நூற்றாண்டு கடந்தும் தொடர்கதையாகிவரும் எம் பிரிவு நிலை போக்கி: எமது போராட்டம், எமது தலைமை, எமது இயக்கம் எனும் ஒருமித்த கருத்தோடு எமது நாட்டை மீட்டெடுப்போம்.

சிறிலங்கா பேரினவாத அரசின் இனவாத போக்கின் வெளிப்பாடாக தோற்றம் பெற்ற தமிழர்களது விடுதலைப் போராட்டம் முற்று முழுதாக அழிக்கப்பட்டுவிட்டதாக சிங்களம் மார்தட்டி நிற்கின்றது.

பண்டைய தமிழ் மன்னர்களது வீரத்திற்கு சாட்சியாக முழு இலங்கையுமே தமிழர்களது ஆட்சியில் இருந்ததை வரலாற்று சான்றுகள் பகருகின்றன.

16ம் நூற்றான்டில் அந்நியர் வருகையை அடுத்து தமிழர்களிடம் இருந்து தாயகப்பகுதி மெல்ல மெல்ல பறிபோனது. முழு இலங்கையையும் ஆக்கிரமித்த அந்நியர்கள் தமது நிர்வாக வசதிக்கேற்ப பல்லின மக்கள், பல்வேறு அரசுகள் ஆட்சி புரிந்த இலங்கையை ஒன்றாக்கியிருந்தனர்.

1948ல் இலங்கையை விட்டு பிரித்தானியர்கள் வெளியேறும் போது அப்படியே ஓர் அலகாக விட்டு சென்றிருந்தனர். இனத்தால், மொழியால், பண்பாட்டால், கலாச்சாரத்தால் வேறுபட்டு தனித்துவமாக வாழ்ந்து வந்த தமிழர்கள் அன்றில் இருந்து தமது அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கும் இழந்த உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கும் போராட வேண்டியதாயிற்று.

ஆட்சி அதிகாரம் தமது கையில் கிடைத்த பின்னர் சிங்களவர்கள் தமது மொழியையும் மதத்தையும் நிலைநிறுத்துவதற்காக வெளிப்படையாகவே தமிழர்களை துன்புறுத்தத் தொடங்கினார்கள்.

இதன் விளைவாக 1956 முதல் தமிழர்கள், பல காலகட்டங்களில் சிங்கள ஆட்சியாளர்களால் வலிந்து ஏற்படுத்தப்பட்ட இனக்கலவரங்கள் மூலம் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டும் உயிரோடு எரியூட்டப்பட்டும் அவரக்ளது பல்லாயிரம் கோடி பெறுமதியான சொத்துக்கள் அழித்து தீக்கரையாக்கப்பட்டும் இருந்தது.

இந்நிலையில், சமகாலத்தில் இந்தியாவில் அகிம்சை வழியில் போராட்டம் நடாத்தி இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு வகையில் காரணமாக இருந்த மகாத்மா காந்தி அவர்களது புகழ் உலகெங்கும் பரவியிருந்தது. அதன் தாக்கத்தால் எமது தமிழர் தரப்பும் அறவழியில் போராட்டங்களை சிங்கள இனவாத ஆட்சியாளர்களுக்கு எதிராக மேற்கொண்டிருந்தனர்.

இங்கே நாங்கள் ஒன்றை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி அவர்கள், பொருளீட்டும் நோக்கோடு கால்பதித்து பரந்திருந்த வெள்ளையர்களுக்கு எதிராகவே அறவழியில் போராடியிருந்தார். ஆனால் எமது தலைவர்கள், இனத்தையே அழித்து அடிமைப்படுத்த நினைக்கும் வந்தேறு குடிகளான சிங்கள பேரினவாத அரசிற்கெதிராகத்தான் போராடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை விட்டு வெள்ளையர்கள் வெளியேறியதற்கு முழு முதற் காரணமாக மகாத்மா காந்தியின் அறவழிப்போராட்டங்கள் அமைந்துவிடவில்லை.

அந்நிய ஆதிக்கத்தை அடியோடு நிராகரித்து தன்மான உணர்வுடன் தனித்தனியாக களம் கண்டு தமது எதிர்ப்பினை காட்டிய இளைஞர்களது ஆக்ரோசம் நிறைந்த போராட்டமும் ஒருவகையில் காரணமாக அமைந்தது எனலாம்.

