கடலோரக் காவல்படையை உருவாக்கியது சிறிலங்கா – உதவிகளை வழங்கியது அவுஸ்ரேலியா?

சிறிலங்கா அரசாங்கம் நேற்று கடலோரக் காவல்படை என்ற புதிய கடல் பாதுகாப்புப் படையொன்றை உருவாக்கியுள்ளது.

காலி துறைமுகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கடலோரக் காவல்படையை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆரம்பித்து வைத்தார்.

சிறிலங்கா கடற்படையின் ஒரு பிரிவாக இயங்கவுள்ள இந்தப் படைப்பிரிவுக்கு றியர் அட்மிரல் தயா தர்மப்பிரிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்றொழில் அமைச்சின் கீழ் கடலோரக் காவல் திணைக்களம் உருவாக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது இந்தப் படைப்பிரிவு அதிநவீன ரோந்துப் படகுகள், ஆயுதங்கள், தொடர்புசாதனங்களுடன் விரிவுபடுத்தப்பட்டு கடற்படையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படைப்பிரிவின் பிரதான பணியாக இலங்கைக் கடற்பரப்புக்குள் இடம்பெறும் அத்துமீறல்களைத் தடுப்பதும், போதைப்பொருள் மற்றும் ஆட்கடத்தல்களை தடுப்பதுமாகும்.

கடலோரக் காவற்படையை உருவாக்கியுள்ளதன் மூலம் அவுஸ்ரேலியா, இத்தாலி போன்ற நாடுகளுக்கு கடல்வழியாக ஆட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க முடியும் என்றும் போதைப்பொருட்கடத்தல்களை கட்டுப்படுத்த முடியும் என்றும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசார சமரசிங்க, மற்றும் சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலியத் தூதுவர் கதி குலுக்மன் [Kathy Klugman] ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிறிலங்காவின் கடலோரக் காவல் படைப்பிரிவில் தற்போது 100பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அதேவேளை மேலும் ஆளணியினர் சேர்க்கப்பட்டு இது விரிவுபடுத்தப்படவுள்ளது.

சிறிலங்கா அரசு கடலோரக் காவல்படையை உருவாக்குவதற்கு அவுஸ்ரேலியா பின்புல ஆதரவை வழங்கியதாகக் கருதப்படுகிறது.

கடலோரக் காவல்படையின் ஆரம்ப நிகழ்வில் அவுஸ்ரேலியத் தூதுவர் பங்குபற்றியிருந்தார்.

ஏற்கனவே அவுஸ்ரேலியக் கடற்படையின் ‘HMAS Glenelg’ என்ற போர்க்கப்பல் கடந்த ஜனவரி 28ம் திகதி கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்தது.

அந்தப் போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படைத் தளபதியை அழைத்துச் சென்றிருந்த அவுஸ்ரேலிய தூதுவர் தமது நாட்டுக் கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

அதற்கு முன்னதாக ஜனவரி 13ம் திகதி புதுடெல்லியில் உள்ள அவுஸ்ரேலியப் பாதுகாப்பு ஆலோசகரான கடற்படை கப்டன் இன்ஸ் கொழும்பு வந்து அவுஸ்ரேலிய பிரதித் தூதுவருடன் இணைந்து சிறிலங்காவின் கடற்படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பலருடனும் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

சிறிலங்காவில் இருந்து அதிகளவானோர் அவுஸ்ரேலியாவுக்கு படகுகளில் செல்வதால் அதைத் தடுக்கும் நோக்கில் சிறிலங்கா அரசுக்கு, கடலோரக் காவல்படையை அமைப்பதற்காக அவுஸ்ரேலியா மறைமுக உதவியை வழங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.