|
இனப்பிரச்சினை தொடர்பாக தமிழர் தரப்பிற்கும் சிறிலங்கா அரசதரப்பிற்கும் இடையில் பல்வேறு இடங்களில் பல தடவைகள் பல சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்துள்ளன. இதில் சாத்வீகப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய தலைவர்கள் நடாத்திய பேச்சுவார்த்தைகள் போக, ஆயுதப்போராட்டம் முனைப்புப் பெற்ற பின்னரான பேச்சுவார்த்தைகளும் பல காலத்திற்குக்காலம் இடம்பெற்றதுண்டு.
இந்த வகையில் 1985 இல் திம்புவில் தொடங்கி பெங்களுர், கொழும்பு, யாழ்ப்பாணம் என ஒரு கட்டத்திலும் பின்னர் தாய்லாந்து, ஜேர்மனி, நோர்வே என மேற்குலக நாடுகளிலும் மற்றும் யப்பானிலும் இப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வகையில் சுமார் மூன்றாண்டுகால இடைவெளியின் பின்னர் இன்று சுவிற்சர்லாந்து- ஜெனீவா நகரில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகவுள்ளன. ஆனால் இதுவரையில் நடந்த முன்னைய பேச்சுவார்த்தைகளுக்கும் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள பேச்சுவார்த்தை களுக்குமிடையில் தெட்டத்தெளிவான வேறுபாடுகள் உண்டு. முன்னைய பேச்சுவார்த்தைகள் என்பது இனப்பிரச்சினைக்கான சமாதானப்பேச்சுவார்த்தை என்ற பரந்துபட்ட தளத்தில் வரையறைகள் ஏதுமற்ற விதத்தில் நடத்தப்பட்டவையாகும். அதாவது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு யோசனைகள், யுத்த நிறுத்த யோசனைகள், மக்களின் இயல்பு வாழ்க்கையை மேம்படுத் துதல், புனர்வாழ்வு புனரமைப்புப்பணிகளுக்கான வழிமுறைகள், ஒரு கட்டத்தில் இடைக்கால நிர்வாக சபைகள் என்ற ரீதியில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. ஆனால் இப்பேச்சுவார்த்தைக்கு எல்லைகள், வரையறைகள் போன்றவை இருக்கவில்லை. அவை குறித்து உறுதியானதும், இறுதியானதுமான முடிவுகளை அவை எடுக்கவும் இல்லை. எடுக்க வேண்டிய தேவை ஏற்படவும் இல்லை. ஆனால் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகும் பேச்சுவார்த்தைகள் அவ்வாறானதாக இல்லை. எதைப்பற்றிப் பேசுவது எவ்வாறு பேசுவது என்பது குறித்த விடயம் வரையறை செய்யப்பட்ட தொன்றாகவே உள்ளது. தெளிவாகக் கூறுவதானால் பரீட்சையின் போது ஆம்ஃ இல்லை என ஒரு சொல்லில் பதிலளிக்கும் பரீட்சை முறை போன்றதே இன்றைய பேச்சுவார்த்தையாகும். அதாவது சிறிலங்கா அரசாங்கத்துக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையில் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி கையொப்பமிடப்பட்ட யுத்த நிறுத்த புரிந்துணர்வு உடன்பாட்டை அரசாங்கம் செயற்படுத்தத் தயாராக உள்ளதா? இல்லையா? என்ற கேள்விக்கு அரசிடம் இருந்து பதில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை விடுத்து இம்முறை சிறிலங்கா அரசாங்கத்துடன் விடுதலைப் புலிகள் விவாதம் எதையும் செய்யவோ காலத்தை இழுத்தடிக்கவோ விரும்பவில்லை என்பதாகவே அவர்கள் அண்மைக்காலமாக வெளியிடும் அறிவிப்புக்கள் உள்ளன. அதாவது யுத்தநிறுத்த உடன்பாடு அமுலாக்கம்ஃ செம்மையாக அமுல்படுத்துதல் பற்றி மட்டுமே பேசப்படும். விடுதலைப் புலிகள் அதன் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைக்கு தமது இணக்கப்பாட்டை வெளியிட்டும் இருந்தனர். ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மகிந்த சிந்தனை என்ற பெயரில் அதை ஒரு விவாத மேடையாக நடத்துவதற்குத் தயாராவது போன்றதொரு தோற்றப்பாடு காணப்படுகின்றது. அதாவது யுத்தநிறுத்த உடன்பாட்டை மாற்றியமைத்தல், அண்மையில் வடக்கு - கிழக்கில் இடம்பெற்ற வன்முறைக்கும் அரசாங்கத்துக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை ஒட்டுக்குழுக்கள் எவையும் இராணுவத்துடனும் இல்லை. என்பதுபோன்ற விடயங்களை வாதிடவும் காலத்தை இழுத்தடிப்புச் செய்யவுமே அது விரும்புவது போல் தெரிகின்றது. அதுமட்டுமன்றிச் சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளச் செல்லும் அரசதரப்புப் பிரதிநிதிகளுக்கு கொழும்பிலிருந்து மிகையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டும் உள்ளது. விடுதலைப் புலிகளின் போக்கில் பேச்சுவார்த்தைகள் செல்வதைத் தடுத்துவிட வேண்டும்; விடுதலைப் புலிகளுக்கு உறுதியான வாக்குறுதிகள் எவையும் வழங்கிவிடுதல் கூடாது கொழும்பிலிருந்து சனாதிபதியின் ஆலோசனைகள் கிடைக்கப்பெறாமல் பேச்சுவார்த்தையில் புதிய விடயங்கள், புதிய இணக்கப்பாடுகள் எதற்கும் உடன்பட்டுவிடக்கூடாது என்பதே. ஆனால் இன்றைய அரசியல் யதார்த்தத்தினைப் பொறுத்து நடைபெறப்போகும் பேச்சுவார்த்தையில் தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டும் என்பது தவிர்க்கமுடியாத தொன்றாகியுள்ளது. ஏனெனில் அத்தகைய முடிவு ஒன்று எட்டப்படும்போதே இலங்கையில் மீண்டும் யுத்தம் தவிர்க்கப்படக்கூடியதாக இருக்கும் அவ்வாறு இல்லாது போனால் யுத்தம் தவிர்க்கப்பட முடியாததாகவே இருக்கும். இதனைப் பேச்சுவார்த்தை மேசையில் உறுதியான ஒரே நிலைப்பாட்டிலுள்ள விடுதலைப் புலிகள், பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டால் உடனடியாக யுத்தத்திற்குச் செல்வார்கள் என்ற அர்த்தத்தில் கூறவில்லை. இலங்கையில் யுத்தத்திற்கான சூழ்நிலை தவிர்க்கப்படமுடியாத அளவில் உருவாக்கப்படும் என்ற அடிப்படையில் உறுதியாக இதனை எதிர்வுகூற முடியும். கடந்த மாத இறுதியில் நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சரும் பிரதான சமாதான ஏற்பாட்டாளருமான எரிக் சூல்ஹெய்ம் இலங்கை வந்துசென்ற பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் வன்முறைகள் குறைந்ததென்னவோ உண்மை தான். ஆனால் இராணுவ நெருக்குவாரங்களும் தமிழ் மக்கள் மீதானதும், விடுதலைப் புலிகள் மீதான பாரிய வன்முறைகள் இடம்பெறாமலும் இல்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிப்போராளி ஒருவர் தாக்குதலில் கொல்லப்பட்டதும், தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் 15 பேர் கடத்தப்பட்டு பின்னர் அதில் எட்டு பேர் விடுதலை செய்யப்பட்ட அதேவேளை இன்னமும் ஏழு பேரின் நிலை என்னவென்று அறியமுடியாத நிலையுமேயுள்ளது. இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கம் வன்முறைகளை நிறுத்திக்கொண்டதாக அர்த்தம் கொள்ளமுடியாது. சிறிலங்கா அரசாங்கமோ அதன் ஆயுதப் படைத்தரப்போ இச்சம்பவங்களுக்கும் தமக்கும் தொடர்பு இல்லையென்றோ அன்றி இத்தகைய கடத்தல் எதுவும் நடந்ததாக தடயம் எதுவும் உறுதியாக இல்லையெனக் கூற விளைவதினாலோ இந் நெருக்கடிகள் தீர்ந்து விட்டதாகவோ அரசாங்கத்தின் பொறுப்பு அற்றுப்போய் விட்டதாகவோ அர்த்தமில்லை. போர்நிறுத்த உடன்பாட்டிலும் சரி, போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரின் நிலைப்பாட்டிலும் சரி இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இடம்பெறும் சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். இதனை