இறுதியில் தென்ஆசிய பிராந்தியத்தில் உள்ள வளங்கள் அனைத்தையும் சுரண்டி தமது தாயகத்தை வளப்படுத்தி போதும் போதும் என்ற நிலை ஏற்பட்டவுடனயே தமது ஆளுகைக்குள் இருந்த நாடுகளை விடுவித்து சென்றிருந்தது பிரித்தானிய ஏகாதிபத்தியம்.

இந்த உண்மை எமது தமிழர் தரப்பிற்கு புரிவதற்கு மூன்று தசாப்தங்கள் தேவைப்பட்டது. அறவழியில் போராடிய எமது தலைமைக்கு உயிரிழப்பும், அடி உதையும் அவமரியாதையும்தான் சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து பரிசாகக் கிடைக்கப்பெற்றது.

இறுதியில் அறவழியில் போராட்டங்களை தலைமையேற்று நடாத்திய தந்தை செல்வா அவர்கள் கடவுளால்தான் இனி தமிழினத்தை காப்பாற்ற முடியும் எனக் கூறி விடைபெற்றார்.

அறவழியில் முயன்றும் முடியாது என்ற நிலையில்தான் துடிப்புமிக்க இளைஞர்கள் தமது பருவத்திற்கே உரித்தான வேகத்துடன் திருப்பி அடிப்பதுதான் ஒரேவழி என தீர்மாணித்து களமிறங்கினார்கள்.

பல்வேறு கட்டங்களை கடந்து சமகால, முன்னைய விடுதலை இயக்கங்களிற்கெல்லாம் முன்மாதிரியாக திகழ்ந்து முப்படை கட்டமைப்புடன் நடைமுறை அரசை நிறுவி தமிழ் மக்களின் அரணாக விளங்கி வந்தது, தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு.

உலகமே மெச்சும் நல்லாட்சி புரிந்த தமிழீழ விடுதலைப்புலிகளது அபரிமிதமான வளர்ச்சிப் போக்கும் திறனுமே அவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் பாதகமாக அமைந்தது எனலாம். அதிலும் எந்த ஒரு நாட்டினதும் ஆதரவின்றி மக்களது ஆதரவுத்தளத்தில் நின்றே அசூர வளர்ச்சி கண்டு பல அரிய போரியல் சாதனைகளை படைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது போரியல் திறனை வளர்த்து கொண்ட விடுதலைப்பலிகள் சர்வதேச இராசதந்திரத்தை கையாள்வதில் தோற்றுப்போனமையே இன்றைய நிலைக்கு காரணமாகும்.

‘தேசத்தின் குரல்’ அன்டன் பாலசிங்கம் அண்ணா இருந்தவரை அதற்கு குறைவில்லாது சர்வதேச களத்திலே பணியாற்றிக் கொண்டுதான் இருந்தார். இருப்பினும் அவரது காலத்திற்கு பின்னரான காலப்பகுதியில் அந்த இடத்திற்கு தகுந்த ஒருவரை தயார்படுத்தாதன் விளைவே தற்போதைய கையறு நிலைக்கு காரணமாக அமைந்துவிட்டது.

எல்லாவற்றையும் முன் உணர்ந்த தேசியத்தலைவர் இதனை உணராமல் இருந்திருப்பார் என்பதற்கில்லை.

இந்நிலைக்கு புலம் பெயர் நாடுகளில் வசித்துவரும் மக்களாகிய எமது செயற்பாடும் ஒருவகையில் காரணமாகும். விடுதலைக்கான முழுப்பணியையும் தலைவர் மீதும் போராளிகள் மீதும் சுமத்திவிட்டு நாம் உண்டு நமது பணியுண்டு என ஒதுங்கியிருந்து விட்டமைதான் தவறாகும்.

மிஞ்சிபோனால் எப்போதாவது இருந்து விட்டு வீரவணக்க கூட்டம் கண்டன ஒன்று கூடல் என ஒன்று சேர்ந்து பத்தோடு பதினொன்றாக குரல் எழுப்பிவிட்டு கலைந்துவிடுவோம்.

