|
விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல் ஒன்று வந்துள்ளதாகவும் சிறிலங்கா கடற்படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகளைஃ தகவல்களை எத்தனைகாலத்திற்குத்தான் சிறிலங்கா அரச தரப்பு வெளியிட்டுக்கொண்டிருக்கப்போகிறது?
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து சேருகின்றதோ இல்லையோ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் போதெல்லாம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இருந்தோ ஆயுதப்படைத்தரப்பில் இருந்தோ இத்தகைய அறிவிப்புக்கள் வெளியிடப்படுவதுண்டு. இந்நிலையில் ஜெனீவாப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட இருக்கையில் இந்தகவலை வெளியிடுவது ஆச்சரியத்திற்குரியதல்ல. இவ்வாறு அவர்கள் தகவல் வெளியிடுகின்றமைக்குக் காரணம் விடுதலைப் புலிகள் யுத்தத்திற்குத் தயாராகி வருகிறார்கள், சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தைப் பயன்படுத்தித் தம்மைப் பலப்படுத்திக்கொள்ளப்பார்க்கின்றார்கள் எனச் சர்வதேச சமூகத்திற்குக் கூறிக்கொள்வதற்கே ஆகும். விடுதலைப்புலிகள் இயக்கம் தம்மைப்பலப்படுத்திக் கொள்வதற்காக ஆயுத தளபாடங்கள் கொள்வனவு செய்வதையோ அன்றி அதனைக் கொண்டுவந்து சேர்ப்பதையோ யுத்த நிறுத்த உடன்பாடு தடை செய்வதாக இல்லை அவ்வாறு யுத்த நிறுத்த உடன்பாடு தடைசெய்வதாக இருக்குமானால் யுத்த நிறுத்த உடன்பாட்டின் தளமே ஆட்டம் கண்டு விடக்கூடியதாகும். ஏனெனில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் இதுவரையில் அரசியல் ரீதியிலான உடன்பாடு ஒன்றும் எட்டப்படவில்லை. இராணுவ ரீதியான யுத்த நிறுத்த அடிப்படையிலான உடன்பாடே எட்டப்பட்டுள்ளதொன்றாகும். அதாவது இரு தரப்பிற்கும் இடையிலான இராணுவ சமநிலை ஒன்றினடிப்படையில் உடன்பாடு ஒன்று எட்டப்பட்;டுள்ளது என்பதே சரியானதாகும். இந்நிலையில் இராணுவச் சமநிலை தொடர்ந்து பேணப்படும் வரையிலேயே யுத்த நிறுத்தம் சத்தியப்பாடானதாகும். எடுத்துக்காட்டாக விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்பாட்டை செய்து கொண்ட அரசாங்கம் தற்போழுது அதனை மாற்றியமைக்க வேண்டும் எனக்கோருவதே இராணுவ சமநிலையில் தமது பலம் மேலோங்கியுள்ளது என்பதினாலேயே ஆகும். ஆனால் எது எப்படியோ விடுதலைப் புலிகளும் தம்மை பலபடுத்திக்கொள்ளாமல் இருக்கப்போவதில்லை என்பது திண்ணம் ஆனால் அதற்காக சாமதானப் பேச்சுவார்த்தை காலத்தில் அதாவது பேச்சுவார்த்தை மேசையில் இரு தரப்பும் சந்திக்கும் போதுதான் ஆயுதக்கப்பல் வருகின்றது என்றும் அது தேடப்படுகின்றது என்று தகவல் வெளியிடுவது சிறுபிள்ளைத் தனமானது. சாமாதனப் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ள நிலையில் அதாவது அனைவரது கவனமும் பேச்சுவார்த்தை நோக்கியதாக இருக்கையில் ஆயுதக்கப்பல்களை புலிகள் கொண்டு வந்து சேர்த்துவிடுகின்றார்கள் என்பதே இதற்கு அவர்கள் அளிக்க முற்படும் விளக்கமாகும். ஆனால் இவை இன்று சர்வதேச ரீதியில் எடுபடத்தக்க பிரச்சாரங்கள் அல்ல. ஏனெனில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அரசின்; கவனம் இருக்கும்போதுதான் விடுதலைப் புலிகள் ஆயுத தளபாடங்களை கொண்டு வந்து சேர்க்க வாய்ப்பு இருப்பதெனக் கூறுவதெல்லாம் வரலாற்றிக்கு முரணானது. ஏனெனில் விடுதலைப் புலிகள் தீவிரமாக யுத்தம் நடந்த காலத்திலும் பெருமளவு ஆயுதங்களைக் கொண்டு வந்துள்ளனர் என்பதே கடந்த காலம் நிகழ்வாகும். இதனை நாம் கூறவில்லை. யுத்தம் நடந்த காலத்தில் சிறிலங்கா அரசாங்கத்தரப்பே பல தடவை கூறியுள்ளது. ஆகையினால் புலிகள் தேவைப்படும்போது ஆயுதங்களைக் கொண்டுவந்து சேர்க்கும் பலம் பெற்றவர்களாகவுள்ளனர் என்பதே யதார்த்தமாகும். அது மட்டுமன்றி சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் சிறிலங்காக் கடற்படை கண்களை மூடிக்கொண்டு இருக்கும் என்றோ, தனது ரோந்துப்பணிகளை நிறுத்தி சமாதானப் பேச்சுவார்த்தை மேசையில் நடப்பதை ஆவலுடன் பார்த்துக் கொண்டு இருக்கும் என எண்ணுவதற்கோ புலிகள் ஒன்றும் உலகம் புரியாதவர்கள் அல்ல. ஆகையினால் சிறிலங்கா ஆட்சியாளர்கள் இனியாவது சிறுபிள்ளைத்தனமான இத்தகைய பிரச்சாரங்களைக் கைவிடவேண்டும். ஏதோ இலாபம் கிட்டிவிடும் என்ற நோக்கில் செய்யமுற்பட்டு அவமானப்பட்டுக்கொள்வதை நிறுத்திக் கொள்ளுதல் வேண்டும். அல்லது அவ்வாறு இப்பிரச்சாரங்கள் நிறுத்தப்படாது விட்டால் அவமானப்படப்போவது சிறிலங்கா ஆட்சியாளர்களே ஒழிய வேறுயாருமல்ல. ஈழநாதம்
|