும்புமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்திருந்தன. இச்சந்தர்ப்பத்தில் 1986 திம்பு பேச்சுவார்த்தைகள் ஞாபகத்துக்கு வருகிறது.அன்றைய ஜயவர்த்தன அரசாங்க தூதுக்குழுவுக்கு JR இன் தம்பி எச். டபிள்யூ ஜயவர்த்தன தலைமை தாங்கியிருந்தார். அந்த தூதுக்குழுவில் எஸ்.எல். பங்குபற்றியிருந்தார். நடந்தது என்ன? தமிழர் தரப்பிலான 4 அம்சக் கோரிக்கை முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டது. அங்கே முன்வைக்கப்பட்டது தமிழர் தாயகம் சுயநிர்ணய உரிமை, மலையகத் தமிழரின் பிரஜா உரிமை தான் அந்த 4 அம்சக் கோரிக்கை ஆகும். அது தனி நாட்டுக்கான கோரிக்கையல்ல நாடுபிரியாமல் இருக்கக்கூடிய கோரிக்கை. ஆனால் தாயகம், சுயநிர்ணய உரிமை என்பதெல்லாம் தனிநாட்டுக் கோரிக்கை. அல்லது அதற்கான படிமுறை என்பதே சிங்கள பேரினவாதிகளின் குதர்க்கம் ஆகும். அவர்கள் மனங்களில் பிரிவினைப் பிசாசுகுடி கொண்டு அவர்களை ஆட்டிப்படைக்கிறது. நாடு நடுத்தெருவில் தவிக்கிறது. ஜெனீவா நகரில் பேசவிருப்பது யுத்தநிறுத்த ஒப்பந்தம் தொடர்பான விடயம் மட்டும் தான் என இரு தரப்பினராளும் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. முதலாவதாக ஆயுதக்குழுக்களை அரசாங்கம் நிராயுதபாணிகளாக்கி கட்டுப்படுத்த வேண்டும் என்பதாகும். இந்த அம்சத்தில் கருணா குழு பற்றிப்பேசும் போது அது 2002 பெப்ரவரியில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது தோற்றம் பெற்றிருக்கவில்லை அதற்கு அரசாங்கம் பொறுப்பல்ல. அது பற்றிப் பேச முடியாது என சட்ட ஆலோசனை வழங்கப்படுகிறது.இரண்டாவதாக உயர்பாதுகாப்பு வலயங்கள் படையினர் உருவாக்கப்பட்டதால் இலட்சக்கணக்கான மக்கள் 15 வருடங்களுக்கு மேலாக இடம் பெயர்ந்து அவல வாழ்க்கை நடத்தும் பிரச்சினையாகும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம் உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு எந்த அரசாங்கமும் தயாராயில்லை என்பது நன்கு தெரிந்த விடயமாகும், அதாவது, படைத்தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விடயத்தில் விட்டுக்கொடுத்தால் அது விடுதலைப் புலிகளுக்கு அரசியல் ரீதியாகவும் சாதகமாய் அமைந்து விடும், அதுமட்டுமல்லாமல் தென்னிலங்கையிலும் கொந்தளிப்பு நிலை உருவாகிவிடும் என்றெல்லாம் படைதரப்பினர் ஏற்கனவே ஆட்சியாளருக்கு அறிவித்திருந்தனர். அதில் மாற்றம் எதுவும் இல்லை. எனவே, தான் உயர் பாதுகாப்பு வலயங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமானதென காரணம் கற்பிக்கப்படுகின்றது. இதனையே அரச தரப்பினர் ஜெனீவா நகரிலும் கூறப்போகின்றனர் போல் தெரிகிறது. பேச்சுவார்த்தையில் இருதரப்பினருக்கும் பிரயோசனம் உண்டாக வேண்டும் அப்படியான தொரு ( WIN - WIN ) நிலைப்பாட்டிலேயே பொறுப்பு வாய்ந்த அரசாங்கமொன்று இருக்க வேண்டும். அது இலங்கையில் இதுவரை மருந்துக்கும் கிடையாது என்றே சொல்ல வேண்டும். யுத்தநிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தூதுக்குழுக்கள் புறப்படவுள்ள வேளையில் ஜனாதிபதி ராஜபக்ஷ இலங்கையில் தமிழர் தாயகம் எனற பேச்சுக்கே இடமில்லை, அது பிரிவினை வாதம் அதனை அனுமதிக்க மாட்டேன். எனது முதல் இலக்கு சமாதானம் என்று" ரைம் சஞ்சிகைக்கு அண்மையில் வழங்கியிருந்த செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளக சுயநிர்ணய உரிமை கோட்பாட்டுக்கு உடன்பாடு தெரிவித்தனர், எனவே, தமிழர் தாயகமென்பது இலங்கைக்கு உள்ளேயே இருக்கிறது அதற்கு தன்னாட்சி அதிகாரம் கோரப்படுகிறது அது பற்றி பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது ஆட்சியாளரின் நிலைப்பாடாகும். சர்ச்சைக் குரிய விடயங்களை பேசித்தீர்த்துக் கொள்ளலாம் என விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்த நிலைப்பாட்டினையும் ஆட்சியாளர் செவி மடுக்கவில்லை. அதிகளவு அதிகாரப்பரவலாக்கம் என்பதே ராஜபக்ஷவின் யுக்தியாக செய்திகள் வெளிவருகின்றன. இதெல்லாம் கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போன பரவலாக்க ப்பந்தல்கள். ஜனாதிபதி அவர்களே, நீங்கள் நாட்டை முன்னேற்றி சுபீட்சப்பாதையில் இட்டுச் செல்ல எண்ணங்கொண்டால் நாட்டுநலனில் அக்கறையுள்ள நல்ல, நிதானமான ஆலோசகர்களைக் கேளுங்கள். இந்த நாட்டின் கடந்த 5 தசாப்த கால வரலாற்றினை பின்னோக்கிப்பார்க்குமிடத்து, தனிநாட்டுக் கோரிக்கையும் யுத்தமும் தமிழ் மக்கள் மீது ஆளும் வர்க்கத்தினரால் திணிக்கப்பட்டவை என்பது எந்தவொரு பகுத்தறிவுபடைத்த, நேர்மையான இதய சுத்தியான அரசியல் மாணவனாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். மேலும், தமிழ் மக்கள் 3 தசாப்தங்களுக்கு மேலாக ஆளாக்கப்பட்ட தாங்கொணா அட்டூழியங்கள், அழிப்புகள் காரணமாகவே விடுதலைப் புலிகள் இயக்கமே தோற்றம் பெற்றதையும் யாரும் மறுத்து விட முடியாது. இறுதியாக ஒரு வார்த்தை. 1950 களில் இலங்கை இருந்த நிலையைப்பார்த்து வியப்படைந்த சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் இன்று எட்டியுள்ள வளர்ச்சியினை நோக்குமிடத்து எமது இலங்கைத்திருநாடு வெட்கித்தலை குனியும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் ஒரு யுத்தத்தினை இந்த நாடு தாங்குமா என்ற வினாவுக்கே இன்று விடை பகர வேண்டியுள்ளது. வி. திருநாவுக்கரசு
|