நடந்தவற்றை குறிப்பிட்டு சொல்வதில் சங்கடம் இருக்கத்தான் செய்யும். ஆனால் தவிர்க்க முடியாத காலகட்டத்தில் கூட இன்னும் எமது மக்கள் தூங்கிக் கொண்டிருப்பதால் தான் அதனை மீண்டும் மீண்டும் கூறவேண்டியுள்ளது.
இன்று பொழுது புலர்ந்து கரைவதற்குள் ஆயிரமாயிரம் எமது உறவுகள் சிங்களப்படையினரால் கொன்று குவிக்கப்பட்டு இரசாயண துகள்களை வீசி தடயமே இல்லாது செய்த பின்னரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் குறிப்பிட்ட சிலருக்காக கடந்து வந்த பாதையை திரும்பவும் மீட்டிப்பார்க்க வேண்டியது அவசியமாகின்றது.

மூன்று தசாப்த அகிம்சை போராட்டத்தின் மூலமும் மூன்று தசாப்தத்திற்கு மேற்பட்ட ஆயுத போராட்டத்தின் மூலமூம் சாதிக்கமுடியாத எட்டமுடியாத உயரத்தை எமது மக்கள் இறுதி களமுனையில் சிந்திய இரத்தினால் எட்டியுள்ளோம் என்ற வலிசுமந்த உண்மைநிலையை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

முன்பொரு காலம் இருந்தது, உலக அரியாசனத்திற்கான போட்டி நிலவிய காலத்தில் ஏதாவது ஒருதரப்பு ஆசீர்வாதம் இருந்தால் எதுவேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற நிலை இருந்தது. அதன் விளைவாக இருபதிற்கு மேற்பட்ட புதிய, புதிய நாடுகள் தோற்றம் பெற்றன.

எமது போராட்டம் வீரியம் அடைந்து அனைத்துலக கவனம் பெறும் போது அவ்வாறான களநிலை இல்லாது போனது தூரதிட்டவசமானது ஆகும்.

இதுவரை தமிழீழ தேசியத்தலைவரது வழிகாட்டுதலில் களமாடி நிகழ்த்தப்பட்ட போரியல் சாதனைகளின் அடித்தளத்தில்தான் சில நாடுகள் ஒப்பிற்காகவேனும் எமது விடுதலைப் போராட்டத்திற்கு அங்கீகாரம் வழங்க முன்வந்திருந்தது.

இதேவேளை புலம் பெயர்வாழ் மக்களாகிய நாம் விளிப்புடன் செயற்பட்டுவந்திருந்தால் அந்த தற்காலிக ஆதரவுத்தளத்தினைதானும் நிரந்தரமானதாக்கியிருக்க முடியும்.
இருந்தும் மீண்டும் ஒரு அரிய சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. அறவழியிலும், ஆயுதவழியிலும் போராடி கிடைக்காத அங்கீகாரம், ஆதரவு ஆயிரம் ஆயிரம் உறவுகள் சிந்திய இரத்தத்தின் அடித்தளத்தில் உருவாக்கியுள்ளது இந்த சர்வதேச ஆதரவுதளத்தை கெட்டியாக பிடித்து கொண்டு தமிழீழ தேசியத்திற்கான வெற்றிப்பயணத்தை தொடங்குவோம்.

சிறிலங்கா அரசும் அதன் படைகளும் பாதுகாப்பு வலயமான முள்ளிவாய்க்கால் களமுணையில் அரங்கேற்றிய இனப்படுகொலை பற்றிய விசாரணை நடத்தலாமா அல்லது வேண்டாமா என அய்க்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சுவாரசியமான விவாதம் பல தடவைகள் நடைபெற்று முடிந்துள்ளது.

அதன் முடிவு சாதகமாக அமையவில்லை என்றாலும் சிறிலங்கா அரசிற்கு எதிராக களத்தில் அணிவகுத்து நிற்கும் நாடுகளையும் அவற்றின் உலக பங்களிப்பு பற்றியும் நோக்குவது அவசியமாகும்.

உலக வல்லரசான அமெரிக்கா, அதன் தோழமை நாடான பிரித்தானியா மற்றும் பிரான்சு உள்ளிட்ட பெரும்பாலான அய்ரோப்பிய நாடுகளும் சிறிலங்கா அரசிற்கு எதிரான களத்தில் அணிவகுத்துள்ளமை சாதகமான நிலைப்பாடாகும்.

