என்னையே இவ்வாறு நடாத்தியுள்ளார்கள் என்றால்? – பொப் றேயின் காலம் கடந்த ஞானம்!
- இவ் விடயம் 22. 06. 2009, (வெள்ளி),தமிழீழ நேரம் 23:50க்கு பதிவு செய்யப்பட்டது
- கட்டுரைகள், செய்திகள்
போன மச்சான் திரும்பி வந்தார் பூமணத்தோடே என்பது பழமொழி. ஆனால் ஸ்ரீலங்காவுக்கு செலவு மேற்கொண்ட ரொறன்ரோ மத்திய நாடாளுமன்ற உறுப்பினரும் லிபரல் கட்சியின் வெளியுறவு விமர்ச்சகருமான பொப் றே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வேண்டுமட்டும் அவமானப்பட்ட பின்னர் கனடாவுக்குத் திரும்பி வந்துள்ளார்.
கடந்த யூன் மாதம் 09 ஆம் நாள் மாலை ஒட்டாவிலுள்ள ஸ்ரீலங்கா தூதுவர் வழங்கிய விசாவோடு தில்லியில் இருந்து விமானத்தில் கொழும்புக்குப் பொப் றே பயணமானார். அவரோடு கனடா தூதரக அதிகாரிகள் இருவர் பயணப்பட்டனர்.
பொப் றே ஸ்ரீலங்கா வருவது குறித்து முன்கூட்டியே தகவல் அறிந்த ஸ்ரீலங்காவின் தேசிய புலனாய்வுத் துறை தேசிய பாதுகாப்புக் கருதி அவரை ஸ்ரீலங்காவிற்குள் அனுமதிக்கக்கூடாது என்று குடிவரவு அதிகாரிகளுக்கு எச்சரித்து இருந்தது.
அதன்படி கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய பொப் றே யை அதிகாரிகள் 12 மணித்தியாலம் அங்கேயே தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
இது குறித்து ஸ்ரீலங்கா குடிவரவு – குடியகல்வு திணைக்கள ஆணையர் அபேயக்கோன் “பொப் றே இந்த நேரத்தில் ஸ்ரீலங்காவிற்கு வருவது தேசியப் பாதுகாப்புக்கு நல்லதல்ல என்று உளவுத்துறை அரசுக்கு எச்சரித்ததால் அவர் இலண்டன் செல்லும் அடுத்த விமானத்திலேயே வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டதாகத்” தெரிவித்தார்.
விமானநிலையத்தில் வைத்து “ஸ்ரீலங்கா நிலைவரம் குறித்து உண்மையான விவரங்களை அறியாமல் அறிக்கைகள் வெளியிட்டுள்ளேன், இதற்காக வருந்துகிறேன்”; என அறிக்கையொன்றில் கையெழுத்திடுமாறு கேட்டனர். ஆனால் நான் மறுத்து விட்டேன். அதில் ஸ்ரீலங்கா இராணுவமும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராசபக்சாவும் நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளன், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பேர்வழி என முட்டாள்தனமான கருத்தை முன்வைத்தனர்” என்கிறார் பொப் றே.
கடந்த மே மாதம் 28 ஆம் நாள் கொழும்பில் உள்ள கனடா தூதரகம் சிங்கள வெறியர்களின் தாக்குதலுக்கு இலக்கானது தெரிந்ததே. விடுதலைப் புலிகளுக்கு கனடா ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி சிங்கள வெறியர்கள் கற்களை வீசித் தாக்கியும் கனடிய தூதரகத்தின் சுவர்களில் எதிர்ப்பு வாசகங்களை எழுதியும் பாதுகாப்பு ஒளிப்படக் கருவிக்கு வர்ணம் பூசியும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
இது திட்டமிட்ட இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்துள்ள கனடா அது மிகவும் கண்டித்தக்கது எனக் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் ஸ்ரீலங்காவில் உள்ள கனடா தூதரகத்தைப் பாதுகாக்கக் காவல்துறை போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கனடா சுட்டிக்காட்டிய தோடு ஸ்ரீலங்கா அரசு விரிவான விசாரணை நடத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தது. ஆனால் எதிர்பார்த்தது போல அதற்கு ஸ்ரீலங்கா அரசு செவிசாய்க்க மறுத்துவிட்டது.
