நோர்வே தொடர்பான தனது கடும்போக்கு நிலைப்பாட்டை மாற்றியது ஜே.வி.பி.: இனி இராஜதந்திர உறவாம்
-
இவ் விடயம் 11. 01. 2010, (ஞாயிறு),
தமிழீழ நேரம் 12:02க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள்
நோர்வேயுடனான உறவுகளை சிறிலங்கா அரசாங்கம் துண்டித்துக்கொள்ள வேண்டும் என தொடர்ந்து போராட்டங்களை நடத்திவந்த சிறிலங்காவின் இனவாதக் கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி. இப்போது தன்னுடைய அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.
நோர்வேயுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், அந்த நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கு தாம் இனி எதிர்ப்புத் தெரிவிக்கப்போவதில்லை எனவும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.
“பிரிவினைவாத” விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை நோர்வே எடுத்திருப்பதாகத் தெரிவித்து நோர்வேக்கு எதிரான போராட்டங்கள் பலவற்றை ஜே.வி.பி. முன்னெடுத்து வந்தமை தெரிந்ததே.
கொழும்பிலுள்ள நோர்வேயின் தூதுவரகம் மூடப்பட வேண்டும் என்பதும், நோர்வேயுடனான இராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட வேண்டும் என்பதும் ஜே.வி.பி.யின் முதன்மைக் கோரிக்கைகளாக இருந்து வந்தது.
இது தொடர்பாக கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கருத்து வெளியிட்ட அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்:
“நாம் எமது கடும் போக்கான நிலைப்பாட்டை இபோது தளத்திக்கொண்டுள்ளோம். கடந்த காலத்தில் பிரிவினைவாதிகளுக்கு உதவியும் ஒத்துழைப்பும் வழங்கிவருவதாக நோர்வேயை நாம் விமர்சித்துவந்துள்ளோம்.
அந்தக் காலத்தில் இங்குள்ள நோர்வே தூரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் நாம் மறுத்து வந்திருக்கின்றோம்.
இப்போது போர் முடிவுக்கு வந்துவிட்டது. அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
இது தான் சரியான இராஜதந்திரமாகும். எமது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இறுக்கமாக இருப்பதற்கு நாம் விரும்பவில்லை.
பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் சில கொள்கைகளுடன் நாம் உடன்படாத போதிலும், இந்த இரண்டு நாடுகளுடனும் இராஜதந்திர ரீதியான உறவுகளை நாம் தொடர்ந்தும் பேணிவந்திருக்கின்றோம்.
கொழும்பிலு்ள்ள அமெரிக்க தூதுவரகத்துடன் மிகவும் சிறப்பான உறவுகளை நாம் கொண்டிருக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.
எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவுக்குத் தாம் ஆதரவளிப்பது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அநுர குமாரதிசாநாயக்க, பொன்சேகாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் 10 அம்ச உடன்படிக்கை ஒன்று மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
அது போரினால் பாதிக்கப்பட்ட பகுதிளிலுள்ள மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவது தொடர்பானது மட்டுமே என விளக்கினார்.
இந்த உடன்படிக்கையைத் தவிர, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கம் சொல்வதைப் போல எந்தவிதமான உடன்படிக்கையையும் பொன்சேகா செய்துகொள்ளவில்லை எனக் குறிப்பிட்ட அநுர குமார, இந்த உடன்படிக்கையின் பிரதிகளை ஊடகவியலாளர்களுக்கு விநியோகித்தார்.
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!