இவர்கள் தற்போது வாக்கெடுப்பில் மாத்திரம் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால் அனைத்து விடயங்களிலும் செல்வாக்கு செலுத்தும் வல்லமை கொண்ட வல்லரசு நாடுகளாகும்.

சிறிலங்கா அரசினதும் அதன் பின்நின்று செயற்பட்டுவரும் நாடுகளதும் அட்டூழியங்களை ஒரு கட்டத்திற்கு மேல் இவ்வல்லரசு நாடுகள் வேடிக்கை பார்க்கமாட்டாது என்பதற்கான முதற்படியாகவே அதனை எடுத்து கொள்ளவேண்டும்.
இவ்வல்லரசு நாடுகள் திருப்திப்படும் அளவிற்கு சிறிலங்கா அரசால் தமிழர்களுக்கு உருப்படியான எதுவும் செய்துவிட முடியாது. அவ்வாறு செய்வது என்றால் கூட அதனை இயக்கும் பௌத்த பேரினவாத சக்திகள் அனுமதிக்கப்போவதில்லை என்பதே நிதர்சனம்.
விரும்பியோ விரும்பாமலோ சிறிலங்காவினது செயற்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டின் காரணமாக ஒன்று திரண்டுள்ள சர்வதேச வல்லாதிக்க நாடுகளை தொடர்ச்சியாக அதே நிலையில் தக்கவைத்திருப்பதுடன் எமது விடுதலைப் போராட்டத்தினையும் அதனை முன்னெடுத்துச் செல்லும்தமிழீழ விடுதலைப்புலிகளையும் ஏற்று தமிழீழ தனிஅரசை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு கொண்டுவருவதே இன்றைய முதன்மையான பணியாகும்.
இவ்விடத்தில், 5000வருட சரித்திரம் கொண்ட யூதர்கள் நாடிழந்து நூற்றாண்டுகளாக பூமிப்பந்தெங்கும் அகதிகளாக பரந்திருந்தும் எவ்வாறு இசுரேல் எனும் நாட்டை நிர்மாணித்தார்கள் என்பதை மீட்டுப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
யூதர்கள் நாடிழந்து அகதிகளாக பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த போதிலும் தமது மொழி அடையாளத்தையும் கலை, கலாச்சார பண்பாட்டு அடையாளங்களையும் போற்றிப்பாதுகாத்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தாம் வாழ்ந்து வந்த நாடுகளில் தமது தனித்துவத்தை பேணிபாதுகாக்க முடிந்தது. எல்லாவற்றையும் விட தமது முன்னோர் அனுபவித்த கொடுமைகளை வலிகள் நிறைந்த நினைவுகளாக அடுத்தடுத்த தலைமுறைக்கு உணர்த்திவந்தனர்.
இச்செயற்பாட்டின் மூலம் தலைமுறை இடைவெளி தாண்டியும் இறுதிவரை உணர்வு மிக்கவர்களாகவும், தமக்கான தாயக்தை அடையும் வெறியுடனும் இருக்க முடிந்தது.
தலைமுறை தலைமுறையாக பிற நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்கள் தமது பொருளாதார வளத்தை பெருக்கிக் கொண்டதோடில்லாது அந்தந்த நாட்டின் வளர்ச்சியில் தவிர்க்க முடியாத இடத்தினை ஏற்படுத்திக் கொண்டிடுந்தனர்.
பொருளாதார வளத்தினை அடிப்படையாக்கி அரசியலிலும், அதிகாரத்திலும் இடம் பெற்றதன் மூலம் தமக்கான அங்கீகாரத்தினை இலகுவாக உலக அரங்கில் யூதர்களால் பெறமுடிந்தது.

ஆனால் நாம் எப்படி இருக்கின்றோம் என்பதனை வேதனையோடு திரும்பிப்பார்க்க வேண்டியுள்ளது. அன்னிய மொழி, கலாச்சார மோகம் பிடித்து எமது பண்பாடு, கலாச்சாரங்களை தொலைத்துவிட்டு விட்டேறிகளாக இருப்பவர்கள்தான் நம்மத்தியில் அதிகம்.

