|
மரபுவழித்தாயகம், தேசிய இனம், தன்னாட்சி அடிப்படையில் தமிழினத்தின் இறைமைக்கான போராட்டத்தை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும் என்ற குரல் இன்று தமிழர் தாயகமெங்கும் ஓங்கி ஒலிக்கின்றது. சிங்களப் பேரினவாத அரசுகளின் அற்பசொற்ப அரசியல் சலுகைகள் தமிழினத்தின் உரிமையை வழங்காது இதுவரை காலமும் தமிழினம் சிங்கள ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில் இன்னும் தமிழினம் ஏமாறுமா? இது நிச்சயம் நிறைவேறாது.
இப்போது தென்னிலங்கை நிலவரங்களை அவதானிக்குமிடத்து இதனை நன்றாக உணரமுடியும். தமிழினத்திற்கு கொஞ்சம் கூட உரிமை வழங்கக் கூடாது என்பதற்காக இனவாதம் அத்தனையும் ஓரணி திரண்டு நிற்கின்றது. அவர்களின் நோக்கம் இலங்கைத்தீவு அனைத்தையும் ஏகபோக ஆட்சி செலுத்துவது பௌத்த மேலாண்மை வாதத்தை முதன்மைப்படுத்துவது இதற்கான தலைமைப் பொறுப்பை தற்போதுமகிந்த ராஜபக்சவிடம் கைய ளித்துள்ளனர். அத்துடன் அவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வைப்பதற்கான சூட்சிகளும் வகுக்கப்பட்டுவருகின்றன. அவ்வாறு மகிந்தராஜபக்ச வெற்றி பெற்று சிறிலங்காவின் ஜனாதிபதியானால் இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையினம் மிகப் பெரியதொரு ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். எந்தவொரு சமாதான நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்சவோ அல்லது அவரோடு இணைந்திருக்கின்ற பேரினவாத கட்சிகளோ செய்யப் போவதில்லை. தேர்தலின் பின்னர் இப்படித்தான் நடைபெறும் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னர் தமிழினம் இந்த அரசை ஜனாதிபதித் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியினால் சமாதானத்தை ஏற்படுத்தப் போவதாகக் கூறுகின்றார். இதனை எந்தளவிற்கு செய்யப்போகின்றார் என்பதுதான் மற்றுமொரு கேள்விக்குறி? ஏனெனில் இதுவரை சமாதான வழிமுறைகள் தொடர்பாக அவர் பின்பற்றப் போகும் அணுகுமுறைகள் குறித்து இதுவரை எதுவும் குறிப்பிடவில்லை. இன்று சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படாமல் போர்நிறுத்தம் ஆபத்தான சூழலிலுள்ளது. தமிழர் தாயகத்தில் படையினரின் கெடுபிடிகள் கைதுகள் என அராஜகத்தனங்கள் அதிகரித்துள்ள நிலையில் பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சியாகவிருக்கும் ஐக்கியதேசியக் கட்சி அதனை எதிர்த்து அல்லது சம்பவங்களைக் கண்டிக்கும் நிலையிலில்லை. எப்படியாவது தமிழ் மக்களது வாக்குகளை வசீகரித்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணப்பாட்டில் தான் இரு பிரதான கட்சிகளும் உள்ளன. ஆனால் தமிழினம் இனியும் சிங்கள ஆட்சித் தலைமைத்துவங்களை நம்பக்கூடிய நிலையிலில்லை என்பதை அவர்கள் முல்லைத்தீவில் நடந்த தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி வவுனியாவில் நடைபெற்ற தமிழ் தேசிய எழுச்சிப் பிரகடனத்தை வலுவூட்டும் வகையில் முல்லையிலும் பேர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இந்த மாநாட்டில் உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டு எழுச்சிப் பிரகடனத்தை வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே மட்டக்களப்பு கிளிநொச்சி மாவட்டங்களிலும் நடைபெற்றுள்ளது. அடுத்த கட்டமாக மன்னார், யாழ் மாவட்டங்களிலும் இவை நடைபெறவுள்ளன. ஒட்டுமொத்தமாக தமிழர் தாயகத்திலுள்ள அத்தனை தமிழ் மக்களும் சிங்கள அரசியல் தலைமைத்துவங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணமாட்டார்கள் என்பதையே அந்தப் பிரகடனம் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். எனவே தமிழ் மக்களின் விடுதலைக்கான குரல் தமிழர்களிடமிருந்து ஒலித்திருக்கின்றது. இதனை சர்வதேச சமூகம் ஆளமாக உணர்ந்து அங் கீகரிக்க வேண்டியது சர்வதேசத்தின் கடப்பாடாகும். batti eelanatham
|