பொப் றே மட்டுமே நாடுகடத்தப்பட்ட முதல் ஆள் அல்ல. இதற்கு முன்னரும் சனல் 4 தொலைக்காட்சிக்காக செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்தார்கள்.
“எனது நாடு கடத்தலில் இருந்து என்ன தெரிகிறது என்றால், இலங்கை பேசுவதற்குப் பயப்படுகிறது, விவாதிப்பதற்கு பயப்படுகிறது, சந்திப்புகளுக்குப் பயப்படுகிறது என்பனவே. அவர்களைப் பார்த்து வெட்கக்கேடு, அவமானம் என்று மட்டுமே என்னால் கூறமுடியும். என்னையே இவ்வாறு நடாத்தியுள்ளார்கள் என்றால், எதிர்த்துப் பேசமுடியாத, தமது கருத்துக்களை பொது அறிக்கைகளாக வெளியிட முடியாத அப்பாவி மக்களை அவர்கள் எவ்வாறு நடாத்தியிருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள், விளங்கும்” என பொப் றே பொரிந்து தள்ளியிருந்தார். தமிழ்க் கனடியர்களைப் பொறுத்தளவில் இது காலம் கடந்த ஞானம் ஆகும்.
மேலும் தன்னை வெறியேற்றியது ஸ்ரீலங்கா அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல் எனத் தெரிவித்தார். “என்னைப்பற்றி பொய்யான குறைபாடும் அவதூறும் பரப்பும் நோக்குடனேயே ஸ்ரீலங்கா அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் இந்த முடிவானது 30 ஆண்டு காலமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சமூக சேவை செய்யும் என்னைப்பற்றித் தப்பான அபிப்பிராயம் ஒன்றையும் பரப்பாது, மாறாக அவர்களின் சுய நடத்தையையே இது பிரதிபலிக்கப்போகிறது” எனப் பொப் றே சொன்னார்.
முட்டாளுக்கும் புத்திசாலிக்கும் என்ன வேற்றுமை? முட்டாள் நெருப்புச் சுடும் என்பதை கையை வைத்துத்தான் தெரிந்து கொள்கிறான். புத்திசாலி மற்றவர்களது பட்டறிவின் மூலம் நெருப்புச் சுடும் என்பதைத் தெரிந்து கொள்கிறான்.
பொப் றே இலங்கைக்குப் புதியவரல்ல. இலங்கை தொடர்பாக பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவர் தொடர்புபட்டிருந்தார். இலங்கை முழுதும் பயணம் செய்துள்ளார். அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார்.
அமைதிப் பேச்சுக் காலத்தில் கிளிநொச்சி சென்று விடுதலைப்புலிகளின் தலைவர்களைச் சந்தித்துள்ளார். அவர்கள் விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
இலங்கை சென்ற போதும் கனடாவிலும் இனச் சிக்கலுக்கு அமைதி வழியில் தீர்வு காண முயன்றவர். அதற்காக அனைத்து வகையான கருத்துகளைக் கொண்டவர்களையும் சந்தித்துள்ளார்.
அமைதிக் காலத்தில் வௌ;வேறு நாடுகளின் தலை நகரங்களில் நடந்த பேச்சு வார்த்தைகளின் போது பொப் றே தவறாது கலந்து கொண்டவர்.
கனடிய இணைப்பாட்சி அரசியல் முறைமை போன்ற ஒரு ஆட்சிமுறையை ஸ்ரீலங்காவிற்கு விற்பதற்கு கனடிய அரசு அமைதிப் பேச்சு இடம்பெற்ற காலத்தில் “குழசரஅ குநனநசயவழைn ” என்ற அமைப்பை உருவாக்கியது. அதன் முதல் தலைவராக பொப் றே நியமிக்கப்பட்டார்.