ஒத்துவராத காலநிலை, ஓய்வற்ற பணிச்சுமை என்பவற்றுக்கிடையில் நாம் இதற்கும் நேரம் ஒதுக்கி செயற்பட்டிருக்க வேண்டும்.

கூடுதலாக முதல் தலைமுறையினரே பெரும்பாலும் எல்லாச்சுமைகளையும் தாங்கிக் கொண்டு செயற்பட்டு வந்தாலும், எமக்கான நாடு ஒன்று அமைய வேண்டுமென்று ஆவல், விருப்பு இருப்பினும் அதனை இறுதி செய்து கொள்வதற்கு ஏற்றவாறான பங்களிப்பினை முழுமையாக இன்னும் ஆற்றவில்லை என்பதே உண்மை நிலையாகும்.
இதுவரை காலமும் விடுதலைப்புலிகளது போரியல் வெற்றிகளை கொண்டாடி மகிழ்வுற்றதுடன் எமது பணிகளை வரையறை செய்து முடங்கிப் போயிருந்ததன் விளைவே, ஒரு இலட்சத்து அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் சிக்கித்தவித்தபோதும், இராணுவத் தாக்குதலினால் காயமடைந்த நிலையில் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களும் மூவாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளும் இருப்பதாகவும் அவர்களை காப்பாற்றுமாறு கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அண்ணா அவர்கள் கெஞ்சிக்கதறிய போதும் எதுவுமே செய்யமுடியாதவர்களாய் வேடிக்கைபார்த்து கொண்டிருக்கும் நிலைக்கு காரணமாகும்.
இன்றும் கூட அய்ரோப்பிய நாடுகளின் முக்கிய நகரங்கள், வீதிகள் என்று அனைத்து இடங்களிலும் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்ற போதும் தினமும் செத்து செத்து பிழைக்கும் வதைமுகாம்களில் இருக்கும் நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட உறவுகளை காப்பாற்ற முடியாதவர்களாகவே நாம் உள்ளோம்.
களத்திலாகட்டும் புலத்திலாகட்டும் போராட்டக்களை முன்னெடுப்பதற்கும் ஆதரவு வழங்குவதற்கும் குறிப்பிட்டவர்களே விதிக்கப்பட்டவர்களாக செயற்பட்டுவருவதும் ஏனையவர்கள் ஒதுங்கி இருந்து தத்தமது பணிகளை செய்வதும் வழமையாகிவிட்டது.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை கட்டிக்காத்து உறுதுணையாக இருந்து காவல் தெய்வங்களிற்கே காவலாக இருந்தது வன்னி மக்கள்தான். அதற்காக ஏனைய மாவட்ட மக்களது பங்களிப்பினை சிறுமைப்படுத்துவதாக அர்த்தமில்லை. எவ்வளவுதான் உதவிகள் செய்தாலும் காட்டிலும் மேட்டிலுமாக, மழையிலும் பனியிலும் வெயிலிலுமாக போராளிகள், தளபதிகளுக்கு உறுதுணையாக இருந்து போராட்டத்தை தாங்கி நின்றவர்கள் வன்னி மக்கள்தான் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

ஒரு கட்டத்தில் ஏனைய மாவட்டங்களுடனான தரைவழி தொடர்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட சூழ்நிலையில் முழுமையான ஆதரவினையும், பங்களிப்பினையும் ஆற்றிவந்ததுடன் படைபலத்தில் தொய்வு நிலை ஏற்பட்ட போதெல்லாம் அதனை மீள்நிரப்புகை செய்து உறுதிகுறையாது விடுதலைப் போராட்டத்ததை முன்னெடுக்க உதவி புரிந்தவர்களும் இந்த வன்னிமக்கள்தான்.

ஆனால் சமகாலத்தில் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலனவர்கள் போராட்டத்திற்கும் தமக்கும் சம்பந்தமே இல்லாதது போன்று பாவனை காண்பித்து அடுக்குமாடி வீடுகளை கட்டி ஆனந்த வாழ்வு வாழ்ந்து வந்தனர் என்பதுதான் வேதனையான விடயம்.