சிறிலங்கா அரசாங்கம் தட்டிக்கழிக்குமானால் அரசாங்கம் யுத்தநிறுத்த உடன்பாட்டிற்கு மாறாகச் செயற்படுவதாகவே அர்த்தம் கொள்ளப்படுவதாக இருக்கும். இத்தகையதொரு நிலையில் ஜெனீவாவில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான முடிவு எதுவும் உறுதியாக மேற்கொள்ளப்படாத நிலையில் நாட்டை யுத்தத்தை நோக்கி விரைவிலேயே சிறிலங்கா ஆயுதப்படைத் தரப்பும், அதனுடன் இணைந்து செயற்படும் ஒட்டுக்குழுக்களும் இட்டுச்சென்றுவிடும் என்பதே நிதர்சனமானதாக இருக்கும். ஆகையினால் யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான சாதகமான முடிவு ஜெனீவாப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட முடியாது போனால் இலங்கையில் யுத்தம் என்பது தவிர்க்கப்பட முடியாததொன்றாகவே இருக்கும். யுத்த நிறுத்த உடன்பாட்டின் பிரகாரம் சிறிலங்கா அரசால் நிறைவேற்றப்பட வேண்டிய பல விடயங்கள் உண்டு. குறிப்பாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மக்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்ப அனுமதித்தல், சுதந்திரமாக தொழில் செய்ய அனுமதித்தல், விடுதலைப்புலிப் போராளிகளை இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் அனுமதித்தல் போன்ற பல விடயங்கள் உள்ளன. ஆனால் இவை யாவற்றிற்கும் மேலாக சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்கள் தொடர்பாக அரசாங்கத்தரப்பிலிருந்து கிடைக்கப்பெறும் பதிலே யுத்த நிறுத்தத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இருக்கும். விடுதலைப் புலிகள் இவ்விடயத்தில் அக்கறை செலுத்துவதைக்கொண்டு விடுதலைப் புலிகளுக்கு ஒட்டுக்குழுக்களால் அச்சுறுத்தல் எழுந்துள்ளது என்றோ, இவ் ஒட்டுக்குழுக்கள் விடுதலைப் புலிகளுக்குச் சவால் விடும் அளவில் உள்ளன என்றோ, சிறிலங்கா படைத்தரப்போ அன்றி ஆட்சியாளர்களோ அன்றி வெளியிலுள்ள வேறு யாராவதோ கருதுவார்களேயானால் அவர்கள் இலங்கையின் அண்மைய அரசியல் வரலாற்றைக்கூட சரியான களமதிப்பீடு செய்யத் தவறியவர்களாகவே இருப்பர். ஏனெனில் விடுதலைப் புலிகள் தற்பொழுது தான் தேசவிரோத சக்திகளை சந்திக்கின்றனர் என்றோ, ஒட்டுக்குழுக்களைச் சந்திக்கின்றனர் என்றோ இல்லை. தற்பொழுது உள்ள தேசவிரோத சக்திகளை விடவும் தற்போதுள்ள ஒட்டுக் குழுக்களைவிடப் பலமான ஒட்டுக்குழுக்களையும் - குறிப்பாக சிறிலங்கா அரசை விட பலமான அரசுகளுடன் இயங்கிய பல ஒட்டுக்குழுக்களையும் சந்தித்தே இருந்தனர். ஆனால் அவ் ஒட்டுக்குழுக்களால் புலிகளைப் பலவீனப்படுத்திவிட முடியவில்லை. மாறாகப் பல ஒட்டுக்குழுக்கள் தங்கள் அழிவையே தேடிக்கொண்டனர். சுருக்கமாகக் கூறுவதானால் விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த இரண்டு தசாப்தமாக நடாத்திய யுத்தத்தை தனியாக சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்புடன் மட்டும் நடத்தவில்லை. அவர்களுடன் சேர்த்து தேசவிரோத குழுக்களுக்கும் எதிராகவே நடத்தினர். வேறு விதமாகக் கூறின் ஒட்டுக்குழுக்கள் இன்றி சிறிலங்கா இராணுவம் புலிகளுக்கு எதிராகப் போரிட்டது இல்லையென்றே கூறலாம். இந்திய இராணுவம் புலிகளுக்கு எதிராகப் போரிட்ட போதும் இதுவே நிகழ்ந்தது. ஆகையினால் விடுதலைப் புலிகளுக்கு இவ் ஒட்டுக்குழுக்கள் இராணுவ ரீதியில் சவால் எதனையும் விடுப்பார்கள் என்றோ அதனால் புலிகளுக்கு நெருக்கடியானதொரு சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்பதோ ஒட்டுக்குழுக்களை வெளியேற்றவேண்டும், கட்டுப்படுத்தவேண்டும் என்ற புலிகளின் நிலைப்பாட்டிற்குக் காரணம் அல்ல. இவ் ஒட்டுக்குழுக்கள் எவற்றுக்கும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிடும் ஆற்றல் எப்பொழுதுமே இருந்ததில்லை என்பதற்கு அவர்கள் ஆயுதப்படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு அப்பால் கால் வைப்பதில்லை என்பதில் இருந்து எவராலும் புரிந்து கொள்ளமுடியும். ஆகையினால் விடுதலைப் புலிகள் இவர்களை இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதியில் இருந்து வெளியேற்றக் கோருவது இவ் ஒட்டுக்குழுக்கள் சமாதானத்தின் விரோதிகளாகச் செயற்படுவார்கள், செயற்படுத்தப்படுவார்கள் என்பதன் காரணத்தினால் மட்டுமே. அவ்வாறு இல்லாது ஒட்டுக்குழுக்கள் அனுமதிக்கப்படுமானால் அவர்களின் நடவடிக்கைகள் தொடருமானால் அவை இரண்டு விதத்தில் அமைதியையும், யுத்திநிறுத்த உடன்பாட்டையும் பாதிப்பவையாக இருக்கும். ஒருபுறம் அவர்கள் தமிழ் மக்கள்மீது கட்டவிழ்த்து விடும் அராஜகமும், இன்னொரு புறம் அவர்கள் மீதான நடவடிக்கையும் என்ற ரீதியில் யுத்த நிறுத்தம் மிக விரைவில் பாதிக்கப்படுதல் தவிர்க்கப்பட முடியாததாகவே இருக்கும். ஒரு விவாதத்திற்கு வைத்துக்கொள்வோம். சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இராணுவத்தின் படை முகாமிற்குள்ளோ அன்றி அதை அண்டியதானதாக இருக்கும் ஒட்டுக்குழுக்களின் முகாம்கள் மீதோ விடுதலைப் புலிகள் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளுதல் யுத்த நிறுத்த உடன்பாட்டைப் பாதிக்காமல் இருக்க முடியுமா? இதனை ஒட்டுக்குழுக்கள் மீதான நடவடிக்கை எனக் கூறி அரசு மௌனம் காக்குமா? ஆகையினால் ஒட்டுக்குழுக்கள் பற்றிய யுத்தநிறுத்த உடன்பாட்டு விதி அமுல் செய்வது குறித்த ஜெனீவாவில் உறுதியான தீர்மானம் குறுகியகால எல்லையுடன் கூடியதாக வரையறை செய்யப்படாது போனால் யுத்தம் விரைவில் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகவே இருக்கமுடியும். ஆகையினால் இன்றைய ஜெனீவாப் பேச்சுவார்த்தையின் முடிவுகள் முன்னைய பேச்சுக்கள் போன்று அடுத்த கட்டப் பேச்சுக்களில் விவாதிக்கப்படும், தீர்மானிக்கப்படும் என்ற தீர்மானத்துடன் நிறைவடைபவையாக இருக்க முடியாது. விடுதலைப் புலிகள் தரப்பு தீவிர முடிவுக்கு உடன் செல்லாது இருப்பினும் சிறிலங்கா இராணுவத்தரப்பும், இராணுவப் புலனாய்வுத்துறையும் அது ஆதரித்து வளர்த்துவரும் ஒட்டுக்குழுக்களினதும் நடவடிக்கைகள் அமைதியையும், யுத்த நிறுத்த உடன்பாட்டையும் குழிதோண்டிப் புதைத்து விடுதல் கூடும். ஆகையினால் யுத்த நிறுத்த உடன்பாட்டை அரசாங்கம் அமுல்ப்படுத்தத் தயாரா? இல்லையா? எனக்கூறும் பதில் மட்டுமே அடுத்து யுத்தமா? சமாதானமா? என்பதைத் தீர்மானம் செய்துவிடும். அரச தரப்பு ஒட்டுக்குழுக்கள் குறித்து வாதம் எதையும் முன்வைக்க முனையுமானால் அது சமாதான முயற்சிகளை முன்னெடுக்கத்தயாராக இல்லையென்றே கொள்ளமுடியும். அதாவது ஏற்கனவே தமது ஆயுதப்படை களை யுத்தத்திற்குத் தயார்படுத்திவரும் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு என்பதில் உறுதியாக இருப்பதாகவே பொருள்படும். ஆகையினால் யுத்தம் என்பது விரைவில் எதிர்பார்க்கப்படுவதாக இருக்கும். ஜெயராஜ்
|