பொப் றே இணைப்பாட்சி அரசியல் முறைமையை அறிமுகப்படுத்த எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இராசபக்சே அரசு அதனை ஏறெடுத்துப் பார்க்க மறுத்தது.
ஸ்ரீலங்கா அரசு பொப் றேயை விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் எனக் கூறுவது “அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்ற கதை போன்றது.
பொப் றே தான் ஒரு வி.புலிகளது ஆதரவாளன் என்று எப்போதுமே சொல்லியது கிடையாது. அதை அவரே சொல்லியிருக்கிறார். இப்போதும் அதையே தன்னிலை விளக்கம் அளிக்கும் விதத்தில் சொல்கிறார்.
“விடுதலைப்புலிகளின் வன்முறை தந்திரோபாயங்கள் சரியானவை என ஒரு போதும் நான் கருதியதில்லை. பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற விவாதங்களில் கூட இதனைத் தெரிவித்துள்ளேன்.
இலங்கை இராணுவப் பேச்சாளர் கூறுவது போல நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் என்பது பொய். எனது கடந்த கால செயற்பாடுகள் நான் மிதவாத தமிழ் மற்றும் மாற்றுக் கருத்துகளுக்கு ஆதரவாக செயற்பட்டதைப் புலப்படுத்தும்.
விடுதலைப்புலிகளின் தந்திரோபாயங்களின் ஒரு பகுதியான மனித உரிமை மீறல்களை நான் தொடர்ச்சியாகக் கண்டித்து வந்துள்ளேன். கனடாவிலும், வெளிநாட்டிலும் தயக்கமின்றி கருத்துத் தெரிவித்து வந்துள்ளேன்.
முன்னாள் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இலட்சுமன் கதிர்காமர் மற்றும் சமாதான செயலகத்தைச் சேர்ந்த கேதீஸ் லோகநாதன் ஆகியோரின் நினைவு நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளேன். இருவரும் எனக்கு நெருக்கமான நண்பர்கள்.
எனது கண்ணோட்டம் பற்றி விளங்கிக் கொண்டபடியால்தான் ஸ்ரீலங்கா எனக்கு விசாவை முதலில் வழங்கியது. கொடுமை, தீவிரவாதம் என்பவற்றை எதிர்த்து எனது வாழ்நாள் முழுவதும் போராடிவிட்டேன். எனது செயல்கள், பேச்சுக்கள், அறிக்கைகள் யாவும் அனைவரின் பார்வைக்காகவும் உள்ளன” என்கிறார் பொப் றே.
ஸ்ரீலங்கா அரசு ஒரு “மக்களாட்சி முறைமைக்கு எடுத்துக்காட்டு” எனப் புகழாரம் சூட்டிய பொப் றேயை ஸ்ரீலங்கா ஏன் இப்படி அவமானப் படுத்தியது?
எல்லாம் “ஆறு கடக்கு மட்டும் அண்ணனும் தம்பியும் ஆறு கடந்தால், நீ யார்? நான் யார்” என்ற கதைதான்.
ஒரு காலத்தில் வி.புலிகளைத் தடை செய்யுமாறு ஸ்ரீலங்கா அரசு கனடா உட்பட பல நாடுகளைக் கெஞ்சிக் கூத்தாடிக் கேட்டுக்கொண்டது. இப்போது அந்தத் தேவையில்லை.
வி. புலிகளை ஒழித்து விட்டோம் என்ற மிதப்பில் ஸ்ரீலங்கா அரசு இருக்கிறது. இனிக் கனடா போன்ற நாடுகளின் உதவி தேவையில்லை. எனவேதான் ஸ்ரீலங்கா அரசு திமிரோடு நடந்து கொள்கிறது.