நாம் எல்லோருமாக சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் விடுதலைப் போராட்டத்தை பொத்தி பொத்தி வளர்த்து விட்டார்கள். அதற்காக இன்று அவர்களுக்கு கிடைத்திருக்கும் பரிசுதான் சுற்றிவர முடகம்பி வேலிகளால் சூழப்பட்ட சிங்கள இராணுவத்தின் இரும்பு பிடிக்குள் சிக்கித்தவிக்கும் அவல வாழ்க்கை.
இதே நிலைதான் புலத்திலும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றது. எவ்வகையான போராட்டம் என்றாலும் குறிப்பிட்டவர்களே விதிக்கப்பட்டவர்களாக செயற்படும் நிலை. இன்று ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களை தொடர் முற்றுகை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்த போது கூட சில ஆயிரக்கணக்கிலானவர்களை திரட்டுவது என்பதே குதிரைகொம்பாக அமைந்துவிட்டது.

இலட்சக்கணக்கில் எமது மக்கள் வாழ்ந்து வரும் நாடுகளில் கூட சில ஆயிரம் பேரை வீதியில் ஒன்று சேர்ப்பது பெரும் சவாலக உள்ளமை எமது மக்கள் எவ்வளவு தூரம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

மக்கள் தாமாக உணர்ந்து கொண்டு குடும்பம் குடும்பமாக களத்தில் இறங்கி போராடவேண்டிய இக்கட்டான தருணம் இது. அனைவரும் வீதிகளில் இறங்குவோம், வீதிகளே குடியிருப்பாய் ஆனாலும் பரவாயில்லை இறுதி முடிவு கிடைக்கப்பெறும் வரை எல்லோரும் ஒன்றுபட்டு போராடுவோம்.

புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் எமது உறவுகளே…! குறை சொல்வதாக நினைக்காது அவற்றை சீர்படுத்தி இனியாவது எமது போராட்டம், எமது தலைமை, எமது இயக்கம், எமது நாடு, அதனை கட்டிக்காத்து மீட்டெடுக்க வேண்டியது எமது ஒவ்வாருவருடைய தலையாய பணியாகும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

எமது ஒற்றுமையும் தேசிய உணர்வும் எந்நிலையில் உள்ளது என்பதை நீங்களே அண்மையில் நடைபெற்று முடிந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் தேர்விற்கான தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளதால் தான் மீண்டும் மீண்டும் எமது பிரிவு நிலையை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழ் வாக்குவங்கியை கொண்டிருக்கும் லண்டனில் இருந்து எம் இனத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியை அனுப்பும் அரிய சந்தர்ப்பத்தை கைநழுவவிட்டு நிற்கின்றோம்.

ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் வாக்குகள் பெற்றால் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தலாம் என்ற நிலையில் வெறும் ஐம்பதாயிரம் வாக்குகளை பெற்று தோல்வி அடைந்திருந்தார் எமது வேட்பாளர்.

உலக அதிகார மன்றங்களில் எமக்கான பிரதிநிதித்துவமோ, ஆதரவானவர்களோ இல்லாததன் விளைவாகவே சிங்களவன் செய்யும் கொலை வெறியாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது வெறும் ஆர்ப்பாட்டங்களையும் கண்டன ஒன்று கூடல்களையும் நடாத்திக்கொண்டிருக்கின்றோம்.

“நாம் ஒன்றினையவில்லை. நாம் பிரிந்து நிற்கின்றோம். மறுபடியும் ஒற்றுமையை ஏற்படுத்துவது மிகக்கடினம். ஒற்றுமை இன்மை காரணமாக ஏற்பட்ட அழிவின் பாதிப்புக்களால் நாம் வருந்துகின்றோம். ஒரு காலம் பெருமையுடன் நாம் ஆண்ட நாட்டை அந்நியருக்கு விட்டுக்கொடுத்து விட்டோம். எமது நாட்டின் பிரச்சினைகளை எமது மக்கள் ஒன்று கூடி கலந்துரையாடுவது கிடையாது. எமது சுதந்திரங்கள் யாவற்றையும் சரணளித்துவிட்டு சித்த சுவாதீனம் இழந்தவராய் நிற்கின்றோம்” இவ்வாறு 20ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ‘இந்து சாதனம்’ எனும் நாளேட்டில் வெளிவந்த கட்டுரையின் ஒருபகுதி விபரிக்கின்றது.
மக்களே சிந்தித்து பாருங்கள்! நாம் பிரிந்து நின்றததன் விளைவாக நூறாண்டிற்கு முன்பே எமது உரிமைகளை இழந்துவிட்டோம். அதே நிலை நூற்றாண்டு கடந்தும் இன்றும் தொடர்வதுதான் எமது இனத்தின் விடியல் தொலை தூரத்திற்கு சென்று கொண்டிருக்கின்றது.

1945,ஏப்ரல் 30 அன்று கிட்லர் தற்கொலை செய்து கொண்ட மணித்துளியோடு, கொல்ப்பட்ட இருபது இலட்சத்திற்கு மேற்பட்ட யூதர்களது சாவின் அடித்தளத்தில் நின்று மூன்றே ஆண்டுகளில் தமக்கான தேசத்தை உலக வல்லரசு நாடுகளது ஆதரவுடன் அமைத்து கொண்டனர் யூதர்கள்.

ஆம் 1948, மே14ம் திகதி பிரிட்டன் படைகள் பாலசுத்தீனத்தை விட்டு முழுவதுமாக அகன்ற மறு நொடி இசுரேல் என்ற சுதந்திர நாடு உதயமாகியது.

அன்றும், எமக்கு எதிரான அணியில் நின்ற இந்தியா, பாகிசுத்தான், மத்திய கிழக்கு நாடுகள் என்பன இசுரேலுக்கு எதிராக வாக்களித்திருந்தும் உலக வல்லரசுகளான அமெரிக்கா, ருசியா, பிரிட்டன் ஆகிய நாடுகளது ஆதரவை பெற்றிருந்தமையால் முப்பத்து மூன்று ஆதரவு வாக்குகள் பெற்று தனி நாட்டிற்கான அங்கீகாரத்தினை பெற்றுக் கொண்டனர் யூதரர்கள்.

யூதர்கள் தாம் வாழ்ந்து வந்த நாடுகளில் ஒற்றுமையாக சமூகக் கட்டமைப்போடு வாழ்ந்து வந்ததுடன் தமக்கான ஆதரவுத்தளத்தினை உருவாக்கிக் கொண்டதனால்தான் பிராந்திய தேசங்களான மத்திய கிழக்கு நாடுகளது ஒத்தழைப்பு இன்றியே தமது தாயகத்தை அடைவது சாத்தியமாயிற்று.

யூதர்களுக்கு நிகராக நாமும் பொருளாதார வளத்தில் உயர்ந்து நிற்கின்றபோதும் அவற்றை சரியான முறையில் ஒருங்கினைத்து எமது பலத்தை தக்கவைத்துக் கொள்ள தவறிவிட்டோம். ஒவ்வொருவரும் தற்புகழ்ச்சிக்காக தாம்வாழ்ந்துவரும் தேசங்களில் சொத்துக்களை சேர்த்தார்களே தவிர யாரும் முதலீடுகளாக மாற்ற முன்வரவில்லை.
பெயரிற்கும் புகழுக்குமாக கடினப்பட்டு உழைக்கும் பணத்தை செலவழித்து வீடுகளையும் வாகனங்களையும் இதர ஆடம்பர பொருட்களையும் வாங்கி சேர்த்து வந்தனர் சிலர்.

இவ்வாறு சேர்க்கும் சொத்துக்களை அனுபவிப்பதற்கு யாரும் இல்லை என்பதுதான் கொடுமையான விடயம். வாங்கிய வீட்டிற்கு இருபது இருபத்தைந்து வருடங்களிற்கு தவணைகட்டணங்கள் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தினால் ஓய்வின்றி உழதை;தே ஆக்வேண்டும்.

30,40 வயதில் இவ்வாறு சொத்துக்களை சேர்க்கும் இவர்கள் 50,60 வயதில்தான் அவற்றிற்கு உரிமை கொண்டாட முடியும். அதன் பிறகு இருந்துதான் அனுபவிக்க முடியுமா அல்லது அதற்கான சூழ்நிலைகள்தான் இருக்குமா என்பதை இவர்கள் சிந்தித்து பார்ப்பதில்லை.

தனித்தனியே சிதறுண்டு போகும் கோடிக்கணக்கிலான பணத்தை மதிப்பு மிக்க முதலீடுகளாக மாற்றியிருந்திருப்போமானால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
எமக்கு கிடைத்த அடையாளமும் அங்கீகாரமும் எமது தலைவராலும், அவரது வழிகாட்டுதலில் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தினாலும் தான் சாத்தியப்பட்டுள்ளது. அந்த அங்கீகாரத்தினை அடியொற்றி நிரந்தர ஆதரவு தளத்தை ஏற்படுத்துவதற்கு இனியாவது நாம் சிந்தித்து செயற்படுவோம்.