நிதியுதவிக்கும் மேற்கு நாடுகளிடம் கையேந்தும் நிலையில் இராசபக்சா அரசு இல்லை. கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுக்க சீனா, இரான், லிபியா, இந்தியா இருக்கின்றன. எனவேதான் இராசபக்சா அரசு கனடாவை வேண்டு மட்டும் அவமானப் படுத்துகிறது.
பொப் றே விமான நிலையத்தில் 12 மணித்தியாலம் தடுத்து நிறுத்தப்பட்டு ஒரு சாதாரண கிறிமினல் போல் விசாரணை நடத்திய பின்னர் நாடு கடத்தியதை கனடிய அரசு கண்டித்துள்ளது.
கண் கெட்டபின் ஞாயிறு வணக்கம் செய்து என்ன புண்ணியம்? படிச்சுப் படிச்சுச் சொன்னோம். இருந்தும் கனடா கேட்கவில்லை. தடியைக் கொடுத்து அடிவாங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் எனக் கூறி கனடா அதைத் தடை செய்ததன் மூலம் “இந்தப் போர் தமிழர்களுக்கு எதிரான போர் அல்ல பயங்கரவாதத்துக்கு எதிரான போர்” என்ற முகமூடியை ஸ்ரீலங்கா அணிந்து கொள்வதற்கு கனடா துணை போனது.
பொப் றே சரி கனடிய அரசு சரி ஸ்ரீலங்கா அரசின் சிங்கள – பவுத்த இனவாத கோர முகத்தைப் பார்க்கத் தவறிவிட்டன. ஸ்ரீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்ட அரச பயங்கரவாதத்தைக் கண்டு கொள்ள மறுத்துவிட்டன.
இலங்கையில் நடைபெற்றது ஒடுக்குகின்ற சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக ஒடுக்கப்படும் தமிழ்மக்களது ஆயுதப் போராட்டம் என்பதை மெத்தப் படித்த அரசியல்வாதி பொப் றே சரி, கனடா சரி புரிந்துகொள்ள மறுத்துவிட்டன.
வி.புலிகள் இயக்கத்துக்குப் பயங்கரவாத முத்திரை குத்திய மேற்குலக நாடுகளும் கண்டுகொள்ள மறுத்துவிட்டன.
வி.புலிகள் இயக்கம் சிங்கள – பவுத்த இனவெறி அரசு தமிழினத்துக்கு எதிராக மேற்கொண்ட இன,மொழி, பண்பாட்டு அழிப்புக்கு எதிராக ஆயுதம் தூக்கிய விடுதலை இயக்கம் என்பதை உலகம் உணர மறுத்துவிட்டது.
தமிழ்மக்களை வி.புலிகளின் பிடியில் இருந்து மீட்கவே இந்தப் போர் என்ற ஸ்ரீலங்காவின் பரப்புரையை அனைத்துலக சமூகம் நம்பி ஏமாந்து போய்விட்டது.
தமிழீழ நாட்டின் விடுதலைக்குத் தளபதிகளும் போராளிகளும் தமிழ்மக்களும் கொடுத்த விலை, கொட்டிய குருதி, சிந்திய கண்ணீர் வீண் போகக் கூடாது. தமிழீழ விடுதலைக்கான போராட்டம் வேறு வடிவில் வேறு தளத்தில் – நிலத்தில் இருந்து புலத்தில் – தொடர வேண்டும்.
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
One Comment on “என்னையே இவ்வாறு நடாத்தியுள்ளார்கள் என்றால்? – பொப் றேயின் காலம் கடந்த ஞானம்!”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!



Its time for removal of ban on LTTE. Canada should take the lead to remove the ban on LTTE who are the shield for Tamils. See what is happening now. Sri Lankan arm y destro yed LTTE members and imprisoned all tamils inside the camps and keep the rest of the tamils in an open prison in all over the country. Time to remove the ban and approve LTTE as s political party and approve their government in Exile.