அனைத்துலக நாடுகளாலும், உலக மகாமன்றமான அய்க்கிய நாடுகள் சபையினாலும் கைவிடப்பட்டு நம்பிக்கை மோசடி செய்யப்பட்டுள்ள இந்நிலையை சவாலாக எடுத்துக்கொண்டு விரைந்து செயற்படுவோம்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! என்பதை மனதில் நிறுத்தி வேற்றுமைகளை களைந்து தமிழீழ தனி அரசுக்கான பயணத்தை விரைவுபடுத்துவோம்.

எவ்வாறு யூதர்கள் நூற்றாண்டுகள் கடந்தும் தமது தாயகக் கனவை நெஞ்சில் நிறுத்தி ஓர்மத்துடன் போராடி மூன்றே வருடங்களில் தமக்கான தேசத்தை அடைந்தார்களோ அதனைவிட வேகமாக எம்மால் மீண்டுவர முடியும் என, தமிழீழ தாயக்கனவை சுமந்து களமாடி வீரமரணம் அடைந்த எம் அக்கினி குஞ்சுகளான மாவீரர்களதும், பொதுமக்களதும் கல்லறைகளின் மீது கைவைத்து சபதம் ஏற்போம்.
நூற்றாண்டு கடந்தும் தொடர்கதையாகிவரும் எம் பிரிவு நிலை போக்கி: எமது போராட்டம், எமது தலைமை, எமது இயக்கம் எனும் ஒருமித்த கருத்தோடு எமது நாட்டை மீட்டெடுப்போம்.

‘நான் பெரிது நீ பெரிது என்று கருதாது நாடு பெரிதென்று கருதி செயற்பட வேண்டும்’ என்ற எமது தேசியத்தலைவரது சிந்தனையை நெஞ்சில் நிறுத்தி ஓய்வின்றி களமாடுவோம், தமிழீழம் காண்போம்.

‘தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்’

- இரா.மயூதரன் -

Tell a Friend
நெருடல் நிர்வாகத்தின் ஓர் அன்பான வேண்டுகோள்
 
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.
 

நன்றி

கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

3 Comments on “நூற்றாண்டு கடந்தும் தொடர்கதையாகிவரும் எம் பிரிவு நிலை போக்கி: எமது போராட்டம், எமது தலைமை, எமது இயக்கம் எனும் ஒருமித்த கருத்தோடு எமது நாட்டை மீட்டெடுப்போம்.”

  • Siva wrote on 27 June, 2009, 9:19

    வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! பொங்கும் தமிழ்! புதுமை தமிழ்! சங்க தமிழ்! சமத்துவ தமிழ்! வண்ண தமிழ்! செழுமை தமிழ்! செந்தமிழ்!

  • ந.அரவிந்தன் wrote on 29 June, 2009, 1:46

    காலத்திற்குத் தேவையான புலம்பெயர்ந்த மக்களுக்குகு தமிழ் மக்களிற்கு தெளிவையும் தமிழீழ விடுதலைக்கான வழிகாட்டுதலையும் பெற்றுத் தந்திருக்கும் தங்களின் கட்டுரைக்குகு நன்றி

  • arunrangarajan wrote on 30 June, 2009, 17:35

    வணக்கம் கடந்த வாரம் கிரீன்லாந்து என்ற நாடு உருவாகி உள்ளது .வெறும் 57,000 மக்கள் தொகை கொண்ட நாடு உருவாக முடயும் என்றால் நம் தமிழீழம் ஏன் அமையாது நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும் .அதற்கு நாம் மிக தீவிரமாக போராட வேண்டும் .மிகுந்த ராஜதண்டிரதொடு போராடி நாம் சிங்களனை வெல்ல வேண்டும்.நான் தமிழ்நாடில் இருந்து சொல்கிறேன் தயவு செய்து நாம் ஒன்று கூடி போரடுவோஅம் .

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Spam Protection by WP-SpamFree

Copyright © 2010 நெருடல். All rights reserved.